முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி
பொதுவான கட்டுரைகள் - குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி
மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்பதே பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இக்கல்வி நிலையங்களில் சேர வேண்டும் என்ற விருப்பத்துடன் தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.4 லட்சம் மாணவர்கள் தொழிற் கல்வி நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் சாமானிய மக்களுக்கும் இக்கல்வி நிறுவனங்களில் உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறை பல ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், தொழிற் கல்வி மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் அவ்வப்போது கொண்டு வரப்படும் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் காரணமாகவும், அதை எதிர்த்துத் தொடரப்படும் நீதிமன்ற வழக்குகள் காரணமாகவும் மாணவர்களுக்கு நிச்சயமற்ற நிலையும் தேவையற்ற தாமதங்களும் ஏற்பட்டு வருகின்றன. ஒரு பிரச்சினைக்காகத் தொடரப்படும் வழக்கில் வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்புகள் காரணமாகப் புதிய நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு அரசு ஆளாக வேண்டியுள்ளது.
சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு அல்லது சுயநிதிக் கல்லூரிகள் அமைப்பு சார்பில் நுழைவுத் தேர்வு நடத்தியே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சுயநிதித் தொழிற் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், அது வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுயநிதிக் கல்லூரிகளின் கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கும் மற்றொரு நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கும் இந்நுழைவுத் தேர்வை ஏற்பதாகப் பல சுயநிதிக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. அகில இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க இருப்பதாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில சுயநிதிக் கல்லூரிகள் தெரிவித்துள்ளன. தனியே நுழைவுத் தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் ஒரு பிரிவினர் தற்போது அறிவித்துள்ளனர். மாநிலத்தில் ஒரே நுழைவுத் தேர்வு கடைப்பிடிக்கப்பட்டால் மாணவர்களுக்கு நல்லது. இந்த ஆண்டு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் எத்தகைய கட்டண முறை கடைப்பிடிக்கப்படும் என்பதும் இன்னமும் தெரியாத நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தமிழகத்தில் தொழிற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ கொள்கை அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இதுபோன்ற நிச்சயமற்ற நிலை தொடர்ந்தால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டிலும் காலி இடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. வழக்குகள், பிரச்சினைகள் காரணமாக ஆண்டுதோறும் எத்தகைய முறையில் மாணவர் சேர்க்கை இருக்கப்போகிறது என்று தெரியாமல் மாணவர்கள் அவதிக்கு ஆளாகும் நிலை முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தொடர்கிறது. எந்த ஒரு புதிய விதிமுறை அறிவிப்பையும் ஆண்டு இறுதிக்குள் வெளியிட்டுவிட வேண்டும். அதன் பிறகு அறிவிக்கப்படும் விதிமுறைகளை அடுத்த கல்வியாண்டிலிருந்தே அமல்படுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நுழைவுத், பொறியியல், கல்லூரிகளில், வேண்டும், தேர்வு, சுயநிதிக், சேர்க்கை, மாணவர், தேர்வை, மாணவர்கள், தொழிற், கல்லூரிகள், கடந்த, கொண்டு, தமிழகத்தில்