முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » காம்பே: கடலுக்கடியில் ஒரு கட்டுக்கதையா?
பொதுவான கட்டுரைகள் - காம்பே: கடலுக்கடியில் ஒரு கட்டுக்கதையா?
- சு.கி. ஜெயகரன்
காம்பே வளைகுடாவில், டாக்டர் கதிரொளியின் தலைமையில், சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டை அளந்து கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த தேசியக் கடல்வள நுட்ப ஆய்வு மையத்தின் ஆய்வுக் குழு, கடற்கரையிலிருந்து 30 கி.மீ. தள்ளி 30 - 40 மீ ஆழத்தில் புராதனச் சிதைவுகளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. அக்கண்டுபிடிப்பு பற்றிக் கடல்வள மேம்பாட்டுத் துறைக்குக் கூடுதல் பொறுப்பேற்றிருந்த அன்றைய மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, 2001 மே மாதம் ''காம்பே வளைகுடாவில் ஹரப்பா நாகரிகத்துக்கும் முற்பட்ட நகர்ப்புற நாகரிகக் காலத்திய கடலடிச் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன'' என்று அறிவித்தார். ''இதுவே உலகின் பழைய நாகரிகம்'' என்றும், ''உலக நாகரிகத்துக்கும் இந்தியா முன்னோடியா?'' என்ற கேள்விக்கு குஜராத் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 7500 வருடத்திய நகரம் விடை தரலாம்'' என்றும் ஆரம்பித்து இந்தியா டுடே (பிப்.13, 2002 இதழ்) காம்பே கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்ட சிதைவுகள் பற்றிய தூண்டிலில் சிக்கிய வரலாறு'' என்ற அகழ்வாராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டது. புதைந்து பட்ட புராதன நகரத்தின் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியிடப்பட்டன.
கதிரொளியின் ஆய்வுக்குழு பல வாரப் பணிகளுக்குப் பின் கடலடித்தளத்திலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களைச் சுரண்டி (Dredge) எடுத்து மேலே கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. அவற்றில் முக்கியமானவை ஓடுகள், ரத்தினக்கற்கள், செதுக்கப்பட்ட கல்லாயுதங்கள் , சிறிய சிலைகள், தந்தம், ஒரு மனிதத் தண்டுவட முதுகு எலும்பு தாடையெலும்பு, பல் மற்றும் ஒரு பழம் மரத்துண்டு, மூழ்கிய ஒரு ஆற்றின் கரையில் ஏறத்தாழ 9 கி.மீ. நீளத்திற்குப் பரவியிருந்த புராதனச் சிதைவுகளை இந்த ஆய்வுக் கப்பலின் எதிரொலிப்பான் பதிவு செய்த சமிக்ஞைகளின் அடிப்படையில் கடலடியில் 40 மீ ஆழத்தில் ஒரு புதையுண்ட நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மொஹஞ்சதாரோ அகழாய்வில் கண்டது போன்ற 200 மீX 40 மீ அளவு கொண்ட செவ்வக மேடைகள் ஏறத்தாழ 183 மீ. நீளத்திற்குப் பரவியிருந்த களிமண்ணால் செய்யப்பட்ட தானியக் குதிர்கள் அணைக்கட்டு போன்ற அமைப்புகள், இவற்றினருகே வரிசையாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளின் அஸ்திவாரங்கள், களிமண் பாவிய சாலைகள் போன்றவற்றையும் கண்டறிந்ததாகக் கூறப்பட்டது. இப்பகுதியில் கடலடியிலிருந்த அழுத்தமான நீரோட்டத்தாலும், கடலடி இருண்டிருந்ததாலும், கலங்கியிருந்ததாலும் தானியங்கி முக்குளிப்பான் மூலம் படம் எடுக்கும் முயற்சி தோல்வியுற்றதாகக் கூறப்பட்டது. இவ்வளவு ஆழத்தில் உள்ள கடலடிச் சிதிலங்களை முக்குளித்து ஆராய்வது கடலடி தொல்லியல் அகழாய்வில் பயிற்சி பெற்றவர்களுக்கும் கடினமான பணியாகும். கடலடி அகழாய்வுகள் பூமியின் மேற்பரப்பில் நடத்தப்படும் ஆய்வுகள் போன்று எளிதானவையல்ல. நிலத்தின் மேல் பொதுவாக அழிந்து பட்ட குடியிருப்புகள் இருந்த பகுதிகள் சாம்பல் நிற மண் மேடுகளாக இருக்கும். (கொங்கு நாட்டில் இவற்றை நத்தம் அல்லது நத்தமேடு எனக் குறிப்பிடுவர்.) அங்கு அகழாய்வுகள் செய்யும்போது அடுக்கு அடுக்காகப் படிவங்கள் அகழப்பட்டு அவற்றில் புதையுண்டிருக்கும் தொல்லுயிரெச்சங்கள், மட்கலங்கள், கல் அல்லது இரும்பு ஆயுதங்கள் குறியிடப்பட்டு அவை படிந்துள்ள படிவங்களின் கனம், அமைப்பு போன்ற தகவல்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்படும். அகழப்படும் படிவங்களை ஒரு பெட்டியில் அடுக்கப்பட்ட துணிகளுக்கு ஒப்பிடலாம். பெட்டியைத் திறந்து துணிகளை எடுக்கும் போது கடைசியாக அடுக்கப்பட்ட துணி முதலாவதாகவும், முதலாவதாக அடுக்கப்பட்ட துணி கடைசியிலும் எடுக்கப்படும். இதை படிவயியலில் அடுக்கும் சீர் என்பர். அதுபோலவே அகழாய்வுகளில் கடைசியில் புதையுண்ட பண்பாட்டுப் பிரிவில் உள்ள தொல் பொருட்கள் முதலாவதாகவும், மூத்த பண்பாட்டுப் பிரிவைச் சார்ந்த தொல்பொருட்கள் கடைசியாகவும் அகழப்படும். ஆனால் காம்பே கண்டுபிடிப்பிலோ தொல்பொருட்கள் கடலின் அடித்தளத்திலிருந்து சுரண்டியெடுக்கப்பட்டவை. அடித்தளத்தில் சிதறிக் சுரண்டியெடுக்கப்பட்டவை. அடிதளத்தில் சிதறிக் கிடந்தன என்பதால் அவற்றில் அடுக்கும் நீர் என்று ஒன்றில்லை பல கால கட்டத்தைச் சார்ந்த தொல் பொருட்கள் சிதறிக்கிடக்கும் நிலையில் அவை அனைத்தையும் சமகாலத்தவையாகக் கருதக்கூடாது.
கடலடியில் தொல் பொருட்களைக் கண்டுபிடித்தால் அப்பகுதி குறியிடப்பட்டு, படங்கள், எடுத்த பின் தொல்பொருட்கள் மேலே கொண்டுவரப்பட்டு அவை பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். கடலடிப் படிவங்கள் படிந்த காலத்தை நிர்ணயிக்கக் கடலடியில் ஆய்வுத் துளைகளிட்டு, படிவங்களின் சிறு பகுதிகளையெடுத்து அவற்றில் படிந்துள்ள மகரந்தத்தூள் (Pollens) கடல் வாழ் நுண்ணுயிர்களின் தொல்லெச்சங்கள் (Micro - Fossils) சிப்பிகள், பவளப்பாறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவை படிந்த காலம், படிந்த விதம் பற்றி ஆராயப்படும். காம்பே பகுதியில் இதுவரை அத்தகைய ஆய்வுகளேதும் மேற்கொள்ளப்படவில்லை. ஆழ்கடல் முக்குளிப்பு நடத்தி எந்தத் தொல்லியலாய்வாளரும் புதைந்து கிடக்கும் புராதனச் சிதைவுகளை நேரில் பார்க்கவில்லை. கதிரொளியின் ஆய்வுக்குழுவில் தொல்லியலாய்வாளர் எவரும் பங்கேற்கவில்லை. தொல்லியலாய்வாளரின் பரிசீலனை மற்றும் ஆங்கீகாரம் இன்றி சில நாளிதழ்களும், சில வெகுஜன வார இதழ்களும், பரவலாக இணையதளங்களும் இக் கண்டுபிடிப்பு பற்றி எழுதின. வேதகாலத்தில் மறைந்த ஒரு நாகரிகத்தின் காலக்குறியீடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் சித்தரிக்கப்பட்டன. இவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தொல் பொருட்கள் பற்றித் தொல்லியல துறை ஏன் மௌனம் சாதிக்கிறது, ஏன் இது வரை தொல்லியல் துறைசார் ஆய்வு இதழ்களில் இவை பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்படவில்லை?
ஆதிக்குடியேற்றங்கள், அன்று அகன்றிருந்த, இன்று கடலடியில் மூழ்கியுள்ள பகுதிகள் வழியாக ஏற்பட்டன. எனவே காம்பே கடலடியில் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தில் குடியிருப்புகளின் சிதைவுகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. காம்பே கடலடியில் புராதனச் சிதைவுகள் உள்ளதையும், கதிரொளியின் ஆய்வுக்குழு தொல்பொருட்கள் பலவற்றைக் கடலடியிலிருந்து சுரண்டியெடுத்ததையும் தொல்லியல் ஆய்வாளர்கள் எவரும் மறுக்கவில்லை. ஆனால் கண்டுபிடிப்பின் சில அம்சங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
1. கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் புராதனச் சிதைவுகள் எந்தக் காலத்தைச் சார்ந்தவை என்பது உறுதியாக நிர்ணயிக்கப்படாத நிலைமையில் அதை எப்படி ஹரப்பா நாகரிகத்துக்கும் முற்பட்டது என்று கூற முடியும்?
2. எதிரொலிப்பான் சமிக்ஞைகளை வைத்து ஊகிக்கப்பட்ட அமைப்புகள் அனைத்தும் அங்கு வாழ்ந்தவர் கட்டிய அமைப்புகள் என்று திட்டமாகக் கூறமுடியுமா? அவற்றையே ஆதாரமாகக் கொண்டு, கடலடிச் சிதைவுகள் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் சிதைவுகள் எனலாமா?.
3. சுரண்டியெடுக்கப்பட்ட பொருட்களில் கணிசமானவை இயற்கையிலே உருவாகியவை. அவை அனைத்தையும் காம்பேயில் அன்று வாழ்ந்தவர் செய்தவை எனப் பாவிப்பது அறிவுக்கு ஒவ்வாதது.
ஹரப்பா புராதனச் சிதைவுகள் பற்றிப் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பேராசிரியரான முனைவர் ஷெரின் ரத்னாகர் காம்பே கண்டுபிடிப்புகள் பற்றிய சில மறுப்புகளைத் தெரிவிக்கிறார்: 1. காம்போ கடலடி புரானச் சிதைவுகள் உள்ள இடத்தில் கடலடி ஆய்வின் ஆரம்பப் பணிகளான முக்குளிப்பு, முக்குளித்துப் படமெடுத்தல், தீர்வைகள், கடலடிகள், ஆய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. 2. பொதுவாக புராதனச் சிதைவுகளில் காணப்படும் காலக் குறியீடுகளான கல் அல்லது இரும்பு ஆய்தங்கள் மட்பானைகள் மணிகள் மற்றம் ஆபரணங்கள் முக்கியமானவை.
ஒரு பண்பாட்டுப் பிரிவைக் காட்டும் மேற்கூறிய குறியீடுகளில் அக்கால கட்டத்திற்கே உரித்தான சில தனித் தன்மைகளைக் காணலாம். காம்பே கடலடித் தொல் பொருட்களில் அத்தகைய தனித்தன்மையைக் காண முடியவில்லை. 3. எடுக்கப்பட்ட ''கல்லாயுதங்கள்'' எனக் கருதப்படும் பொருட்களில் பல, உண்மையிலேயே கல்லாயுதங்களா என்பது விவாதத்திற்குரியது. அவை பலவற்றில் கூழாங்கற்களை மற்றொரு கல்லால் உடைத்ததால் ஏற்படும் காயங்களும் சிராய்ப்புகளும் இல்லை.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் முன்னாள் தலைவரும், இந்தியத் தொல்லியல் (ASI) துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், காம்பே தொல்பொருட்களைப் பார்த்துப் பரிசீலித்த போராசிரியருமான ராமனின் கருத்துப்படி, 1. ஜாஸ்பர் மற்றும் கேட்டினால் கெய்யப்பட்ட துளைகள் கொண்ட கல் மணிகள் மனிதனால் செய்யப்பட்டவை என்றாலும் ''கல்மணிகள்'' எனக் கருதப்படுபவை அனைத்தும் அவ்வகை கல் மணிகள் அல்ல அவற்றில் பல இயற்கையாக உருவாகியவை, அவை ஆற்றினால் உருட்டிக் கொண்டுவரப்பட்ட கூழாங்கற்கள்.
2. கடலடியில் சமதளம், குளம் போன்ற அமைப்புகள் இருப்பதாகத் தெரிகின்றன. ஆனால் தூண்கள் போலத் தெரிபவை இயற்கையின் உருவானவைகளாக இருக்கலாம். மேலும் காம்பே கண்டுபிடிப்பு ஹரப்பா நாகரிகத்துக்கு முற்பட்டது என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுவது தொல்லியல் ஆய்வுப் பணியைச் சிறுமைப்படுத்துவது போலாகும் என்று தனது மன வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
வதோரா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் பழம் வரலாற்றுப் பேராசிரியை ஜெயா மேனன், விவசாயம், குடியிருப்பு மற்றும் விலங்குகள் வளர்ப்பு உருவாகிய காலம், புதிய கற்காலம், ஹரப்பா நாகரிகமோ, வெண்கல யுகத்தைச் சார்ந்த நகர்ப்புற நாகரிகம். காம்பே கண்டுபிடிப்பு காலத்தைப் புதிய கற்காலத்திற்குக் கொண்டு சென்று பின்னர், அதை நகர்ப்புற நாகரிகம் என்று குறிப்பிடுவது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கடலடி உலகம் எனும் பிரபல நூலை எழுதிய கிரஹாம் ஹேன் காக் என்பவரின் இணையத்தில் காம்பேயில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் படங்களுடன் அவை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவர் பிரசுரித்த காம்பே நாகரிகத்தவர் செய்ததாகக் கூறப்படும். தொல் பொருட்கள் பலவற்றைக் கடலடியில் இயற்கையிலே உருவாகியவை (Geoliths) என்று கூறுகிறார். பால்ஹெயின்ரிச் என்ற புவியியலாய்வாளர் கடலடிப் படிவங்கள் பற்றிய ஆய்வில் புலமை கொண்ட இவர், காம்பே பதக்கங்கள் என கிரஹாம்ஹேன்காக் அழைக்கும் துளையுடன் கூடிய ஓடுகள் எவ்வாறு கடலடியில் இயற்கையாக உருவாகும் என்பதை விளக்கியுள்ளார்.
இவர் கருத்துப்படி, ''காம்பே பகுதியில் பழங்காலத் தொட்டு கடல் வாணிகம் நடைபெற்றது. பல காலகட்டங்களில் பயணித்த கப்பல்கள் மூழ்கியிருக்கக்கூடும். மூழ்கிய கப்பல்களிலிருந்த பொருட்கள், மாண்டவர்களின் எலும்புகள் கடலடியில் சிதறியிருக்கும்''. மேலும் கடல் கொந்தளிப்பால் கடலரிப்புகள் கடற்கரையோரக் குடியிருப்புகளை அழித்துவிட அங்கு மக்கள் உபயோகித்த பொருட்கள், மாண்டவர்களின் உடல்கள் கடலின் ஆழம் நோக்கி விரையும் நீரோட்டத்தால் கடலடியில் போய்ச்சேரும் வாய்ப்புகளையும் குறிப்பிடுகிறார். கிரஹாம் ஹேன்காக் இரத்தினக் கூழங்கற்களைத் தொல்பொருட்களாகக் கூறுவதையும், ஒரு மரத்துண்டை வைத்து காம்பே நாகரிகத்தின் காலத்தைக் கணித்ததையும் கடுமையாக எதிர்க்கிறார். பால் ஹெயின்ரிச் காம்பே வளைகுடாப் பகுதியில் கடலினடியில் காணப்படும் புராதனச் சிதைவுகளின் கால நிர்ணயம் எடுக்கப்பட்ட 25 செ.மீ நீளமும் 20செ.மீ விட்டமும் கொண்ட ஒரே ஒரு மரத்துண்டை ஆதாரமாகக் கொண்டது.
இந்தியா டுடே, ''உப்பு நீரில் ஊறிக் காலப்போக்கில் கல்லாகிய மரத்துண்டு'' என்று குறிப்பிட்டது. ஃபாசில் என்ற ஆங்கிலப் பதம் பிழையாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதைக் கடலில் ஊறிய ஒரு பழங்கட்டை அல்லது மாற்றமடையா தொல்லுயிரெச்சம் என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் கல்லாக மாறிய மரத்தை கார்பன் முறையில் கால நிர்ணயம் செய்யவியலாது. இந்த மரத்துண்டைக் காலக்கணிப்பு செய்த பீர்பால் சாஹனி தொல் தாவர எச்ச ஆய்வுக் கூடம் அதன் வயது 9,500 ஆண்டுகள் என்றது. அதே மரத்துண்டை ஆராய்ந்த ஹைதராபாத்திலுள்ள புவி - பொதியியில் (NGRI) ஆய்வுக்கூடம் அது 7500 ஆண்டுகளுக்கு முந்தியது எனக் கூறியது. பொதுவாக கார்பன் கால நிர்ணயத்தில் இவ்வளவு வேறுபாட இருக்கக் கூடாது எடுக்கப்பட்ட மரத்துண்டு 7500 - 9500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கொண்டாலும், அது காம்பே புராதனச் சிதைவுகளின் காலத்தைச் சார்ந்ததா என்பது அடிப்படைக் கேள்வி. கண்டு பிடிப்பு நடந்த இடமோ, ஒரு பழம் நதிக்கரை! அங்கு பழைய படிவங்களிலிருந்து புதையுண்ட மரக்கட்டைகள் உருண்டுவர வாய்ப்புகளுண்டு.
எடுக்கப்பட்ட மரத்துண்டு கடலினடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டதல்ல, சுரண்டியெடுக்கப்பட்டது. கடல்மட்டம் இன்று இருப்பதைவிட 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 800 மீ தாழ்வாக இருந்தது. பின்னர் உலகம் வெம்மையடைய துருவப் பனிப்பரப்புகள் உருகிக் கடல் மட்டம் மெதுவாக உயர்ந்து, கடற்புறப் பகுதிகளை அழித்தது. கடற்புறத்திலிருந்த காடுகள் நீரில் மூழ்கின. அவற்றில் பழங்கட்டைகளைக் காணுவது பொதுவானதுதான் என்றும் ஒரு கட்டையின் வயதை வைத்து அக்காலத்தே ஒரு பெரும் நாகரிகம் தழைத்தது என்று கூறுவது அறிவுடையமையன்று என்றும் கூறுகிறார். கார்பன் ஆய்வுக்கூடங்களை இந்தியாவில் நிறுவிய மூத்த ஆய்வாளரும் பழங்கால ஆய்வுக்குழுவின் தலைவருமான அகர்வால். பேராசிரியர் இராமனின் கருத்துப்படி ''நாகரிகங்கள் தனித்துத் தோன்றுவதில்லை. அவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை காம்பே நாகரிகம் ஹரப்பா நாகரிகத்துக்கும் முற்பட்டது என்றால் அதன் பின்வரும் நாகரிகத்தின் காலக் குறியீடுகள் சிலவாவது இருக்க வேண்டும். ஹரப்பா அகழாய்வில் முத்திரைகள் கறுப்பு - சிவப்பு மட்கலங்கள் பல கிட்டியுள்ளன. இவை ஒன்றும் காம்பே கண்டுபிடிப்பில் காணப்படவில்லை. காம்பே கண்டு பிடிப்பை முன்வைத்து, அதன் காலம், நாகரிகம் பற்றி மிகைப் படுத்திக் கூறுவதின் அரசியல் ஆதாயம் என்ன?
இதுவரை வரலாற்று காலத்துக்கும் முற்பட்ட காலம் பற்றிய உண்மைகளைத் திருத்தி எழுத வேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது ஒரு கோஷ்டி. எப்படி காம்பே கண்டுபிடிப்பு அரசியல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வாளர் ரத்னாகர் கோடிட்டுக் காட்டுகிறார், ''உலகிலேயே சுமேரிய நாகரிகம் தான் பழமையானது என்பது காவிப்பட்டாளத்தை வெறுப்படையச் செய்துள்ளது. புகழ்மிகு புராதனச் சிதைவுகள் இவர்களுக்கு இந்தியாவில் இருக்க வேண்டும். ஏனெனில் மொஹஞ்சதரோ, ஹரப்பா மற்றும் மெகர்கார் அனைத்தும் பாகிஸ்தானில் உள்ளன. இவர்கள் சிந்துவெளி நாகரிகத்தை அதன் மூலத்தை அறியும் முகமாக, அதற்கும் முற்பட்ட நாகரிகங்களைத் தேடிக்கொண்டிருந்தனர். வசதியாகக் கிடைத்தது காம்பே கண்டுபுடிப்பு'' என்கிறார்.
இதே கருத்தை வலியுறுத்தும் ஆய்வாளர் அகர்வால் ''இவர்களுக்குக் காம்பே கண்டுபிடிப்பை ஹரப்பா நாகரிகத்துக்கும் முற்பட்டது என்று கூறுவது எளிது. ஏனெனில் அவர்கள் இப்படியொன்றைக் கூறுவதற்கான வாய்ப்புதேடி ஏங்கிக் கொண்டிருந்தனர். காம்பே நாகரிகம் ஹரப்பா நாகரிகத்துக்கும் முற்பட்டது என்று கூறும் போது ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியேயிருந்து வந்தவர்கள் இல்லை என்றும், அவர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும் இந்தியாவே உலக நாகரிகத்தின் தொட்டில் என்றும் கூற உதவும்'' என்கிறார். மேலும் தொல்லியல் ஆய்வாளரின் அங்கீகாரம் பெறாமல் காம்பே நாகரிகம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது முறையல்ல என்கிறார்.
காம்பே கண்டுபிடிப்புகள் பற்றித் தேவையான தடயங்களையும் ஆதாரங்களையும் சேகரித்த பின், அத்துறைசார் மூத்த ஆய்வாளர் அவற்றை முன்வைத்து, அவர்களது பரிசீலனைக்குப் பின், அத்துறைசார் ஆய்வு இதழ்களில் வெளியிட்ட பின் வெகுஜன ஊடகங்களில் வெளியிடுவது நியதி. ஆரூடத்தைப் பட்டப்படிப்புக்கு வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் அரசியல்வாதி ஒருவர் தொல்லியல் கண்டுபிடிப்பு பற்றியும் அதன் மிகைப்படுத்தப்பட்ட காலம் பற்றியும் அதை ஆதாரமாக வைத்து உலகிலேயே மூத்த நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தது. பெரும்பான்மையான தொல்லியல் ஆய்வாளரின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. அவ்வாறு கூறுமளவுக்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை. காம்பே கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவடையாதவை.
நன்றி: உயிர்மை
தேடல் தொடர்பான தகவல்கள்:
காம்பே: கடலுக்கடியில் ஒரு கட்டுக்கதையா? - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - காம்பே, தொல்லியல், கடலடியில், புராதனச், ஹரப்பா, சிதைவுகள், நாகரிகம், என்றும், முற்பட்டது, தொல், கடலடி, பற்றிய, கண்டுபிடிப்பு, பொருட்கள், பின், நாகரிகத்துக்கும், அவற்றில், தொல்பொருட்கள், பற்றி, என்பது, வேண்டும், நாகரிகத்தின், காலம், அல்லது, ஆண்டுகளுக்கு, ஆய்வுகள், வைத்து, மூத்த, கடல், எடுக்கப்பட்ட, அங்கு, எனக், கதிரொளியின், கொண்டு, மரத்துண்டு, நகர்ப்புற, மேலும், அமைப்புகள், ஆய்வுக், முற்பட்ட, கொண்ட, பல்கலைக்கழகத்தின், மணிகள், அனைத்தும், ஆழத்தில், பொருட்களில், உருவாகியவை, மரத்துண்டை, ஆய்வாளர், என்கிறார், கார்பன், ஏனெனில், கருத்துப்படி, ஆய்வு, இல்லை, இந்தியா, பண்பாட்டுப், புதையுண்ட, பழம், அடுக்கப்பட்ட, படிவங்கள், பொதுவாக, அகழாய்வில், சார்ந்த, கூறப்பட்டது, இதுவரை, உள்ள, கடலடிச், பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட, படிந்த, கண்டு, இருக்க