முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » லாவோ - தசு (கி.மு.400)
லாவோ - தசு (கி.மு.400)
சீனாவில் ஏற்பட்டுள்ள பல்லாயிரம் நூல்களில், அந்த நாட்டுக்கு வெளியே மிகப் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெருமளவுக்குப் படிக்கப்பட்டு வரும் ஒரு நூல், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட "லாவோ - தசு" அல்லது "தாவ்-தே-சிங்" என்ற ஒரு சிறிய நூலாகும். "விழுமிய நெறியும் அதன் ஆன்மிக ஆற்றலும்" என்று பொருள்படும் வேத நூல் எனலாம். இது தாவ் நெறியின் தத்துவங்களை விளக்கிக் கூறுகிறது.
இது மறை நுட்பம் வாய்ந்த ஓர் அரிய நூல். வியக்கத்தக்கதொரு மறை புதிரான நடையில் இது எழுதப்பட்டுள்ளது. அதனால், பல்வேறு பொருள்கோளுக்கு இடமளிக்கிறது. இதன் மையக் கருத்து "தாவ்" பற்றியதாகும். "தாவ்" என்பதற்கு "நெறி" அல்லது "சாலை" என்று மொழி பெயர்த்துள்ளனர். ஆனால், அது பற்றிய கோட்பாடு தெளிவற்றதாக இருக்கிறது. ஏனெனில் "தாவ்-தே-சிங்" நூல் கூட இவ்வாறு தான் தொடங்குகிறது. "தாவ்" என்பது நிலைபேறுடைய பெயர் அன்று. எனவே, தாவ் என்பதற்கு ஏறத்தாழ "இயற்கை" அல்லது "இயற்கை நெறி" என்று பொருள் சொல்லலாம்.
தாவுக்கு எதிராகத் தனிநபர்கள் போராடக்கூடாது என்றும் அதற்கு அடிபணிந்து, அதற்காகப் பணி புரிய வேண்டும் என்றும் தாவ் நெறி கூறுகிறது. அறிவிலியாகவும், அற்பமானவராகவும் இருப்பதை விட, அதிகாரத்தைப் பெறுவதற்கு அல்லது செலுத்துவதற்குத் தீவிரமாக ஆசைப்படுவது அப்படியொன்றும் நெறி கெட்ட செயலன்று. தாவைத் தோற்கடிக்க முடியாது. மாறாக, தாவுடன் இணங்கி வாழ்வதற்கு முயல வேண்டும். ("தண்ணீர் மிக மிக மென்மையானது. அது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், மிகத் தாழ்ந்த இடங்களிலும் போய்ப் பாய்கிறது. மிக அற்பமான இயற்கை ஆற்றலுக்குக் கூட எதிர்ப்பின்றிப் பணிகிறது. எனவே தான், நீர் அழிக்க முடியாமல் நிலைபேறுடையதாக விளங்குகிறது. அதே சமயம், மிகக் கடினமாக இருக்கும் பாறைகள் நாளடைவில் நலிந்து, சிதைந்து, சிதறிப் போகின்றன" என்பது தாவ் நெறியாளர்கள் வாதம்)
ஒரு தனி மனிதனுக்கு எளிமையும், இயற் குணமும் பெரும்பாலும் ஏற்புடையவை. வன்முறையைத் தவிர்க்க வேண்டும். பணத்துக்காக அல்லது புகழுக்காகப் பாடுபடுவதை விட்டு விட வேண்டும். உலகைச் சீர்திருத்த ஒருவர் முயலலாகாது. மாறாக, உலகை மதிக்க வேண்டும். அரசுகளைப் பொறுத்தவரையில், ஒரு வகைச் செயல் திறமற்ற கொள்கை தான் விவேகமானது. ஏற்கெனவே இருக்கும் சட்டங்களே மிக அதிகம். மேன்மேலும் புதிய சட்டங்களை இயற்றுவது அல்லது பழைய சட்டங்களைக் கடுமையாகச் செயற்படுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். அதிக வரிகள், அரசின் தீவிரத் திட்டங்கள், போரிடுதல் ஆகிய அனைத்தும் தாவ் நெறியின் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானவை.
சீனாவில் வழங்கும் வழிவழிச் செய்தியின் படி, தாவ்-தே-சிங் நூலை எழுதியவர் லாவோ - தசு என்பவர். இவர் பண்டையச் சீன மெய் விளக்கவியலறிஞரான கன்ஃபூசியஸ் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். இந்நூலின் நடையும், உள்ளடக்கமும், அத்துணை தொன்மைக் காலத்தில் இது எழுதப்பட்டது என்பதை இக்கால அறிஞர்கள் நம்பும்படியாக இல்லை. இந்நூல் எழுதப்பட்ட காலம் குறித்து இப்பொழுது வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. ("தாவ்-தே-சிங்" நூலில் அதன் ஆசிரியர் அது எழுதப்பட்ட காலம், அது தோன்றிய தற்கால வரலாற்று நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடும் அகச் சான்றிதழ்கள் ஏதுமில்லை). எனினும், அவர் கி.மு. 320 இல் வாழ்ந்தார் என்பது ஓரளவுக்குகச் சரியான மதிப்பீடாக இருக்கும்.
இதனால், காலங்கள் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது. லாவோ - தசு என்று ஒருவர் இருந்தாரா என்றுகூட ஐயம் எழுப்பப்படுகிறது. லாவோ - தசு கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்ற செவி வழிச் செய்தியைச் சில அறிஞர்கள் நம்புகின்றனர். அதனால், அவர் தாவ்-தே-சிங் நூலை எழுதியிருக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், மற்ற அறிஞர்கள், இவர் ஒரு புராணக் கதை மாந்தரே எனக் கருதுகின்றனர். (1) லாவோ - தசு என்பவர் உண்மையில் உயிர் வாழ்ந்தவர் தான்; தாவ்-தே-சிங் நூலை அவர் தான் எழுதினார். (2) அவர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். (3) லாவோ - தசு கன்ஃபூசியஸ் காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர் என்பது கற்பனை. இந்த நூலுக்கும் அதன் ஆசிரியருக்கும் பெருமையளிக்க வேண்டும் என்பதற்காகப் பிற்கால தாவ் நெறித் தத்துவவாதிகள் இக்கதையை புனைந்து கொண்டனர். எனது, இந்தக் கருத்தை சிறுபான்மை அறிஞர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்.
முற்காலச் சீன எழுத்தாளர்களில், கன்ஃபூசியஸ் (கி.மு.551- கி.மு.479), மோ-டி (கி.மு.5 ஆம் நூற்றாண்டு) (கி.மு.371- கி.மு.289) ஆகியோரில் ஒருவர் கூட லாவோ - தசு பற்றி அல்லது அவரது தாவ்-தே-சிங் நூலைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆயினும் கி.மு. 300 வாக்கில் வாழ்ந்த கவாங்-தகு என்ற முக்கியமான தாவ்நெறி தத்துவஞானி அடிக்கடி லாவோ - தசு பற்றிக் குறிப்பிடுகிறார்.
லாவோ - தசு என்பவரே இருந்தாரா என்பதே கேள்விக்குரியதாகி விடடதால் வாழ்க்கை வரலாறு விவரங்கள் குறித்து நாம் ஐயுறவு கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும், மதிப்பிற்குரிய ஆதாரங்களிலிருந்தும் பின்வதும் செய்திகள் கிடைத்துள்ளன. லாவோ - தசு வடக்குச் சீனாவில் பிறந்து வாழ்ந்தார். அவர் தம் வாழ்நாளில் ஒரு பகுதியில், சூ அரசர்களின் தலை நகராக இருந்த லோயாங் நகரில் ஒரு வரலாற்றாசிரியராக அல்லது அரசு ஆவணக் காப்பகக் காப்பாளராக பணியாற்றினார். லாவோ - தசு என்பது அவருடைய இயற்பெயர் அன்று. அது "மூத்த குரு" எனப் பொருள்படும் ஒரு விருதுப் பெயரேயாகும். அவர் மணமானவர். அவருக்கு தசுங் என்ற மகன் இருந்தான். தசுங் பின்னர் வேய் அரசில் ஒரு தளபதியானான்.
தாவ் நெறி அடிப்படையில் ஒரு சமயச் சார்பற்ற தத்துவமாக தோன்றிய போதிலும், அதிலிருந்து இறுதியில் ஒரு சமய இயக்கம் உருவாகியது. ஆயினும், ஒரு தத்துவம் என்ற முறையில் தாவ் நெறியானது "தாவ்-தே-சிங்" நூலில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், தாவ் சமயம் விரைவிலேயே லாவோ - தசுவின் போதனைகளுடன் சிறிதும் தொடர்பில்லாத ஏராளமான மூட நம்பிக்கைகளையும், பழைய பழக்க வழக்கங்களையும் சேர்த்துக் கொள்கிறது.
தாவ்-தே-சிங் நூலின் ஆசிரியர் உண்மையிலே லாவோ - தசு தான் எனக் கொண்டால், அவருடைய செல்வாக்கு மிகப் பெரிது என்றே கூற வேண்டும். இந்த நூல் மிகச் சிறிது. (இதில் ஆயிரத்திற்கும் குறைவான சீன எழுத்துகளே உள்ளன. எனவே, இதனை ஒரு செய்தி இதழின் ஒரு தனித் தாளில் அடக்கி விடலாம்). ஆனால், இதில் சிந்தனைக்கு நிறையவே தீனி இருக்கிறது. தாவ் நெறித் தத்துவஞானிகள் அனைவரும் தங்கள் கோட்பாடுகளுக்கு இந்த நூலையே தொடக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
மேலை நாடுகளில், கன்ஃபூசியசின் அல்லது வேறெவரேனும் கன்ஃபூசியத் தத்துவஞானியின் எழுத்துக்களை விட தாவ்-தே-சிங் நூல் தான் மிக அதிகமாக செல்வாக்குப் பெற்றுள்ளது. உண்மையைக் கூறின், இந்நூலின் 40 வெவ்வேறு ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. விவிலிய நூல் நீங்கலாக, வேறு எந்த நூலுக்கும் இத்துணை மொழிப் பெயர்ப்புகள் வெளிவந்ததில்லை.
சீனாவில் கூட கன்ஃபூசிய நெறிதான் பொதுவாக ஆதிக்கம் பெற்றிருந்தது. லாவோ - தசுவின் கொள்கைக்கும், கன்ஃபூசியசின் கொள்கைக்குமிடையே தெளிவான முரண்பாடு இருக்குமிடத்து பெரும்பாலான சீனர்கள் கன்ஃபூசியஸ் கொள்கையையே பின்பற்றினார்கள். எனினும், கன்ஃபூசிய ஆதரவாளர்கள் கூட லாவோ - தசுவைப் பொதுவாகப் பெரிதும் மதித்துப் போற்றினார்கள். மேலும், பல நேர்வுகளில், தாவ் நெறிக் கொள்கைகள், கன்ஃபூசியத் தத்துவத்தில் இரண்டற இணைத்துக் கொள்ளப்பட்டன. அவன் மூலம், தங்களை தாவ் நெறியாளர்கள் எனக்கூறிக் கொள்ளாத பல கோடி மக்கள் மீது தாவ் நெறிக் கொள்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அதே போன்று, சீனப் பௌத்த சமயத் தத்துவ வளர்ச்சியிலும் குறிப்பாக ஜென் புத்த மார்க்கத்தின் வளர்ச்சியில் தாவ் நெறி குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. இன்று தாவ் நெறியாளர் எனத் தங்களைக் கூறிக் கொள்கிறவர்கள் மிகக் குறைவாகவே இருந்தபோதிலும், கன்ஃபூசியஸ் நீங்கலாக, லாவோ - தசு போன்று மனிதச் சிந்தனையில் பரவலாகவும் நிலையாகவும் செல்வாக்குப் பெற்ற வேறொரு சீனத் தத்துவஞானி எவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லாவோ - தசு (கி.மு.400), தாவ், லாவோ, ", அல்லது, வேண்டும், தான், நூல், சிங், அவர், கன்ஃபூசியஸ், என்பது, சிங்", அறிஞர்கள், நெறி, சீனாவில், செல்வாக்குப், குறித்து, வாழ்ந்தார், எனினும், ஒருவர், தாவ்", மொழி, இருக்கும், எழுதப்பட்ட, நூலை, நூற்றாண்டில், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்