முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » அணு ஆற்றல்: நேற்று-இன்று-நாளை
பொதுவான கட்டுரைகள் - அணு ஆற்றல்: நேற்று-இன்று-நாளை
- த. மாரிமுத்து
அணுக்கள் பிளந்தாலும் ஆற்றல், இணைந்தாலும் ஆற்றல். யுரேனியம், அணு கிரிப்டான், பேரியமாகப் பிளந்து ஆற்றல் வெளியாகிறது. கூடவே அணுக்கதிர் வீச்சும் உண்டு. பாற்கடலில் தோன்றிய அமுதமும் நஞ்சும் போல. இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுவாகி ஆற்றல் வரும். ஆனால், கதிர்வீச்சு இல்லை. மானுடம் இதை மனத்தில் தக்க வைத்தது. அணுப் பிளப்பில் அணுகுண்டும், அணுமின்னாற்றலும் கிடைக்கின்றன. அணு இணைப்பில் ஹைட்ரஜன் குண்டு மட்டும் தான்; அணு மின்னாற்றல் இல்லை. இதையும் மானுடம் மனத்தில் கொண்டது. எனவே, கதிர்வீச்சு இல்லாத சுத்தமான அணு மின்னாற்றல் வேண்டுமென எல்லாம் வல்ல இயற்கையிடம் மானுடம் வரம் கேட்டது. கேட்டவரம் கிடைக்குமா?
கதிரவன் களத்தில் மண்டிக் கிடக்கும் ஹைட்ரஜன் அணுக்கள், ஈர்ப்பு மற்றும் அழுத்தம் எனும் இரு எதிர் விசைகளுக்கு உட்பட்டு ஹீலியம் அணுக்களாகின்றன. பல்லாயிரம் ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பது போன்ற இந்நிகழ்வில் அளப்பறிய அணு ஆற்றல் உருவாகி கதிரகமெல்லாம் வெள்ளமாய்ப் பாய்கிறது. இதில் ஒரு சின்னஞ்சிறு பகுதி பூமியை நனைத்து ஒளியாய், வெயிலாய், வெப்பமாய், காற்றாய், மழையாய், இடி மின்னலாய் மாறுவது இயற்கையின் விந்தையாகும். நொடிக்கு நான்கு மில்லியன் டன் பொருண்மை அழிந்து ஆற்றலாக இறைத்தாலும், இன்றும் கதிரவன் ஒரு நடு வயது விண்மீன்தானாம். நமது வீட்டில், தாவரத்தாய் ஒளிச்சேர்க்கையால் நமக்கு உணவு சமைக்கவும், அவள் வெளியிடும் சுத்தமான பிராணவாயு நாம் சுவாசிக்கவும், அவள் தரும் மழைநீர் நாம் குடிக்கவும், ஓஸோன் படலக் குடையமைத்து நம் உயிர் காக்கவும் பயன்படுவது, பால் நினைந்தூட்டும் தாயினும் நனி சிறந்த கதிரவன் சதா உமிழும் அணு ஆற்றலே. ஆக, பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாழ்வது அணு ஆற்றல் மழையில் தான். விண்ணில் நிகழும் இவ்வணுவாற்றல் வித்தையை மண்ணில் காணத் துடிக்கிறான் மனிதன். அறிவியல் உலகில், மானுடப் பார்வையில், அணு ஆற்றல், நேற்று அழிவாய் வெடித்தது. இன்று ஆக்கமாய் ஒளிர்கிறது. நாளை அதிசயமாய் மலரும் என்பதில் ஐயமில்லை.
1938-ல் யுரேனிய அணுப் பிளப்பும், ஆற்றல் வெளியீடும், அரங்கேறி அணுயுகம் பிறந்தது. 1945-ல் அணு குண்டுகள் வெடித்தன. உலகமே அணுவைக் கண்டு அதிர்ச்சியுற்றது. ஆற்றல் தேட்டையில், அறிவியல் கண் வளர்ப்பில், புனல் மின்னாற்றலுக்கு அணை கட்டினான் மனிதன். சுற்றுச் சூழல் சீரழிந்தது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு கொண்டு அனல் மின் நிலையம் அமைத்தான். காற்று மண்டலமே நஞ்சானது. பூமியின் வெப்பநிலை உயர்ந்து பருவங்கள் தடம் மாறின. அணுமின் நிலையம் அமைத்தான். அணுக்கழிவின் கதிர்வீச்சு மனித இனத்திற்கே ஒரு கொல் கருவியானது.
அமெரிக்காவின் மூன்று மைல் தீவு (1979), ரஷியாவின் செர்னோபில் (1986) அணுமின் உலை விபத்துகள், நடக்காத மூன்றாம் உலகப் போரை ஞாபகப்படுத்தி உலகையே திகிலடையச் செய்தன. ஏழு மைல் ஆழமான பசிபிக்கடலின் தரையைத் தொட்டவன், ஐந்து மைல் உயரமான எவரெஸ்ட் மலையின் தலையைத் தொட்டவன், இரண்டு லட்சம் மைல் தொலைவான நிலாவில் உலா வந்தவன், அண்டத்தையே அளந்து கணக்கிட்டவன், ஒரு சின்னஞ் சிறு அணுவிற்கு அஞ்சி ஓடுவானா? இல்லவே இல்லை.
நேற்று விபத்துக்குள்ளான அணுமின் உலைகள் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவை. தொழில் நுட்பவளம் குறைந்தவை. கணினி கண்காணிப்பற்றவை. உலையின் உள்ளீடு கனமான ஈயம் மற்றும் தகரச் சுவர்களாலானது. இன்று அமையும் அணுமின் உலைகள் (கூடங்குளம் அணுமின் உலை) ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவை. உலையின் உள்ளீடு புதுமையான வலுவான கான்கிரீட் இரட்டைச் சுவர்களால் ஆனது. ஜெட் விமானம் விழுந்தாலும் உடையாது. உலையின் பக்கமெல்லாம் கணினிக் காவல். அணு உலையின் தணிப்பான், எதிர்முனைச் செயல்பாடு கொண்ட மென்னீராகும். உள்ளீடு வெப்பம் தவறுதலாய் உயர்ந்தாலும், அணுப்பிளப்பு வேகம் இயற்கையாய்க் குறைந்து உலையின் செயல்பாடு தானாக நின்றுவிடுமாம். மொத்தத்தில் தொழில்நுட்ப வளம் செறிந்தது.
நேற்று அணுக்கழிவை அப்பாவிகள் வாழும் ஆப்பிரிக்காவில் கொண்டு போய்ப் புதைத்தார்கள். பின்னர் பனிப்புலத்தில் புதைத்தார்கள். அணுக்கழிவு, கனத்தால் நழுவிக் கடல் பாறையைத் தொட்டு, நீரோட்டத்தால் அடித்துச் சென்று கிழக்கே ஜப்பான் கடல் மீனையும் மீனவர்களையும் பதம் பார்த்ததாம். ஐரோப்பியர்கள், மலைக் குகையில் அணுக்கழிவை சமாதி வைத்தார்கள். களிமண் களத்தில் போட்டுப் புதைத்தார்கள். இன்று நம் நாட்டு அணுவியல் விஞ்ஞானிகள் அதன் மறுசுழற்சி வித்தையைக் கண்டு கொண்டார்கள். எனவே, அணுக்கழிவு இன்று பணப்பொருள்; பயப்படத் தேவையில்லை. நாளை இறுதி நிலை அணுக்கழிவைப் படிகமாக்கி, மண்ணில் புதைத்து, கதிர் வீச்சாற்றலை வெப்பமாக்கிப் பயன் படுத்தும் ஓர் ஆய்வுத் திட்டமும் உண்டாம்.
யுரேனியமும், தோரியமும், நாளை தீர்ந்து போனால், அணு இணைப்பு அணுமின் ஆற்றல் தான் கைகொடுக்கும். ஹைட்ரஜன் வகையறாவான கனநீர் அணுக்களை இணைத்து மின் ஆற்றல் பெறும் டோகமாக் ஆய்வினை ரஷியா தனியாகவும் ஜப்பான், மத்திய ஐரோப்பிய நாடுகள் கூட்டாகவும் மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவும் இது போன்ற ஆய்வினை 2005-க்குள் முடிப்பதாகக் கூறுகிறது.
பூமியின் தரையை விட விண்வெளியில் கதிர் ஆற்றல் செறிவு 15 மடங்காகும். 35,000 கி.மீ. உயரத்தில் எட்டு சதுர கி.மீ. பரப்பில் வலை போன்ற ஆற்றல் துணைக்கோளை நிலைநிறுத்தி, கதிர் ஆற்றலைச் சேகரித்து, நுண்ணலையாக்கிப் பூமியில் குவித்து, அது மின்னாற்றலாக்கப்படும். நம்மை விட 250 மடங்கு தனிநபர் மின் நுகர்வு கொண்ட அமெரிக்காவிற்கு இது போன்று 30 யூனிட்கள் போதுமாம்.
டோகமாக் வெற்றி பெற்றால் கனநீர் நிறைந்த கடலெல்லாம் ஆற்றல் தோற்றுவாய். ஆற்றல் துணைக்கோள் பிறந்து விட்டால் விண்வெளியெல்லாம் ஆற்றல் மயமே.
பிரிட்டன் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் வெப்ப ஆற்றல் கலம் என்ற புதுமையான ஓர் ஆய்வு மௌனமாக நடக்கிறது. உட்செல்லும் ஆற்றலைப் போல் மூன்று மடங்கு ஆற்றல் வெளி வருகிறதாம். இந்நிகழ்வு குளிர் அணு இணைப்பாய் இருக்கலாம் என ஐயப்படுகிறார்கள். நாளைய கதிர்வீச்சில்லா சுத்தமான அணு ஆற்றலுக்கான எரிபொருள் ஹைட்ரஜனும் அதன் வகையறாவான டியுட்ரியம் மற்றும் ட்ரிஷ்யம் நிறைந்த கனநீர்தான். இன்றைய எரிவாயு சிலிண்டர் போன்று நாளை லேசர் யூனிட் உடைய கனநீர் ஆற்றல் கலம் அல்லது ஆற்றல் குப்பி விற்பனைக்கு வருமாம். வீட்டின் அடுப்பு எரிய, வீதியில் ஊர்தி செல்ல, விண்வெளியில் பறந்து செல்ல இவை பயன்படுமாம்.
அணுகுண்டு (கதிர்வீச்சால்) நின்று கொல்லும். (கதிர்வீச்சற்ற) ஹைட்ரஜன், கோபால்ட் குண்டுகள் அன்றே கொல்லும் பேரழிவு ஆயுதங்கள். இதனால் ஹைட்ரஜன் குண்டை சுத்தமான குண்டு என்பர். பாம்புகளில் நல்ல பாம்(பு) போல. தன்னிடமுள்ள ஏராளமான குண்டுகளால் அமெரிக்காவிற்கு இனி பயன் ஏதும் இல்லை என்கிறார்கள் பலர். ஆனால், நிறைய உண்டு என்கிறார், அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் டாக்டர் ஓநில். குண்டுகளை நிலாவிற்குக் கொண்டு போங்கள். குண்டு போட்டுப் பெருஞ்சுரங்கங்களைத் தோண்டி, தங்கம், வெள்ளிப் பாளங்களைப் பூமிக்குக் கொண்டு வாருங்கள் என்கிறார். நேற்று, புதிய பூமியிலிருந்து ஐரோப்பியர்கள் கொள்ளையாய் அள்ளி வந்ததைப்போல நாளை அமெரிக்கர்கள் (முன்னாள் ஐரோப்பியர்கள்) புதிய வானிலிருந்து அள்ளி வருவார்கள். குண்டைவிடப் பயங்கரமான பொருளாதார ஆயுதத்தால் நாளைய உலகை வெல்ல முனைவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு ஆற்றல்: நேற்று-இன்று-நாளை - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஆற்றல், ஹைட்ரஜன், அணுமின், நாளை, உலையின், இன்று, கொண்டு, மைல், நேற்று, சுத்தமான, இல்லை, உள்ளீடு, கதிர்வீச்சு, புதைத்தார்கள், ஐரோப்பியர்கள், கனநீர், கதிர், மின், நாம், குண்டுகள், அணுக்கள், தான், கதிரவன், குண்டு, மானுடம்