முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » சினிமா மட்டுமா சீரழிக்கிறது?
பொதுவான கட்டுரைகள் - சினிமா மட்டுமா சீரழிக்கிறது?
மாணவர்களின் முதல் கடமை படிப்பது, இரண்டாவது கடமை படிப்பது, மூன்றாவது கடமை படிப்பது என்று சொன்னார் லெனின். மாணவர்களை அந்த மூன்று கடமைகளையும் செய்ய விடாமல் தான் எத்தனை குறுக்கீடுகள்?
தற்கால மாணவர்களை எல்லோருங் குறை கூறுவது வழக்கமாயிருந்து வருகிறது. அவர்கள் ஒரு கண்ணாடி போல் இருக்கிறார்கள்; தற்கால நிலைமை எல்லாம் அப்படியே அந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. ஆகவே அவர்களைக் குறை கூறுவது பாவம் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்களிடம் சிறந்த பண்புகள் இல்லை என்றால் அது அவர்களுடைய குற்ற மல்ல; பெற்றோரும் ஆசிரியரும் அரசுமே குற்றவாளிகள் ஆவர் என்று கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பாகவே காந்தியடிகள் சொல்லி இருப்பது, காலங் கடந்த பொன் மொழியாக அல்லவா நிலைத்திருக்கிறது?
மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழிப்பதில் சினிமாவுக்கு மட்டும் தான் பங்கு என்றில்லை. சமூகத்தில் கண்ணுக் கெட்டிய தூரம் வரை ஒவ்வோர் அங்கமும் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகின்றது.
நாட்டுப் பற்றை வளர்க்கும் எந்த உதாரணமும் நடை முறையில் இல்லை. பாதுகாப்புத் தளவாடங்களோ ராணுவ வீரர்களுக்கு சவப் பெட்டிகளோ வாங்கினால் கூட ஊழல் செய்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஆதாயம் வேண்டு மென்றால் மாணவர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தேர்வுத் தாளைத் திருத்தும் பணியைக் கூடப் பணயம் வைத்துப் போராடத் தயங்குவதில்லை. அரசியல் தலைவர்கள் எவராவது வழி நடத்தும் தகுதியோடு இருக்கின்றார்களா?
தாய்மொழிக் கல்வி ஆர்வம் வளர்க்க, தரமான எதிர் காலத்துக்கு அரசால் உத்தரவாதம் அளிக்க இயலாத நிலை. குழந்தைப் பருவத்திலேயே தாய்மொழியை விட்டு அந்நியப்பட்டுப் போகும் மாணவன் வேறு எந்த இலக்கியம் படித்து மண்ணின் மீது பிடிப்பு உண்டாக்கிக் கொள்ள இயலும்? கல்வித் திட்டங்களும் மேற் படிப்புப் போட்டிகளும் அவனைப் 18 வயது வரை படிப்பு டியூஷன் தவிர வேறு சிந்தனையில ஈடுபடவே முடியாமல் செய்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பே இயந்திர மயமாக்கலுக்கு எதிர்ப்பு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கணினி மயமாக்கலுக்கும் எதிர்ப்பு வந்தது. இவை வேலை வாய்ப்புகளைப் பெருக்குமே தவிர குறைக்காது என்று சொன்ன அறிஞர் பெருமக்கள் இப்போது மௌனம் சாதிக்கிறார்கள். இன்றைய மாணவனுக்கு வேலை உத்தரவாதம் இல்லை.
ஓர் ஆட்சியில் போடப் படும் அத்தனை கிரிமினல் குற்ற வழக்குகளும் அடுத்த ஆட்சியில் தள்ளு படியாகின்றன. சீட்டுக் கம்பெனி நடத்துபவர்கள் பணத்துடன் தலை மறைவு ஆகிறார்கள். அப்போதைக்குப் பெரிதாக வரும் செய்திகள் அந்தப் பணம் என்னவானது? பாதிப் படைந்தவர்களின் கதி என்ன ஆனது என்பது குறித்து ஆராய்வதில்லை. புதிய செய்திகளுக்குத் தாவி விடுகிறார்கள். இது தான் இன்றைய சமூகம். இதன் எதிர்காலம் தான் மாணவர்களின் கையில் இருப்பதாக முழங்குகிறோம்.
தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதை ஆட்சேபித்து கர்நாடகத்தில் மாணவர்கள் போராட்டம். தமிழ் நாட்டில் பல் கலைக்கழகத்துடன் இணைவதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாணவர்கள் போராட்டம். எல்லாம் முடிந்து கணக்குப் பார்த்தால் மாணவர்கள் பெற்றது ஏதும் இருக்காது; இழந்தது பாடங்களாக இருக்கும்.
அவர்களுடைய பழைய போரட்டங்களைக் கொஞ்சம் அலசி ஆராய்ந்தார்கள் என்றால் அவற்றில் பலன் பெற்றவர்கள் யாரோ வேறாகத் தான் இருந்தது தெள்ளெனத் தெரிய வரும்.
அப்படியானால் மாணவர்கள் போராடவே கூடாதா? அவர்கள் தானே எதிர்கால நாட்டினை உருவாக்கப் போகிறவர்கள்; நிர்வகிக்கப் போகிறவர்கள்? வெள்ளையர்களை விரட்ட வேண்டிய கட்டாயத்தில் போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந்த கால கட்டத்தில் கூட காந்தியடிகள் மாணவர்களுக்குச் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? 'பாட சாலைகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் நேரம் போக மாணவர்களுக்கு வேண்டிய அவகாசம் இருக்கிறது. இப்படிக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அவர்கள் கூட்டம் நடத்தலாம்; தேசியக் கொள்கைகளிலும் போராட்டங்களிலும் தங்களுக் குள்ள அனுதாபத்தை ஒழுங்கான முறையில் வெளியிடலாம்; வேண்டுமானால் ஊர்வலமும் வரலாம்.
அவர் போன்ற நேர்மையான தலைவர்கள் கிட்டத் தட்ட இல்லாத கால கட்டத்தில் வாழும் மாணவர்களின் பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. படிக்கும் பருவத்தில் வகுப்புகளும் பாடங்களும் மாணவர்களுக்கு உரிமைப் பட்டவை. எக்காரணம் கொண்டும் அவற்றை இழக்கச் சம்மதிக்காதீர்கள். உங்களுடைய பாடங்களும் வகுப்புகளும் எந்த வகையிலும் கெடாதவாறு தொடர் போராட்டமாக நடத்தும் படி ஆசிரியர்களை வற்புறுத்துவதில் தான் மாணவர்களின் வெற்றி அடங்கி இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சினிமா மட்டுமா சீரழிக்கிறது? - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தான், மாணவர்களின், மாணவர்கள், இருக்கிறது, எந்த, இல்லை, கடமை, படிப்பது, ஆண்டுகளுக்கு