முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » பிளேட்டோ (கி.மு.427 - கி.மு.347)
பிளேட்டோ (கி.மு.427 - கி.மு.347)
பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன; ஆராயப்படுகின்றன. எனவே, மேலைநாட்டுச் சிந்தனையின் தந்தையர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார்.
ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். கி.மு. 399 ஆம் ஆண்டில் சாக்ரட்டீஸ் 70 வயதை எட்டியிருந்த போது, அவர் மீது சமயத்தை அவமதித்ததாகவும், ஏதென்ஸ் நகர் இளைஞர்களை ஒழுக்கங்கெடச் செய்ததாகவும் ஆதாரமற்ற குற்றங்கள் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணை நாடகத்திற்குப் பின் சாக்ரட்டீஸ் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, நஞ்சு கொடுத்துச் சாகடிக்கப் பட்டார். "நான் அறிந்த அனைவரிலும் மிகச் சிறந்த அறிவாளி சாக்ரட்டீஸ். அவர் நேர்மை மிக்கவர். பொது நலம் வாய்ந்தவர்" என்று பிளேட்டோ போற்றினார். அத்தகைய பெருமைக்குரிய சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டது கண்டு பிளேட்டோவுக்கு மக்களாட்சி அரசின் மீது நீங்காத வெறுப்பு உண்டாயிற்று.
சாக்ரட்டீஸ் இறந்த சில நாட்களிலேயே பிளேட்டோ ஏதென்சிலிருந்து வெளியேறினார். அடுத்த 10 அல்லது 12 ஆண்டுகளை அயல் நாடுகளில் பயணம் செய்வதில் கழித்தார். கி.மு. 387 ஆம் ஆண்டில் மீண்டும் ஏதென்ஸ் திரும்பி, அங்கு "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார்.
பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை. மெய்விளக்கவியல், இறைமையியல் பற்றியும் அவர் எழுதியுள்ளார். இந்நூல்களை சில வாக்கியங்களில் சுருங்க உரைப்பது அத்தனை எளிதன்று. என்னும், அவருடைய சிந்தனையை அளவுக்கு மீறி எளிமைப் படுத்தும் அபாயம் இருந்த போதிலும், பிளேட்டோவின் மிகப் புகழ் பெற்ற "குடியரசு" (The Republic) என்ற நூலில் கூறப்பட்டுள்ள முக்கியமான அரசியல் கொள்கைகளை இங்கு சுருக்கமாகக் கூற முயல்கிறேன். "உன்னதச் சமுதாயம்" பற்றிய பிளேட்டோவின் கோட்பாட்டினை இந்த நூல் விவரிக்கிறது.
பிளேட்டோவின் கருத்துப்படி, மிகச் சிறந்த அரசு முறை என்பது "உயர் குடியினர் ஆட்சியே" (Atistocracy) ஆகும். இவ்வாறு கூறுவதால், அவர் ஒரு பரம்பரை உயர் குடியினர் ஆட்சியையோ, ஒரு முடியாட்சியையோ ஆதரிக்கவில்லை. மாறாக, தலைமை வாய்ந்த ஓர் உயர் குடியினர் ஆட்சியை அதாவது, நாட்டில் உள்ளவர்களில் அறிவிலும், திறமையிலும் மிகச் சிறந்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியை அவர் விரும்பினார். இந்த ஆட்கள், குடி மக்கள் வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாகாது. மாறாக, அமைப்பின் உறுப்பினர்கள் தங்களுக்குள் மனம் ஒத்துத் தேர்ந்தெடுக்கும் (Co-operation) ஒரு முறையின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். ஏற்கனவே ஆட்சி செலுத்துகின்ற உறுப்பினர்களாக அல்லது காப்பாளர் வர்க்கமாக (Guardian Class) இருக்கின்ற ஆட்கள் கூடுதலான ஆட்களை முற்றிலும் தகுதி அடிப்படையில் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்குத் தங்களுடைய தகுதியை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு எல்லா மக்களுக்கும் ஆண் - பெண் இருபாலருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனப் பிளேட்டோ கருதினார். (ஆண் - பெண் இருபாலருக்கும் அடிப்படைச் சமத்துவம் அளிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் கூறிய தத்துவஞானி, நீண்ட வரலாற்றில் இதை வலியுறுத்திய ஒரேயொரு மனிதர் பிளேட்டோ தான்) சமவாய்ப்பினைக் காப்புறுதி செவ்தற்காக, குழந்தைகள் அனைவரையும் அரசாங்கமே வளர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசாங்கமே கல்வி புகட்ட வேண்டும் என்றும் பிளேட்டோ வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு முதலில் கண்டிப்பாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். எனினும், இசை, கணிதம் போன்ற மற்றக் கல்விப் பாடங்களைப் புறக்கணிக்கலாகாது. பல்வேறு கட்டங்களில் விரிவான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இத்தேர்வுகளில் குறைந்த வெற்றி பெறுபவர்களுக்குச் சமுதாயத்தின் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொறுப்பு குறித்தளிக்கப் படவேண்டும். நல்ல வெற்றி பெறுவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். இந்த உயர் கல்வியில் வழக்கமான கல்விப் பாடங்கள் மட்டுமின்றி "தத்துவ" ஆராய்ச்சியும் சேர்க்கப்பட வேண்டும். "தத்துவ ஆராய்ச்சி" என்ற பிளேட்டோ குறிப்பிட்டது உன்னத வடிவங்களில் மெய்விளக்கவியல் கோட்பாட்டினை ஆராய்வதாகும்.
35 ஆம் வயதில், கோட்பாட்டுத் தத்துவங்களில் தமது புலமையைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியவர்களுக்கு மேலும் 15 ஆண்டுகள் நடைமுறைச் செயல்முறை அனுபவப் பயிற்சியளிக்க வேண்டும். ஏட்டறிவை உலகியலில் பயன்படுத்தும் திறனைக் காட்டுகிறவர்கள் மட்டுமே காப்பாளர் வர்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும், பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களெனத் திட்டவட்டமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றவர்கள்தாம் காப்பாளர்களாக ஆக வேண்டும்.
காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினராவதை எல்லோரும் விரும்ப மாட்டார்கள். காப்பாளர் செல்வந்தர்களாக இருக்கலாகாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சொந்தமாக சொத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சொந்தமாக நிலமோ, தனி இல்லங்களோ வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை (அது பெருந்தொகையாக இருக்காது) பெறுவார்கள். அவர்கள் (சொந்தமாகத் தங்கமோ, வெள்ளியோ வைத்துக் கொள்ளலாகாது) காப்பாளர் வர்க்கத்தின் உறுப்பினர்கள், தனியாகக் குடும்பங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து உணவு உண்ண வேண்டும். பொதுவாக துணைவியை அல்லத துணைவரைத்தான் கொண்டிருக்க வேண்டும். இந்த "தத்துவ வேந்தர்" களுக்கு (Philosopher Kings) இழப்பீடாகக் கிடைப்பது பொருட்செல்வம் அன்று; மாறாக, பொது மக்ளுக்குத் தொண்டு செய்யும் மன நிறைவேயாகும். உன்னதக் குடியரசு பற்றி பிளேட்டோவின் கருத்தின் சுருக்கம் இதுதான்:
"குடியரசு" நூல், பல நூற்றாண்டுகளாக, மிகப்பரவலாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனினும், அதில் விவரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு முறையை, உள்ளப்படியான குடியியல் அரசுக்கான ஒரு முன்மாதிரியாக யாரும் கொள்ளவில்லை. பிளேட்டோவின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடைப்பட்ட இடைவெளிக் காலத்தின் பெரும்பகுதியில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் பரம்பரை முடியாட்சிகளே ஆண்டு வந்திருக்கின்றன. அண்மை நூற்றாண்டுகளில் பல நாடுகள் மக்களாட்சி அரசு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஹ’ட்லர், முசோலினி ஆகியோருடையதைப் போன்ற இராணுவச் சர்வாதிகார ஆட்சி அல்லது கட்சிவாத கொடுங்கோலாட்சிகளும் ஏற்பட்டுள்ளன. அந்த அரசு முறைகளில் எதுவும் பிளேட்டோவின் கொள்கைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்றுக் கொண்டதில்லை. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசியல் இயக்கம் தோன்றியது போல், பிளேட்டோவின் கொள்கைகயை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கம் எதுவும் தோன்றவில்லை. அப்படியானால் பிளேட்டோவின் படைப்புகள் மதித்துப் போற்றப்பட்டாலும் நடைமுறையில் அடியோடு புறக்கணிக்கப் பட்டன என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா? முடியாது என்றே நான் கருதுகிறேன்.
ஐரோப்பாவிலுள்ள குடியியல் அரசு எதுவும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசை நேரடியாக முன் மாதிரியாக கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆயினும், மத்திய காலத்து ஐரோப்பாவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைக்கும், பிளேட்டோவின் காப்பாளர் வர்க்கத்திற்குமிடையே மிகுந்த ஒப்புமை காணப்படுவதை இங்கு கவனிக்க வேண்டும். மத்திய காலத்துத் திருச்சபை, தாமே நெடுநாள் அதிகாரத்தில் நீடிக்கும் உயர்ந்தோர் குழாமை (Elite) கொண்டிருந்தது. இதன் உறுப்பினர்கள், எப்பொழுதும் அதிகாரமுறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்கள். கொள்கையளவில், எல்லா ஆண்களும் அவர்களின் குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும் சமய குருவாக ஆவதற்குத் தகுதியுடைவர்களாக இருந்தார்கள். (ஆனால், பெண்கள் இதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள்). கொள்கையளவில், சமயகுருவுக்குக் குடும்பம் கிடையாது. தமது சொந்த செல்வத்தைப் பெருக்குவதில் அக்கறை கொள்வதைவிட பொது மக்களின் நலனிலேயே அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசின் காப்பாளர் வர்க்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதுண்டு. பொதுவுடமைக் கட்சியிலும், தாமே ஆட்சியில் நிலைத்து நீடிக்கும் ஒரு குழாம் அதிகாரம் செலுத்துகின்றது. அந்தக் குழாத்தின் உறுப்பினர்களும், அதிகார முறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.
அமெரிக்க அரசின் கட்டமைப்பில் கூட பிளேட்டோவின் கொள்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அமெரிக்க அரசமைப்பு மாநாட்டில் பங்கு கொண்ட பல உறுப்பினர்கள், பிளேட்டோவின் அரசியல் கொள்கைகளை நன்கறிந்திருந்தார்கள். மக்களின் விருப்பத்தைக் கண்டறிந்து, அதற்குச் செயல் விளைவு அளிப்பதுதான் அமெரிக்க அரசமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அதே சமயம், நாட்டை ஆள்வதற்கு மிகச் சிறந்த அறிவும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அது தனது நோக்கமாகக் கொண்டிருந்தது.
பிளேட்டோவின் செல்வாக்கு காலங்காலமாகப் பரந்துபட்டதாகவும், ஊடுருவி நிலவுவதாகவும் இருந்த போதிலும், அவருடைய செல்வாக்கு நேரடியாக அல்லாமல் மறைநுட்பமாகவே நிலவி வந்துள்ளது. அவரது அரசியல் கோட்பாடுகளுடன் சேர்ந்து அறவியல், மெய் விளக்கவியல் பற்றிய அவரது விவாதங்களும், பிற்காலத் தத்துவஞானிகள் பலர் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில், அரிஸ்டாட்டிலுக்கு மிகவும் பிற்பட்டு இடம் பெற்றிருக்கிறார் என்றால், அதற்கு முதன்மையான காரணம், அரிஸ்டாட்டில் ஒரு முக்கியமான விஞ்ஞானியாகவும் அதே சமயம் ஒரு தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார் என்பதேயாகும். அதே நேரத்தில், ஜான்லாக், தாமஸ் ஜெஃபர்சன், வால்ட்டேர் போன்ற சிந்தனையாளர்களுக்கு முன்னதாக இவருக்கு இடமளிக்கப் பட்டிருக்கிறது. காரணம் அவர்களுடைய அரசியல் எழுத்துகள் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் மட்டுமே உலகின் மீது தாக்குறவை ஏற்படுத்தின. ஆனால் பிளேட்டோவின் செல்வாக்கு 23 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலை பெற்றுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிளேட்டோ (கி.மு.427 - கி.மு.347), வேண்டும், பிளேட்டோவின், பிளேட்டோ, அரசியல், ", காப்பாளர், அவர், சாக்ரட்டீஸ், தமது, அரசு, உயர், உறுப்பினர்கள், வைத்துக், அல்லது, மிகச், மீது, பயிற்சி, வர்க்கத்தில், செல்வாக்கு, அமெரிக்க, எதுவும், அக்கறை, மட்டுமே, தத்துவ, உன்னதக், கொள்ள, கொள்கைகளை, பொது, சிறந்த, ஆண்டில், ஏதென்ஸ், புகழ், கல்வி, குடியினர், வயதில், அரிஸ்டாட்டில், மாறாக, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்