முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » கிரிகோரி பிங்கஸ் (கி.பி.1903 - கி.பி.1967)
கிரிகோரி பிங்கஸ் (கி.பி.1903 - கி.பி.1967)
வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளைக் கண்டுபிடிப்பதில் தலையாய பங்கு கொண்ட அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி பிங்கஸ் ஆவார். இவர் இதற்காகப் பெரும் புகழ் பெறவில்லையெனினும், உலகப் புகழ் பெற்றுள்ள எத்தனையோ பேரை விட உள்ளபடிக்கு உலகின் மீது பெருமளவுக்குச் செல்வாக்குப் பெற்றுள்ளார் எனக் கூறலாம்.
இவர் கண்டுபிடித்த மாத்திரை இரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள்தொகைப் பெருக்க அபாயம் மேன்மேலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம் என்ற முறையில் இந்த மாத்திரையின் முக்கியத்துவம் மிகப் பெரிது. பாலுறவு முறைகளை மாற்றுவதில் இந்த மாத்திரை கொண்ட செயல் விளைவு அத்துணை நேரடியானதன்றெனினும், சரிநிகராக புரட்டிகரமானது எனலாம். கடந்த 15 ஆண்டுகளில், அமெரிக்காவில் பாலுணர்வு மனப்போக்குகளில் ஒரு புரட்சியே ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கின்றனர். அந்தப் புரட்சிக்கு வேறுபல அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களும் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், மிகப் பெரிய தனிக் காரணம் கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பு வேண்டாத கர்ப்பத்தைத் தடுக்க முடியாது என்ற அச்சம், திருமணத்திற்கு முந்தி ஏன் திருமணத்திற்குப் பிந்தியும், பாலுறவு கொள்வதிலிருந்து பெண்களைத் தடுத்து நிறுத்துவதில் பெரும் பங்கு கொண்டது. கர்ப்பம் தரித்து விடுவோமோ என்ற அச்சமின்றி, பாலுறவுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திடீரென வந்து சேர்ந்தது. இதனால் சூழ்நிலைகள் மாறின. அதனால் மனப்போக்கும் நடத்தைகளும் மாற்றமடைந்தன.
இதற்கு முன்பே பாதுகாப்பானதும், நம்பகமானதுமான கருத்தடை முறைகள் அறியப்பட்டிருந்தன என்பதால், முதலாவது கருத்தடை மாத்திரையாகிய 'ஈனோவிட்' கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது அன்று எனச் சிலர் வாதிடுவர். இவ்வாறு வாதிடுகிறவர்கள், நுட்ப முறையில் பயனுறுதியுள்ளதாக இருக்கும் கருத்தடை முறைக்கும், மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்தடை முறைக்குமிடையிலான வேறுபாட்டை மறந்துவிடுகிறார்கள். இந்த மாத்திரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் பெரும்பாலான "வல்லுநர்கள்" பரிந்துரை செய்த கருத்தடை சாதனம் "சவ்வுத் திரை" ஆகும். சவ்வுத்திரை உண்மையில் பாதுகாப்பான, நம்பகமாக ஒரு சாதனம் தான். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான பெண்கள் இதைப் பயன்படுத்தத் தயங்கினார்கள்; இன்றும் தயங்குகிறார்கள். கருத்தடை மாத்திரை முதலில் சோதனை செய்து பார்க்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கான பெண்கள், ஏற்கெனவே பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பாதுகாப்பான சவ்வுத்திரையைப் பயன்படுத்துவதை விட, பரிசோதிக்கப்படாத மற்றும் அபாயகரமான இந்த மாத்திரையைப் பரிசோதித்துப் பார்க்க முன்வந்தனர்.
'ஈனோவிட்' மாத்திரையைப் பயன்படுத்துவதால் சிலசமயம் உடல் நலத்திற்குக் கேடு ஏற்படுகிறது என்பதாலும் இதற்குப் பதிலாக விரைவிலேயே வேறொரு புதிய, பாதுகாப்பான மருந்து அல்லது சாதனம் கண்டுபிடிக்கப்படலாம் என்பதாலும், இந்த மாத்திரை கண்டுபிடித்ததை ஒரு பெரிய வெற்றியாகக் கருத முடியாது என்றும் ஒரு சாரார் கூறக் கூடும். ஆனால், இந்த மாத்திரை ஏற்கெனவே பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது; இது பொதுவாக மனநிறைவளிப்பதாகவும் இருக்கிறது. எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் கருத்தடை முறை, இதைவிடச் சற்றேதான் மேம்பட்டதாக இருக்க முடியும். (கடந்த 15 ஆண்டுகளில் பலகோடி அமெரிக்கப் பெண்கள் இந்த மாத்திரையை ஒழுங்காகப் பயன்படுத்தி வருகின்றனர்; இந்தக் கால அளவின்போது அமெரிக்கப் பெண்களின் ஆயுட்காலம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. எனவே, இந்த மாத்திரையைப் பயன்படுத்துவதால், உடல் நலத்துக்குப் பெருங்கேடு எதுவும் ஏற்படுவதில்லை என்பது தெளிவு). ஆகவே, 1950 களில் 'ஈனேவிட்' மாத்திரைக் கண்டுபிடித்தது, கருத்தடை முறைகளில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்பதை வரலாறு மெய்ப்பிக்கும், மெய்ப்பிக்க வேண்டும்.
வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையைக் கண்டுபிடிப்பதற்குப் பலர் துணை செய்திருக்கிறார்கள். நெடுங்காலமாகவே இது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இத்தகைய மாத்திரையில் எத்தகைய வேதியியற் பொருளை உள்ளிடுவது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இதற்கான முக்கியமான கண்டுபிடிப்பு, 1937 ஆம் ஆண்டிலேயே செய்யப்பட்டது என்பது வியப்புக்குரியது. அந்த ஆண்டில் A.W. மேக்பீஸ் ஜி.எல். வெய்ன்ஸ்டீன், எம்.எச்.ஃபிரீட்மன் ஆகிய மூவரும் பெண்பால் இயக்குநர்களில் ஒன்றான 'புரோஜஸ்டிரோன்' என்ற பொருளை உட்செலுத்தினால், ஆய்வுக்கூட விலங்குகளில் கருத்தரிப்பது தடைப்படுகிறது என்பதைச் செயல் விளக்கம் செய்து காட்டினார்கள். எனினும், தோலடியூடான ஊசி போடுதல், ஓர் ஏற்புடைய கருத்தடை முறையாகக் கருதப்படாத காரணத்தாலும் அந்தக் காலத்தில் புரோஜஸ்டிரோன் மிகவும் விலையுடையதாக இருந்தமையாலும், அந்த முறைக்கு கருத்தடை ஆதரவாளர்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை.
எனவே, கருத்தடை மாத்திரையை உருவாக்குவதற்கான முக்கிய முயற்சி 1950 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்படவில்லை. அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி பிங்கஸ் 1950 இல் அந்த முயற்சியைத் தொடங்கினார். குடும்பக் கட்டுப்பாட்டை நெடுங்காலமாக வலியுறுத்தி வந்த மார்கரெட் சாங்கரின் வலியுறுத்தலின் பேரிலேயே பிங்கஸ் இந்த முயற்சியில் ஈடுபட்டார். மசாசூசெட்ஸ் நிலத்தில் ஷிரூஸ்பரியிலிருந்த ஒர்சஸ்டர் பரிசோதனை உயிரியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநராக பிங்கஸ் பணியாற்றி வந்தார். அவர், சூலக வளர்ச்சிதை மாற்றத்திலும், பாலூட்டிகளின் இனப்பெருக்க உடலியலிலும் ஒரு வல்லுநராக விளங்கினார். எனவே, மார்கரெட் சாங்கர் இப்பணிக்கு இவரை விட வேறு தகுதி வாய்ந்த மனிதரைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.
பிங்கஸ் மிக விரைவிலேயே, தமது நுட்பமான தொழில் நுட்ப அறிவினாலும், அறிவியல் உள்ளுணர்வாலும், இந்தச் சிக்கலுக்குரிய ஒரு பொதுவான தீர்வினைக் கண்டுபிடித்தார். புரொஜஸ்டிரோனை வாய்வழியாக உட்செலுத்தினால், ஆய்வுக்கூட விலங்குகளில் கருவுறுதல் தடைப்படுகிறதா என்பதைப் பரிசோதிக்கும்படி ஒர்செஸ்டர் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளராகிய டாக்டர் டின்-சூயே-சாங் என்பவரை பிங்கஸ் கேட்டுக் கொண்டார். சாங்கின் பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஸ்ஸல் மார்க்கர் என்ற வேதியியல் வல்லுநர், புரோஜஸ்டிரோனைக் குறைந்த செலவில் செயற்கையாகத் தயாரிக்கும் முறையொன்றைக் கண்டுபிடித்திருந்தார். எனவே, சாங்கின் வெற்றி ஊக்கமளிக்கும் ஒரு தொடக்கமாக அமைந்திருந்தது.
அந்தப் பணியில் முக்கியப் பங்குபெற்ற மற்றொரு அறிஞர் டாக்டர் ஜான் ராக் என்ற மகளிர் மருத்துவ வல்லுநராவார். அவர், பிங்கசின் ஆலோசனைப்படி, சோதனைகள் நடத்தி, பெண்கள் வாய் வழியாக புரோஜஸ்டிரோனை உட்கொண்டால், கருத்தறிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மெய்ப்பித்துக் காட்டினார். ஆனால், புரோஜஸ்டிரோனை வாய்வழி உட்கொள்ளும் கருத்தடைச் சாதனமாகப் பயன்படுத்துவதால் உண்டாகும் இரண்டு முக்கிய சிரமங்களையும் ராக்கின் ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. முதலாவதாக, அது சுமார் 85% காலத்திற்கு மட்டுமே கருத்தரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது. இரண்டாவதாக, அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு மிக அதிகமான அளவு மருந்து தேவைப்பட்டது.
ஆயினும், தமது முயற்சிகள் சரியான திசையிலேயே செல்கின்றன என்று பிங்கஸ் கருதினார். எனவே, அவர் தம் முயற்சிகளைக் கைவிடவில்லை. புரோஜஸ்டிரோனிலுள்ள குறைபாடுகள் இல்லாத வேறொரு வேதியியல் கூட்டுப் பொருள் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார். எனவே, புரோஜஸ்டிரோனை ஒத்ததாக இருக்கம் வகையில் நாங்கள் தயாரித்துள்ள செயற்கை வேதியியற் பொருள்களின் மாதிரிகளைத் தமக்கு அனுப்பி வைக்கும்படி பல்வேறு வேதியியற் பொருள் தயாரிப்பு நிறுவனங்களை 1953 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிங்கஸ் கேட்டுக் கொண்டார். தமக்கு வந்த வேதியியற் பொருட்கள் அனைத்தையும் பிங்கஸ் சோதனை செய்து பார்த்தார். அவற்றுள் 'ஜி.டி.சீயர்லே அண்டு கோ' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நோரித்தைனோடிரல் என்ற பொருள், சிறப்பாகச் செயல் விளைவு கொண்டிருப்பதைக் கண்டார்.
இது பிங்கசுக்கு தற்செயலாகக் கிடைத்த ஒரு நற்பேறு எனலாம். ஏனெனில், 1950 ஆம் ஆண்டில் அவர் தமது ஆராய்ச்சியைத் தொடங்கியபோது, நோரித்தைனோடிரல் என்ற பொருள் தயாரிக்கப்பட்டிருக்கவே இல்லை. இந்தப் பொருளை 1951 ஆம் ஆண்டில் தான், சீயர்லே ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி வந்த டாக்டர் ஃபிராங்பி. கோல்ட்டோன் என்ற வேதியியல் வல்லுநர் செயற்கை முறையில் தயாரித்திருந்தார். பின்னர் அவர் தம் பெயரில் அதற்குப் புத்தாக்க உரிமையும் பெற்றிருந்தார். ஆனால், கருத்தடை மருந்தை வாய்வழிச் செலுத்துவதற்கு கோல்ட்டோனோ, அவரது மேற்பார்வையாளர்களோ முயன்று பார்க்கவில்லை. அச்சமயத்தில் அவர்கள் அத்தகைய மருத்தைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதை அறிந்திருக்கவுமில்லை.
பிங்கஸ் தமது ஆராய்ச்சிக் குழுவினருடன் மேலும் பரிசோதனைகள் செய்து, நோரித்தைனோடிரலுடன் மெஸ்டிரானோல் என்றும் மற்றொரு பொருளைச் சிறிதளவு சேர்த்தால் அதிகப் பயன் விளைவு ஏற்படும் என்பதைக் கண்டார். இந்த இணைப்புப் பொருள்தான் இறுதியில் 'ஈனோவிட்' என்ற பெயரில் ஜி.டி.சீயர்லே என்ற நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது.
1955 ஆம் ஆண்டில் இந்த மாத்திரையைப் பெருமளவில் களப் பரிசோதனைகள் செய்வதற்குத் தக்க தருணம் வந்திருப்பதாக பிங்கஸ் கருதினார். பியூர்டோரிக்கோவிலுள்ள சான் ஜூவான் என்ற நகரைச் சேர்ந்த ஒரு புற நகர்ப் பகுதியில் டாக்டர் எட்ரிஸ் ரைஸ்-லிரே அம்மையாரின் மேற்‘பர்வையின் கீழ், 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரிசோதனைகள் தொடங்கின. ஒன்பது மாதங்களுக்குள்ளேயே வாய்வழி உட்கொள்ளவும் இந்த மாத்திரை எத்துணை ஆற்றல் வாய்ந்தது என்பதைப் பரிசோதனைகள் மெய்ப்பித்தன. எனினும், இந்தச் சோதனைகள் மேலும் மூன்றாண்டுகள் வரை நடத்தப்பட்டன. பின்னர், 1960 ஆம் ஆண்டு மே மாதத்தில் 'ஈனோவிட்' என்னும் பெயரில் இதனை விற்பனை செய்வதற்கு உணவு மருந்து நிருவாகத் துறை ஒப்புதலளித்தது.
மேற்சொன்னவற்றிலிருந்து, கருத்தடை மாத்திரையை பிங்கஸ் தாமே தனியாக உருவாக்கவில்லை என்பது தெளிவாகிறது. நோரித்தைனோடிரலை உண்மையில் கண்டுபிடித்தவர் பிராங்க் கோல்ட்டோனேயாவார். உண்மையைக் கூறின் கோல்ட்டோனும், அவரது சாதனைக்கு உதவிய வேதியியல் வல்லுநர்களுமே இந்தப் பெருமையின் பெரும் பகுதிக்கு உரியவர்கள். அதே போன்று பிங்கசின் குழுவினருடன் இணைந்து பணியாற்றிய ஜான் ராக், மின்-சூயே-சாங், டாக்டர் செல்சோ-ரோமான் கார்சியா ஆகியோரும் முக்கிய பங்கு கொண்டார்கள். இந்த ஒட்டு மொத்தச் சாதனையில் டாக்டர் ரைஸ்-விரே, மார்கரட் சாங்கர் ஆகியோரும் முக்கிய பங்கு கொண்டார்கள். எனினும், இந்தத் திட்டத்தில் தலையாய பங்கு கொண்டு, அதைச் செயற்படுத்துவதற்கு இடைவிடாமல் தீவிரமாகப் பாடுபட்ட உந்து சக்தியாக விளங்கியவர் பிங்கசேயாவார். வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும், முயற்சிகளையும் ஈடுபடுத்திய ஒரே விஞ்ஞானி அவர்தான். மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாகக் கொண்டு செலுத்துவதற்குரிய அறிவியல் மற்றும் அமைவனத் திறம்பாட்டினைக் கொண்டிருந்த ஒரே விஞ்ஞானியும் அவர்தான். அவர் அடிப்படைக் கருத்தைச் சித்தரித்தார்; அதற்கான நிதியுதவியையும் பெற்றார்; அத்திட்டத்திற்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த மற்றவர்களையும் திரட்டினார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் அவருக்கு இருந்தது. எனவேதான், இந்தச் சாதனைக்குரிய பெருமையை அவர் பெற்றார். அந்தப் பெருமைக்கு அவர் முற்றிலும் தகுதியுடையவரேயாவார்.
கிரிகோரி பிங்கஸ், நியூஜெர்சி மாநிலத்தில் ஊட்பைன் என்னும் ஊரில் 1903 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ரஷிய யூதர்கள், கார்னல் பல்கலைக் கழகத்தில் 1924 ஆம் ஆண்டில் இவர் பட்டம் பெற்றார்; ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் 1927 ஆம் ஆண்டில், டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்பு ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் உட்பட பல நிறுவனங்களில் ஆராய்ச்சிகள் செய்தார். பல ஆண்டுகள் கிளார்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1944 ஆம் ஆண்டில் ஒர்சஸ்டர் பரிசோதனை உயிரியல் நிறுவனத்தை நிறுவுவதற்கு உதவி புரிந்தார். அதன் ஆய்வுக் கூடங்களின் இயக்குநராகவும் நெடுங்காலம் பணியாற்றினார். அவர் 250 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். "கருவளத்தை வெற்றி கொள்ளுதல்" என்ற நூலையும் எழுதினார். இது 1965 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
பிங்கஸ் தமது ஆயுட் காலத்தில் ஏராளமான அறிவியல் விருதுகளைப் பெற்றார். ஆனால், அவருக்கோ, கருத்தடை மாத்திரையை உருவாக்குவதில் பங்குகொண்ட வேறு எவருக்குமோ நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1967 ஆம் ஆண்டில் பாஸ்டனில் பிங்கஸ் காலமானபோது, அவரது மரணத்தைப் பொதுமக்கள்- ஏன், பெரும்பாலான விஞ்ஞானிகள் கூட கண்டுகொள்ளவில்லை. இன்று கலைக் களஞ்சியங்களில் கூட அவரது பெயர் காணப்படுவதில்லை. ஆயினும் மனித வரலாற்றில் மிக முக்கியமானதொரு சாதனையின் தலையாய சிற்பியாக விளங்கியவர் கிரிகோரி பிங்கஸ் என்பதில் ஐயமில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரிகோரி பிங்கஸ் (கி.பி.1903 - கி.பி.1967), கருத்தடை, பிங்கஸ், ஆண்டில், அவர், மாத்திரை, டாக்டர், தமது, பரிசோதனைகள், பெற்றார், வாய்வழி, பங்கு, வேதியியல், ஈனோவிட், செய்து, அறிவியல், மாத்திரையைப், என்பதை, பெண்கள், பொருள், உட்கொள்ளும், பல்கலைக், ஆண்டு, கிரிகோரி, அவரது, சாதனம், மாத்திரையை, முக்கிய, வேதியியற், வந்த, புரோஜஸ்டிரோனை, மேலும், கழகத்தில், பெயரில், ஆய்வுக், சீயர்லே, இந்தச், பயன்படுத்துவதால், முறையில், செயல், விளைவு, வாய்ந்தது, முக்கியத்துவம், தலையாய, இவர், பெரும், என்பதைப், அந்தப், என்பது, பொருளை, அந்த, மருந்து, பாதுகாப்பான, முடியாது, பெரும்பாலான, ", எனினும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்