முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » தமிழ்க் கதைப் புனைவுகள்
இலக்கியக் கட்டுரைகள் - தமிழ்க் கதைப் புனைவுகள்

- விழி.பா. இதயவேந்தன்
மண்ணின் கலைகள் இந்த மக்களுக்கானதாக இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த தமிழ் மண்ணுக்கே உரிய கலைகள் எல்லாம் வேறோர் ஆதிக்கத்தின் கீழ் நசுக்கப்பட்டு நமக்கான கலைகள் வெளிப்படாமல் மற்றொன்றின் தொடர்ச்சியாய் அல்லது அது சார்ந்தே வெளிப்பட்டு வருவதைக் காணலாம்.
நமது பாரம்பரியம் என்பது நம்மை அறியாமலே வீழ்த்தப்பட்டு வருகிறது. நம்மின் கலை இலக்கியப் பாட்டு முறைகள் நம் தமிழ்ச் சனங்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்காமலில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் இந்துச் சனாதனத்தின் தாக்கம் இங்கு வேறூன்றத் தொடங்கி விட்டது.
நமக்கான அரசியல் வாழ்வு அல்லது நம் மண்ணுக்குரிய அரசியல் உரிமைகள் கூட இங்கு இயலாத சூழல் உள்ளது. நாம் நமது கலைகளில் அரசியல் ரீதியான கோட்பாடுகளை உள்ளடக்கி வெளிப்படுத்த இயலாத அடக்குமுறை வடிவங்கள் பலவாறாய் நம் சமூக அமைப்பில் நிலவுவதை நாம் பார்க்கலாம்.
இங்கு கலை இலக்கியங்கள் என்பவை பொதுவாகவே ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யக்கூடியதாகவே உள்ளது. மேட்டுக்குடி கலைகள் தான் கலைகள் என்றும் மேட்டுக்குடி இலக்கியங்கள் தாம் இலக்கியங்கள் என்றும் அதற்கானப் பல உன்னதங்களும் இருப்பதாகத் தொடர்ச்சியாக நமக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
நம் சமூக அமைப்பு என்பது நிலவுடமைகள் சார்ந்து இருப்பதால் அவற்றின் கலை இலக்கிய வெளிப்பாடுகளும் அது சார்ந்த தாகவே உள்ளது. நாளுக்கு நாள் இச்சூழல் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தாக்கத்தால் நமக்கே உரித்தான அனைத்து கலை வடிகங்களும் செழுமை எனும் பெயரில் வடிவங்களில் உள்ளடக்கங்களில் படிப்படியாக மாறத் தொடங்கியதை நாம் காணலாம்.
நிலவுடமைக் கூறுகளும் பிற ஏகாதிபத்தியக் கூறுகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் நமது மண்ணின் இயல்பான கலைகள் இங்கு வெளிப்பட இயலாமல் போனதும் மற்றொரு காரணமாகக் குறிப்பிட முடியும்.
இவற்றிலிருந்து கலைகள் நம் பண்டைய புராதன காலத்தில் இருந்த பிற்போக்கான முறைகள் இன்னும் கடைபிடிக்கப்படுகிறது. நவீனம் எனச்சொல்லி ஒரு பக்கம் கலைகள் சீரழிந்து வருவதை சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவரும் அறிவர்.
தெரிந்தோ தெரியாமலோ அல்லது ஆதிக்க சக்திகள் திட்டமிட்டபடி நம் மண்ணில் கலைகள் என்பவை இயல்பாக நம் மக்களின் வாழ்வினையும் அவற்றின் பண்பாடுகளையும் வெளிப்படுத்தாமல் ஒரு வரலாற்று ரீதியான மோசடி தொடர்ச்சியாக இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இது போன்ற மோசடிகளை முறியடிப்பதும் பிற்போக்குக் கலை வடிவங்களை வீழ்த்தி நமது வாழ்வோடு இயைந்த முற்போக்குக் கலை வடிவங்களை உயர்த்திப் பிடிப்பதும் இன்றைய சமூகக் கடமையாக உள்ளது. நமது கலை வடிவங்களில் பல தொன்மங்கள் நிறைந்தவையாகவும் பழம்பெரும் பதிவுகள் நிறைந்தவையாகவும் உள்ளன. அவற்றிலிருந்து கதைகள், கவிதைகள், நாடகங்கள், ஓவியங்கள், நாவல்கள், கட்டுரைகள்..... எனப் பல்வேறு வடிவங்கள் கலையின்பால் பதிவுகளாக உள்ளன.
இவற்றிலிருந்து தமிழ்க் கதைப் புனைவுகள் என்கிற ஓர் அம்சத்தை மட்டும் இங்குப் பார்ப்போமேயானால் அதன் தற்போதைய நிலையினையும் அவை மீட்டெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் நாம் உணர முடியும்.
கதை சொல்லும் போக்கு ஓர் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும்கூட அவற்றில் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் மட்டுமல்லாமல் முந்தைய அனுபவங்களும் அவஸ்தைகளும் அவற்றின் ஊடாக நிகழ்வதைப் பார்க்கலாம்.
இறைவனின் திருவிளையாடல்கள் என்றும், அருள்பணிகள் என்றும் கட்டுக்கதைகளாகப் பல நமக்குக் கதைகளில் முன் வைக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி காதல், மகிழ்வு, வீரம், சோகம், நட்பு, பொறுமை, வறுமை.... எனவும் கதைகளில் முன்மொழியப்படுகின்றன.
தாத்தா பாட்டிகள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்கிற கதைகள் ஒவ்வொன்றும் முந்தைய ஒவ்வொரு தலைமுறைகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. நிலவும் சமூக அமைப்பின் அனைத்து கூறுகளுடன் கதைகள் இயற்கையாகவும் செயற்கை கலந்தும் பின்னப்படுகின்றன. உண்மையும் பொய்யும் கதைகளில் பல்கிக் கிடக்கின்றன.
பேய்ப் பிசாசு உள்ளிட்ட பல்வேறு மூடநம்பிக்கைகள் ஒருபுறம் இருப்பினும் நாட்டுக்கு நாடு படையெடுக்கும் போது போர் புரிந்து வெற்றியை ஈட்டிய பெருமிதத்தையும் வீரமாக, சோகமாக, வெற்றியாகப் பல்வேறு கற்பனைப் புனைவுகளோடு நமக்குச் சொல்லப்படுகின்றன. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் அடிப்படையிலேயே அடிமைக் கருத்துக்களை தொடர்ந்து கதையின் வாயிலாகத் திணிக்கப்படுகின்றன.
கதைப்புனைவுகளில் கதைகள் இருக்கிறதா அன்றியும் கதைக்கான கரு என்பது தேவையா என்பதெல்லாம் காலப் போக்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. கதையில்லாக் கதைகளும் கதையோடு கதைகள் சொல்லப்படுவதும் அவ்வப்போது நிகழ்கிறது.
கதைகள் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு சேவை செய்யக் கூடிய மனோநிலை பலரிடம் இருந்து கொண்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவ கூறுகள் நம் கலைகளில் ஆழப்பதிந்திருந்தாலும் முதலாளித்துவக் கூறுகளின் தாக்கமும் வெகுசீக்கிரம் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
முதலாளிய சமூகத்தின் தொடக்கத்தில் கற்பனாவாதமும் உயர் குலத்துக்கான விசுவாசம் மிக்க கும்பல் மனோநிலையும் தடைகளாக இருந்ததை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது முற்றிலும் உண்மைதான் என நாம் பல்வேறு கதைகளின் வாயிலாக அறிய முடிகிறது.
இந்திய மொழிகளில் முதலில் வங்க மொழியில்தான் சிறுகதை எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் 17-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய ''பரமார்த்த குரு'' எனும் கதையை முன்னோடியாகவும் ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.
கலை வெளிப்பாடுகள் என்பது யாருக்கானதாக இருக்கவேண்டும் என்பதில் நமக்குள் கவனம் தேவை. அதற்கான ஒருங்கிணைந்த அல்லது ஒத்தக் கருத்துக்கள் நமக்குள் இருக்க வேண்டியுள்ளது.
சமூகத்தில் காணப்படும் அப்பட்டமான காட்சிகளைப் பதிவு செய்வதோ உண்மைகளை உண்மையாகவோ சற்று கற்பனாவாதம் கலந்தோ யதார்த்தமாக பதிவு செய்வது ஒரு கலை. அவற்றில் சமூகத்தில் முந்தைய அமைப்புகள் கற்பனையில் பதிந்திருக்கும். நடைமுறை எண்ணங்கள் உள்வாங்கி மேலோங்கியிருக்கும்.
கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கணக்கில் கொண்டு நிகழ்காலத்தில் சமூக யதார்த்தம் நிரம்ப கதை சொல்லும் பாங்கு மற்றொரு வகை.
பொதுவாகக் கதைகள் சொல்வது என்பது ஒவ்வொரு வீட்டிற்குள்ளிருந்து தொடங்குகிறது. உழைத்து முடிந்த பின்பும் ஓய்வு நேரங்களிலும், மாலை, இரவு நேரங்களில் குறிப்பாக கதைக்கான நேரம் ஒதுக்கப்படுகிறது. களமும் கருவும் கற்பனை சேர்ந்து அப்போதே துவங்கி விடுகிறது.
வீட்டிற்குள்ளே நிகழ்த்தப்படும் கதைகள் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவி மக்களோடு மக்களாக ஒரு குழு குழுவாக செயல்படத் தொடங்குகிறது. ஆங்காங்கே குழுக்கள் மூலம் கூட்டுக் கதைகள் உருவாகி பல்வேறு துணை இணைக் கதைகள் கற்பனை சேர்ந்து உழைக்கும் இடங்களில் மட்டுமல்லாது ஒன்று சேரும் இடங்களில் எல்லாம் சந்தர்ப்பப்படி கதை உருவாக்கம் நிகழ்ந்து விடுகிறது.
பின்னர் கதைகள் சொல்லி பிறர் கேட்பது என்றில்லாமல் நாளுக்கு நாள் கதைகள் இயற்றுவதும் அவற்றை சமூகம் வாசிப்பதும் தொடர்ச்சியாகிறது.
கதைப்புனைவுகளில் யதார்த்தம் சமூக யதார்த்தம் என்கிற நிலைக்கு மாறி சோசலிச சமூக யதார்த்தம் என்பது 19-ஆம் நூற்றாண்டு முதல் வேர்விடத் தொடங்கியதை நாம் அறியலாம்.
கதைகளில் பேசப்படும் கருப் பொருள்களுக்கு ஒரு வர்க்க சார்பு என்பது உள்ளுக்குள் இருக்கும். வர்க்கம் சார்ந்த படைப்புலகம் அதன் அனைத்து வகைப்பாட்டுடன் வெளிப்பட வேண்டும். வர்க்கச் சார்பு எனும்போது எந்த வர்க்கத்திற்கானது என்பது கலைஞன் உறுதி செய்யப்பட வேண்டும். அடிமட்ட மக்களின் சோகங்களை பதிவு செய்வது வீழ்ந்து நொறுங்கிய மக்கள் வாழ்வினை எழுதுவதா அல்லது மேல்தட்டு மக்களின் சொகுசு வாழ்க்கை உள்ளிட்ட உயர்நிலை மனோபாவங்களைப் பதிவு செய்வதா என்பதில் நமது கவனம் தேவை.
குறிப்பாக தலித்தியம், பெண்ணியம், உள்ளிட்ட அனைத்து சமூகக் கொடுமைகளுக்கும் நாம் கலைகள் மூலம் விமர்சித்தாக வேண்டும். சாதி, மத ரீதியாக, பாலியல் ரீதியாக, சமூக ரீதியாக இழைக்கப்படும் வன்மங்களுக்கெதிராக ஒரு மாபெரும் கிளர்ச்சி இங்கு நிகழ்ந்தாக வேண்டியுள்ளது.
நமது குரல்கள் வர்க்க சார்பின்றி குறிப்பாய் அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களைப் பதிவு செய்யாமல் இருக்குமானால் அவற்றால் சமூக வளர்ச்சி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு வளராமல் போகும் அபாயமுண்டு. எந்த ஒரு கலை வடிவங்களும் அது ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கச் சார்போடு வெளிவர வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாய் இருக்கிறது.
கதைப் புனைவுகளில் அடிநிலை மக்களின் வாழ்வின் நுண்ணியப் பதிவுகள் அனைத்தும் வெளிவந்தாலும் கூட அவற்றில் பாத்திரங்கள், காட்சிகள், கதை மாந்தர்கள் என ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்தியாக வேண்டும். அவ்வாறு நிகழ்த்தப் படாமலிருந்தால் கதைப் புனைவு என்பது வெறும் கதையாக ஆகி சமூகத் தளத்தில் நிற்க முடியாமல் போய் விடுகிற அபாயம் உள்ளது. ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதாகவே இவ்வாறான கதைகள் அமைந்து விடும்.
மேல் தட்டு மக்களின் கலை வகைப்பாடுகளில் அடிநிலை மக்களின் துன்பங்கள் துயரங்கள் சோகங்கள் என்பது பெரிதேயின்றியும் அவற்றிற்கெதிரான சமூக எதிரிகள் யார் என்பதை கதைப் புனைவுகளில் மையப் படுத்தாமல் தங்களின் வர்க்க நலன் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு தங்களுக்குள் வர்க்க சமரசம் ஏற்படுத்திக் கொண்டு சமூக ரீதியாக முரண்பாடுகள் நிறைந்தது காணப்படுவைகளாக உள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு கதைப் புனைவுகள் என்பதும் நம் மண்ணில் வீழ்ந்து தொலைந்த மரபுகளை உயர்த்திப் பிடிக்க வெறும் யதார்த்தக் கூறுகள் மட்டுமே உள்ளடக்கிப் பார்க்காமல் தொலைநோக்குப் பார்வையோடு சமூக யதார்த்தம் நிரம்ப படைப்புக்கள் வெளிவர வேண்டியுள்ளது.
நமது மண்ணில் வேரூன்றிப் போன பழமையான மதிப்பீடுகளும், எண்ணங்களும் தகர்க்கப்பட்டு அவற்றிலிருந்து உன்னதமான கருத்துக்களோடு படைப்பிலக்கியத் துறையில் கதைப் புனைவுகள் நிகழ்ந்தாக வேண்டியுள்ளது.
இத்தகைய புரிதல்களோடு நூறாண்டுகளாய் சிறுகதைப் புனைவு என்பது தமிழின் இன்றைய சமூக நோக்கத்தோடு இயங்குகிற மக்கள் படைப்பாளிகள் மூலம் அது சாத்தியம் தான் என்பதை நிலைநிறுத்துகிறது.
கதைகளில் கற்பனாவாதம் என மட்டுமேயில்லாமல் குறைந்த பட்சம் யதார்த்தம் மேலோங்கும் படைப்புக்கள் வர வேண்டியது அவசியம். கதைப்புனைவு என்பது வெறும் பொழுது போக்கு அம்சங்கள் மட்டுமல்ல. நமது பிற்போக்கான வாழ்க்கை முறையினை ஒரு பக்கம் அறிவதும், அவற்றிலிருந்து பெறப்பட்ட நன்மை தீமைகளை ஆய்வதும் அவற்றில் நாம் உணரும் நீதியை உணர்வதும் இப்பிற்போக்கான வாழ்வு முறையை எதிர்த்து கதைகளின் வாயிலாக ஒரு பெரும் அகம் சார்ந்த மற்றும் புறம் சார்ந்த போராட்டத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதும் நமக்கு முன்னுள்ள இன்றைய சமூகக் கடமையாக உள்ளது.
பிற்போக்கான நமது சமூக உற்பத்தி முறையிலான கலை வடிவங்கள் என்பது நம் சந்ததியினருக்க எதிர்காலத்தை நிர்ணயிக்கிற சக்தியாக இல்லை. அவற்றிலிருந்து மீண்டு ஓர் புதிய வடிவிலான கலை உருவாக்கங்கள் நமது மண்ணுக்கும் மக்களுக்கும் தேவை. இவைதான் மடிந்து கொண்டிருக்கிற அல்லது ஆதிக்க சக்திகளால் மிதிபட்டுக் கொண்டிருக்கிற இக்கலை வடிவங்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகளின் போர்க்குரலாக தங்கள் படைப்போடு வெளிவர வேண்டியுள்ளது.
மக்களிடமிருந்து பெறப்படும் படிப்பினைகள் உன்னத கலை வடிவங்கள் யாவும் மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
இழந்து போன நமது பாரம்பரியம் மிக்க கலை வடிவங்களை மீட்டெடுப்பதும் கலைகளை மேலும் மேலும் நடைமுறையினூடே செழுமைப்படுத்தும் கலைகளை நமது சமூக மேம்பாட்டுக்கான பயணத்தோடு இணைக்கும் பணி கவிதை, கட்டுரை, நாடகம், ஓவியம் எனப் பலவாறாக இயங்கும் படைப்பாளிகட்கு மட்டுமின்றி மிதிபட்டக் கதைப் புனைவுகளை நிமிர்த்த முனையும் ஒவ்வொரு கலைஞனுக்கும் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ்க் கதைப் புனைவுகள் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - என்பது, சமூக, கதைகள், நமது, கலைகள், மக்களின், நாம், உள்ளது, கதைப், வேண்டியுள்ளது, யதார்த்தம், பல்வேறு, அல்லது, இங்கு, கதைகளில், பதிவு, வர்க்க, ரீதியாக, வேண்டும், கொண்டு, அவற்றில், அவற்றிலிருந்து, என்றும், வடிவங்கள், சார்ந்த, அனைத்து, இன்றைய, இலக்கியங்கள், மூலம், மக்கள், அரசியல், வெறும், வெளிவர, வடிவங்களை, அவற்றின், ஒவ்வொரு, பிற்போக்கான, முந்தைய, உள்ளிட்ட, தேவை, புனைவுகள், சமூகக், மண்ணில்