முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » தமிழ் இலக்கியம் - சில பதிவுகள்
இலக்கியக் கட்டுரைகள் - தமிழ் இலக்கியம் - சில பதிவுகள்

- சு. வேங்கடராமன்
தமிழ் இலக்கியம் நீண்டபரப்புடையது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலத்தினுடைய சமூகக் குரலாக இலக்கியப் படைப்பு அமைந்துள்ளதை நாம் அறியலாம். இன்றைய மேலை நாட்டுக்கல்விக் கோட்பாடுகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுதுகூட, நம்முடைய படைப்புகள் அவற்றிற்கு ஏற்ற வண்ணம் அமைந்துள்ளது வியப்பைத்தரும். நீண்ட காலத்திற்குக் கவிதையே இலக்கிய வடிவமாக இருந்து வந்துள்ளது. இந்தக் கவிதை ஆளும் அதிகார வர்க்கத்திற்குத் துணைபோகும் குரலாகவே இருந்தாலும் கூட, சமூகத்தினுடைய சகலதளங்களையும் குறித்த குரல், தெளிவாகவும், அடங்கியும் தொடர்ந்து ஒலிப்பதைப் போன்று வெளிப்படையான விமர்சனக்குரல் பழைய கவிதைகளில் இல்லை என்று சிலர் கருதக்கூடும். ஆனால் ஆழ்ந்த வாசிப்பு, பன்முறை வாசிப்பு செய்யும் ஒரு வாசகனுக்கு எல்லாக் காலங்களிலும் படைப்புகளில் இந்தக்குரலைக் காணமுடியும்.
இலக்கியத்தைத் துண்டு துண்டாக அவரவர் நோக்கிற்குப் பார்க்கும் தனித்த அனுபவத்தை விடவும், தமிழ்ச் சமூகத்தின் வரலாறு என்ற நிலையில் பார்க்கும் முழுமைப் பார்வை திறனாய்வாளர்க்கு வேண்டும். அந்த வகையில் இலக்கிய வரலாறு என்பது, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் - சமூக பண்பாட்டு வரலாறுகளை இலக்கியங்களின் ஊடாக அறிவது என்ற ஒரு பெரிய இலக்கு நோக்கிய பயணமாக, ஒரு புதிய விரிவான இலக்கிய வரலாறு உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துக்கள் இங்கு விவாதத்திற்காக முன்வைக்கப்படுகின்றன.
தமிழில் பெரும்பாலும் வெளிவந்துள்ள இலக்கிய வரலாற்று நூல்களில் இலக்கியங்கள் இந்த அடிப்படையில் பார்க்கப் படவில்லை. இலக்கிய நூல்களின் பட்டியல் தருவது மட்டுமே அவற்றின் போக்காக உள்ளது. காரணம் மாணவர்களுடைய பாடத்தேவைக்காக உருவான 'வழிகாட்டுதல்' நூல்கள் அவை. அவற்றில் ஆழமும் அகலமும் நுட்பமும் தேடுவது வீண் வேலை. கா. சிவத்தம்பியின் தமிழ் இலக்கிய வரலாற்று வரைவியலுக்கான அடிப்படை, தொ.பொ. மீ. ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்களிலும் அழுத்தமான பதிவுகள் உண்டு. மு. அருணாச்சலம் 8 முதல் 16 முடிய நூற்றாண்டு வாரியாக எழுதிய இலக்கிய வரலாற்று நூல்களில் விரிவும் பரப்பும் ஆழமும் இருந்த போதிலும், அவர் பார்வை முழுவதும் சைவப் பார்வையாக நின்றுவிட்டது. (சைவமே தலைசிறந்த சமயமென்ற கோட்பாட்டை அடிப்படை நியதியாகக் கொண்டு அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார்) இவை தவிர கா. கைலாசபதி, ஆ. வேலுப்பிள்ளை, கோ. கேசவன், நா. வானமாமலை போன்றோரின் பல்வேறு படைப்புகளிலும் ஆங்காங்கே சிற்றிதழ்களிலும் நிறைய தரவுகள் உள்ளன. ஆனால் இவைகளிலும் சார்புப் பார்வை காணப்படுகிறது. முழுமையாக எந்தச்சார்பும் இன்றி உண்மையைத் தேடும் நடுநிலைமையான தமிழின் மேன்மையைக் கூறும் பார்வை ஆய்வாளனுக்கு வேண்டும். மேலும் தமிழ் இலக்கியப்பரப்பு முழுவதிலும் முன்னும் பின்னும் இயைத்துக் காணும் முழுமைப் பார்வையும், புதியன தேடும் வேட்கையும் இன்றியமையாதன. தமழ் இலக்கிய வரலாற்று நூல்களில் புலவர்களைப் பற்றியதான சில கதைகள் உள்ளன. புலவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதைகளான இவைகளுக்கு ஆதாரம் எங்கு உள்ளது என்பதை இவர்கள் கூறுவதில்லை. கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆசிரியர் பெயர் அறியப்படாத தமிழ் நாவலர் சரிதை என்ற நூல்தான் இவ்வகையில் முதலாவதான அடிப்படையான ஆதாரம். இந்த நூலில் சங்ககாலம் தொடங்கி கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பல்வேறு படைப்புகள், அரங்கேற்றப்பட்ட காலச் சூழல்கள் என்பதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் அந்தக்கவி வீரராகவ முதலியார் காலத்தோடு இந்நூல் தீர்ந்து போய் விடுகிறது. இந்த நூலில் கால வரிசை முறையும் இல்லை; புலவர்களின் எல்லா படைப்புகளைப் பற்றிய விவரங்களும் இல்லை; ஆனால் வாய்மொழியாக இதுவரை வழங்கி வந்த பல்வேறு தரவுகளை முதல் முதலாக இந்தப் புலவர் பதிவு செய்துள்ளார். இன்றுவரை அந்த அளவில் அவரின் பணி பாராட்டிற்குரியதாக ஆகிறது. அதுவரை தமிழில் யாருக்கும் தோன்றாத, வரலாற்றுக்கு மூலமாக அமையும் ஒரு பணியை அந்த நாளில் அவர் செய்திருப்பது அசுர சாதனை. கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள் பாடிய புலவர் புராணம் என்ற நூலும் இலக்கிய வரலாற்றிற்கான மற்றொரு ஆதார நூல் ஆகும். 72 சருக்கங்களில் 3005 பாடல்கள் தந்த இந்த நூலில் காலவரிசை பாராமல் ஏராளமான புலவர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் சுவாமிகள் பதிவு செய்துள்ளார். எந்த வசதியும் இல்லாத காலத்தில் ஊர் ஊராகச் சென்று கள ஆய்வு செய்து சமயச்சார்பின்றி நடுநிலையில் நின்று எதார்த்தபூர்வமாக அறிவியல் அணுகு முறைப்படி அவர் வெளிப்படுத்தியுள்ளார். நூல் நெடுகிலும் இது வாய்மொழியாகக் கேட்டது, இது உலகோர் நவில் மொழி என்று அவரே மீண்டும் மீண்டும் கூறுகிறார். நாம் இதுவரை அறிந்திராத பல புலவர்களின் பெயர்களை இதனால் அறிகிறோம்; நமக்குத் தெரிந்த புலவர்களின் பெயர்களை இதனால் அறிகிறோம்; நமக்குத் தெரிந்த புலவர்களின் புதிய புதிய நூல்ளை அறிகிறோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஏற்கனவே வரலாற்றில் பதிவாகியுள்ள (பெரிய புராணம், குரு பரம்பரை போன்ற) புலவர்கள் பற்றிய கதைகளை இவர் மறுவாசிப்பு செய்கிறார். பொதுவாகத் தமிழ் மரபில் புலவர்களைப் பற்றியும் அவர்களுடைய கவிதை அரங்கேற்றம் பற்றியும் ஏராளமான தொன்மக் கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இயல்பாக நடப்பியல் நெறியில் சொல்வதை விடவும் தொன்மக் கதையாக இயற்கை இயைந்ததாக கதை கட்டமைப்பது நமக்கு ஆகிவந்த பழக்கம். இறைவன் அடியெடுத்துக் கொடுத்தான், இறைவி நாவில் எழுதினாள் என்று சொல்லிவிட்டால் கவிதைப்பிரதி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக எல்லோராலும் ஏற்றுக் கொள்வதற்கு உரியதாக அமைந்துவிடும் என்பதாக ஒரு அதிகாரக் குரல் இந்தக் கட்டமைப்பில் இழையோடக் காணலாம். அதாவது, இறையருள் பெற்ற இந்தக் கவிதை அதிகாரமையம் சார்ந்தது, இதை விமர்சிப்பதற்கு விளிம்புநிலை மாந்தர்கள் அருகதையற்றவர்கள் என்பதான ஒரு குரல் இத்தகைய கதையாக்கங்களில் உள்ளது. சமயத்தில் செயலாகவும், ஆள்பவர் அதிகாரத்தின் செயலாகவும் இவை தொடர்ந்து செய்யப்பட்டு வந்துள்ளன. ஆனால் இந்தச் செல்நெறிகளையெல்லாம் உடைத்துக் கொண்டு புலவர் புராணம் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் நடப்பியல் நெறியோடு பார்க்கும் பார்வை அவரிடம் உள்ளது. துறவியாக இருந்த போதிலும் சமயவாதிகளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத புரட்சியாளராக அவர் விளங்குகிறார். அந்த அடிப்படையில் தான் பழைய கதைகளை அவர் மறுவாசிப்பு செய்கிறார். ஆனால் இத்தகைய அற்புதமான நூலைப் பார்க்காமலேயே பௌராணிக மரபில் எழுதப்பட்டது என்று அறிஞர் சிவத்தம்பி ஒற்றை வரியில் விமர்சிப்பது ஏற்புடையதாக இல்லை. இலங்கையில் தோன்றிய பிற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ்ப்புலவர்கள் சரித்திரம், திராவிடப் பிரகாசிகை, பாவலர் தீபகம் போன்ற நூல்களையெல்லாம் வியந்து போற்றும் சிவத்தம்பி தமிழ் நாவலர் சரிதை என்ற முதல் நூலையே பாராமல் விட்டுவிட்டு, புலவர் புராணம் நூலை போகிற போக்கில் பௌராணிக மரபு நூல் என்று விமர்சிப்பது நடுநிலையான விமர்சனமாக இல்லை.
இலக்கிய வரலாறு எழுதுவோர் அடிப்படையில் இலக்கிய வரலாற்றுக்கான மூலங்களை முழுமையாகப் படித்துப் பின்னர் அவைகளை விமர்சனம் செய்ய வேண்டும். இலக்கியப் பரப்பு முழுவதிலும் ஆழ்ந்த பயிற்சி உள்ளவராகவும் புதிய திறனாய்வுக் கோட்பாடுகளை இலக்கியங்களில் பொருத்திப் பார்ப்பவராகவும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இருக்க வேண்டும்.
தொல்காப்பியர் தொடங்கி இன்று வரை தமிழில் வெளிவந்துள்ள அத்தனை இலக்கியப் படைப்புகளும் முழுமையாக இதுவரை பதிவாகவில்லை. இதுவரை அறியப்படாத இலக்கிய நூல்களைத் தமிழ்க் கல்வியுலகுக்கு அறிமுகப்படுத்துவது அடிப்படைக் கொள்கையாகும். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் தீபங்குடி பத்து என்ற ஒரு நூலையும் பாடியுள்ளார். அதனுடைய உந்துதல் எது என்று பாடலின் இறுதி அடியிலும் இந்த விளக்கம் உள்ளது. தமிழ் நாவலர் சரிதை நூலில் இதிலிருந்து ஒரு பாடல் மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆ. கணேசய்யர் பதிப்பித்த கலிங்கத்துப் பரணியில் இதன் 7 பாடல்கள் தரப்பட்டு உள்ளன. இந்நூலில் கிடைக்கும் ஒரு புதிய தகவல், சமணர்கள் இனிய, பிறரைத் துன்புறுத்தாத சொற்களைப் பேசுபவர்கள் என்னும் கருத்தாக்கம். ஆனால் வைதீக சமய இலக்கியங்கள், சமணர்களைக் கடுஞ்சொல் பேசுபவர்களாகவே காட்டுகின்றன. இந்த சமய அரசியலை உணர்ந்து கொண்டு இலக்கிய வரலாறு, இவற்றைப் பதிவு செய்ய வேண்டும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் பட்டணார் என்ற புலவர் பகவத்கீதையை ஆசிரிய விருத்தப்பாக்களால் தமிழில் பாடினார். தமிழில் பகவத் கீதையைக் கவிதையாகப் பாடிய முதல் நூல். தமிழில் பட்டணார் தொடங்கி பாரதியார் வரை அத்வைத வேதாந்த மரபு ஒன்று உள்ளது. சங்கரரின் அத்வைத வேதாந்தம் தமிழில் அப்படியே பேசப்படவில்லை. தமிழ் நாட்டின் சமூக - பண்பாட்டு அரசியலுக்கு ஏற்ப 13 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி இம்மரபு தெளிவாகக் கட்டமைக்கப்பட்டது. தமிழர் சமூக வரலாற்றில் பேரரசர்கள் காலம் தொட்டு ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த பலன்களை அடைவதில் உயர் சாதியினரான அந்தணர்களுக்கும், வேளாளர்களுக்கும் தொடர்ந்து போட்டி நிலவிவந்தது. தொடக்க காலத்தில் (பல்லவர் காலம் முதல்) அரசர்களிடம் நெருக்கமாக இருந்து 'இறையிலி' நிலங்களைச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் அந்தணர்கள் அனுபவித்து வந்தனர். 12 ஆம் நூற்றாண்டு அளவில் சோழப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் இத்தகைய இறையிலி நிலங்கள் அந்தணர்களிடமிருந்து வேளாளர்கள் கைவசம் முற்றிலுமாக மாறின. இதனை வரலாறு உறுதிப்படுத்தும். இந்தச் சூழலில் வேளாளர்கள் அரசு அதிகாரத்தில் முதன்மை பெறுகின்றனர். கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சைவ மடங்கள் நிறுவப்பெற்று சைவசித்தாந்த நூல்கள் மிகுதியாக உறுப்பெற்றன. தேவார ஆசிரியர்கள் காலம் முதல் சைவ சமயத்தைத் தமக்குரிய அடையாளமாகக் கொண்டு வாழ்ந்த நம் தமிழ்நாட்டு சிவமார்த்த அந்தணர்கள், இப்பொழுது 13-ஆம் நூற்றாண்டு அளவில் அத்வைத வேதாந்த நிலைப்பாட்டிற்கு மாறுகின்றனர். இதன் பின்னுள்ள சமூக வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக வேளாளர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகப் புதிய நிலைப்பாடுகளை அந்தணர்கள் முன் வைக்கின்றனர். சங்கரருடைய அத்வைத வேதாந்தம் தமிழ்நாட்டுச் சூழலில் பொது மக்கள் வேதாந்தம் என்ற பெயரில் பரப்பப்படுகிறது. அத்வைதம் என்பதற்கு இரண்டு அற்றது ஒன்று என்ற தத்துவ விளக்கத்தை அந்தணர்கள் தமிழ் சமூகச் சூழல்களுக்கு ஏற்ப சாதி வேறுபாடுகள் அற்ற, பொருளாதார வேறுபாடு அற்ற, பாலின வேறுபாடு அற்ற, அனைவரும் ஒன்று என்ற புதிய முழக்கமாகப் பாடத் தலைப்பட்டனர். இதற்கு மிகச்சிறந்த சான்றாக, 15-ஆம் நூற்றாண்டில் தத்துவராயர் பாடிய பாடுதுறையுள், 17-ஆம் நூற்றாண்டில் ஆவுடையம்மாள் பாடிய பாடல்கள், பின்னர் பாரதியின் பாடல்கள் இவை நல்ல சான்றுகள் ஆகும். இப்படி, ஒரு புதிய சமரசமான அனைவரும் ஒன்று என்பதை பொதுமக்கள் வேதாந்தம் என்ற பெயரில் இவர்கள் பரப்பினர். இதன் விளைவாக வேளாளர்களின் சைவ சித்தாந்தத்திற்கு மாற்றாக அந்தணர்களின் ஒரு பகுதியினராக வைணவர்களைப் பின்பற்றும் விசிட்டாத்வைத நெறிக்கு மாறாக தமிழ் அத்வைதம் கால்கொண்டது. அத்துடன் எல்லோரையும் இணைத்துக் கொள்ளும் இப்பொதுமக்கள் நெறி மிகச்சுலபமாக பக்தி இயக்கம் போன்று மக்கள் மத்தியில் பரவியது. அடித்தட்டு மக்களின் பண்பாட்டு மரபுகள் அனைத்தையும் உள்வாங்கி இவர்களுடைய இலக்கிய ஆக்கங்கள் வெளிப்பட்டன. இதன் விளைவாக மீண்டும் வேளாளர்களின் எழுச்சியைப் பின்தள்ளி நாயக்கர் காலம் முதல் மீண்டும் இவர்கள் ஆதிக்கம் பெற்றனர். இந்த சமரச மரபு, வேதாந்த மரபுகளோடு அனைவரும் ஒன்று என்ற முழக்கத்தோடு தமிழ் பக்தி மரபையும் உள்வாங்கிக் கொண்டு முதன்மைப் பெற்றது. இது இன்று வரை தமிழ் ஆதிக்கச் சக்தியாக உள்ளதை நாம் அறியலாம். இந்தப் பின்னணியில் தான் பட்டணார் தொடங்கி வருகின்ற தமிழ் அத்வைத வேதாந்த இலக்கிய மரபினை நாம் கவனிக்க வேண்டும்.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தத்துவராயர் என்ற புலவர் இரண்டு விதமான படைப்பு நெறிகளில் இலக்கியம் படைத்தார். ஒன்று; பாடுதுறை என்ற நூலில் முழுவதும் நாட்டுப்புற இலக்கிய வகைகளில் பாடினார். அடிப்படையில் தமிழ் அத்வைத வேதாந்த மரபை அவர் பாடியுள்ளார். தமிழ் இலக்கிய மரபில் முதன் முதலாக ஏராளமான நாட்டுப்புற இலக்கிய வகைகளை இவர்தான் இலக்கிய வழக்காக்கியுள்ளார். சாதி வேறுபாடுகளற்ற, அனைவரும் சமம் என்ற கருத்தாக்கமே அத்வைதம் என்ற நிலையில் பாடுதுறை முழுக்க இவர் பாடியுள்ளார். 'பார்ப்பானும் பறைச்சியும்' என்ற இருவர் உரையாடும் பாங்கில் அமைத்துள்ளார். அவருடைய பாடல் மேற்சாதியினரின் ஆதிக்கத்திற்கு எதிரான கலகக்குரலாகும். தமிழ் இலக்கிய மரபில் இருமாந்தர் உரையாடல் என்ற இலக்கிய வகையாலும், அதே நேரத்தில் ஆதிக்க சாதியினருக்கு எதிராக தலித்தினுடைய கலகக் குரல் என்பது இதுதான் காலத்தால் செய்யப்பட்ட முதல் பதிவு ஆகும். இதே போல சைவ வைணவ வேறுபாடு இல்லாத பேதமற்ற நிலை அத்வைதம் என்ற நோக்கில் அவர் சில தொகுப்பு நூல்களையும் தொகுத்தார். சைவ, வைணவ சமயப் பாடல்களிலிருந்து அவர் தொகுத்த குறுந்திரட்டு, பெருந்திரட்டு என்ற இரண்டு நூல்களும் இத்தகையன.
இதே நூற்றாண்டில் உத்திரநல்லூர் மங்கை என்ற பெண் பாடிய பாய்ச்சலூர்ப் பதிகம் என்ற நூல், தமிழின் முதல் தலித் இலக்கியமாகும். 11 பாடல்களைக் கொண்ட இந்நூல் உயர்சாதியினரான பார்ப்பனர்களை நோக்கி ஒரு தலித் பெண் எழுப்பும் கலகக்குரலாக உள்ளது. சாதி ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு பெண் எழுப்பும் குரல் இந்த நூல். 1930-வரை இந்த நூல் பல பதிப்புகளைக் கண்டது. குலம் குலம் என்பதெல்லாம் குடுமியும் புணு நூலும் சிலந்தியும் நூலும் போல சிறப்புடனே பிறப்பதுண்டோ என்பது போன்ற சீற்றக் குரல்களை இந்நூல் நெடுகக் காணலாம். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஆவுடையம்மாள் என்பவர் அத்வைத வேதாந்தக் கருத்துகளைப் பரப்புவதற்கு ஏராளமான பாடல்களைப் பாடினார். கீர்த்தனை, கண்ணி, கப்பல் பாட்டு, கும்மி, ஊஞ்சல் பாட்டு, அம்மானை, குறவஞ்சி, பள்ளு ஆகிய நாட்டுப்புற இலக்கிய வகைகளில் சிறந்த பாடல்களாக அமைந்தன. தமிழ் இலக்கிய மரபில் சாதியின் பெயரால், பால் இனத்தின் பெயரால், ஒடுக்கப்படுதலுக்கு எதிரான ஆவேசக் குரலை இவர் பாடல்களில் காண்கிறோம். கவியரசர் பாரதியார் இவரிடமிருந்து மிகுந்த தாக்கம் பெற்றிருக்கின்றார். தீட்டு என்ற கருத்தாக்கத்திற்கு எதிராக இப்பெண் கலகக்குரல் எழுப்புகிறார். மனதிற்குள்ளே கருத்து நிலையில் தீட்டு இருக்கும் பொழுது, புறத்தில் உள்ள தீட்டு புனிதம் என்பது எப்படிப் பொருந்தும் என்று இவர் வினா எழுப்புகிறார். தமிழ் மரபில் சாதியின் பெயராலும், பெண்ணின் உடம்பை மையப்படுத்தியும் தீட்டு என்ற சொல்லில் ஒடுக்கும் பழக்கத்திற்கு எதிரான முதல் பெண்ணியக் கலகக்குரல் இவரிடம் தான் வெளிப்படுகிறது.
மேலே காட்டிய சான்றுகள் சிலவே. தமிழ் இலக்கிய பெரும் பரப்பில் இத்தகைய அறியப்படாத, பெரும் பாலானவர்களால் பதிவு செய்யப்படாத இலக்கியங்கள் ஏராளம் உள்ளன. ஒரே நூல் இரு வேறு புலவர்களால் இரு வேறு காலகட்டங்களில் படைக்கப்படுகின்றன. காலத்தால் முந்தியவருடைய படைப்பை பின் வருபவர் எந்த இடத்திலும் முன்னவரின் நூலை இருட்டடிப்பு செய்வதில் உள்ள அரசியல் ஆராய்ச்சிக்கு உரிய ஒன்று. சான்றாக 13-ஆம் நூற்றாண்டில் பெரும் பற்றுப் புலியூர் நம்பி பாடிய திருவிளையாடல் புராணம் காலத்தால் முந்தியது. 400 ஆண்டுகள் கழித்து பரஞ்சோதி பாடிய திருவிளையாடல் புராணத்தில் முந்திய நூலைப்பற்றிய குறிப்பே இல்லை. இதே போன்று நம் காலத்தில் கவிமணி ஆசிய ஜோதி பாடுவதற்கு 38 ஆண்டுகளுக்கு முன்பே ஆசிய ஜோதி என்ற பெயரில் அதே நூலை கவிதையாகப் பாடியுள்ளார். ஆனால் கவிமணியின் மொழியாக்கத்தில் அவரோ, அவருக்கு முன்னரோ வழங்கிய பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆராய்ச்சியின் நேர்மையை அவ்வளவு சுலபமாக நாம் தள்ள முடியாது. ஆனாலும் இதில் அந்த அய்யம் எழுகிறது. அ. மாதவய்யாவின் நெருங்கிய உறவினரான பே.நா. அப்புசாமி, வையாபுரிப்பிள்ளையின் இந்த நூலை பார்த்திருக்கவேண்டும். தெரிந்தே இது நிகழ்ந்ததா என்ற கேள்வி இப்போது எழுகிறது. தமிழ் இலக்கிய வரலாறு இப்படி விரிந்த பல தளங்களில் அமைய வேண்டும். அதற்கான ஒரு முன் அடி வைப்புத்தான் இந்தச் சிந்தனை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் இலக்கியம் - சில பதிவுகள் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இலக்கிய, தமிழ், நூற்றாண்டில், வரலாறு, அவர், வேண்டும், பாடிய, நூல், உள்ளது, தமிழில், ஒன்று, அத்வைத, புலவர், இல்லை, அடிப்படையில், மரபில், கொண்டு, நூற்றாண்டு, வேதாந்த, இதன், தொடங்கி, நூலில், புராணம், புலவர்களின், பதிவு, அந்த, நாம், பார்வை, குரல், இத்தகைய, காலத்தில், பாடல்கள், ஏராளமான, நூலை, மீண்டும், பார்க்கும், அத்வைதம், அனைவரும், தீட்டு, அந்தணர்கள், பெயரில், வேதாந்தம், காலம், பாடியுள்ளார், இவர், என்பது, வரலாற்று, சமூக, இதுவரை, வேளாளர்களின், இரண்டு, பல்வேறு, இலக்கியப், இவர்கள், பண்பாட்டு, சாதி, வேறுபாடு, காலத்தால், பெண், இருந்த, பெரும், எதிராக, எதிரான, அறியப்படாத, நூல்களில், நாட்டுப்புற, அற்ற, பாடினார், இந்நூல், பற்றிய, அறிகிறோம், நிலையில், ஆகும், தொடர்ந்து, நூலும், அளவில், இலக்கியங்கள், கவிதை, இந்தக், பட்டணார், போன்று, சரிதை, மரபு, வாழ்ந்த, இந்தச், தான், நாவலர்