முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » ஒரு பஸ் பயணத்தின் போது...
பொதுவான கட்டுரைகள் - ஒரு பஸ் பயணத்தின் போது...

- தோப்பில் முஹம்மது மீரான்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் முஹம்மது மீரான் அவர்கள். "சாய்வு நாற்காலி" என்ற அவரின் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
ஒரு கடலோர கிராமத்தின் கதை மீரானின் முதல் நாவல். அன்புக்கு முதுமை இல்லை என்ற தலைப்பில் இவரது சிறுகதை தொகுப்பும் வெளியாகி இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த தோப்பில் மீரானின் கதைகள் எப்போதுமே கிராமிய மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைவதாக இருக்கும். கிராம மக்கள் தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக எடுத்துரைப்பதில் வல்லவர் மீரான்.
இனி பஸ் பயணத்தின் போது... என்ற அவருடைய சிறுகதையை இங்கே பார்ப்போம்.
வீட்டிலிருந்து புறப்படும் போது மணி எட்டு. டவுன் பஸ் பிடிக்க ஓடி நடப்பதற்கு எடுக்கும் நேரம், கால் களைக்க டவுன் பஸ் வருவதை எதிர்நோக்கி நின்று வீணாகும் நேரம், ஏறிய பிறகு குண்டும் குழியும் நிறைந்த நெடுஞ்சாலை ஓரங்களில் நிற்கும் பயணிகளை பொறுக்கியும், பொறுக்காமலும் மெல்ல நகர்ந்து பெரிய பஸ் நிலையம் போய்ச் சேருவதற்கு ஆகும் நேரம், எல்லாம் மனசில் கணக்குப் பெருக்கிப் பார்த்தபடி ஒரே ஓட்டமாக ஓடினேன், வேப்ப மர நிழல் நோக்கி.
அதுதான் பஸ் ஸ்டாப்.
மூச்சிறைக்க ஓடியும் டவுன் பஸ் வரவில்லை. ஒரு வேளை இரயில் கேட் அடைத்திருக்கலாம். பாசஞ்சர் செல்லும் நேரம்.
பயணிகளின் உச்சி வியர்க்காமலிருக்க மன்னர் காலத்தில் நடப்பட்ட முதிய வேப்பமரக் கொப்புகள் விரித்த நிழலில் ஒதுங்கி பஸ் வரும் திசைக்கு நேராக பயணிகள் கண்களை நட்டுக் கொண்டு நின்றனர். ஒரே நிலையாக நின்றதால் களைத்த காலாற ஒரு சிமெண்ட் பெஞ்சுகூட போடாத அரசின் மெத்தனப் போக்கைப் பற்றியும், மாநகராட்சி குழாயில் குடிதண்ணீர் விடாத பொறுப்பின்மையைப் பற்றியும், முன் அறிவிப்பில்லாமல் அடிக்கடி மணிக்கணக்கில் மின்வெட்டு ஏற்படுவதால் நேரும் பல வகையான சிரமங்களைப் பற்றியும் சிலர் பேசிக் கொள்ள மற்றவர்கள் தலை அசைத்து ஆமோதித்தனர். இவையெல்லாம் தெரிந்த விசயம் தானே என்ற பாவனையில் பஸ் வரும் திசையைப் பார்த்து நின்றேன்.
ரேசன் கடைகளிலிருந்து கிடைக்கும் உழுத்துப்போன அரிசியைப் பற்றியும் மண்ணெண்ணெயை வாங்கும் நேரம் கள்ள மார்க்கெட் பேர்வழிகள் நடத்தும் அடிதடிகளையும், பண்டங்களின் எடை அளவு குறைவதைப் பற்றியும் விவாதித்து களைப்பைப் போக்க முயன்றனர் பயணிகள். கேட்டு அலுத்தும் சலித்தும் விட்ட விஷயமானதால் அதற்கு செவி சாய்க்காமல் பஸ் வரும் திசையைப் பார்த்துக் கொண்டே எனக்குள் ஒரே கொந்தளிப்பு. 11 மணிக்கு முன் டாக்டரை எப்படியும் பார்த்தாக வேண்டும். 11 மணி வரை தான் இருப்பதாக தொலைபேசியில் அப்பாய்ன்ட்மெண்டு தரும்போது சொன்னார், வெளிநாட்டில் பணிபுரியும் மகனுடன் இரண்டு மாதம் தங்கி வருவதற்காக அன்று மதியம் 1 மணிக்கு புறப்படுகிறார். இரத்தத்தில் 'புரோத்ராம்பின் டைம்' பார்த்து ரிசல்ட் அவரிடம் காட்டி அதற்குரிய மருந்து குறித்து வாங்கி இரத்தம் கட்டி பிடிக்காமல் பார்த்து உயிர் காக்க வேண்டும். மூளை நரம்பில் இரத்தம் உறைந்ததால் கடந்த ஆண்டு ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்து போனபோது பட்ட அவஸ்தைச் சொல்லி மாளாது. அதிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.
இந்நிலையில் இன்று டாக்டரை சந்திக்க இயலாவிட்டால்!
அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து இரத்தத்தை இளக வைப்பதற்குரிய மருந்தை தொடர்ந்து அருந்த வேண்டுமென எச்சரிக்கை செய்ததிலிருந்து உடல் விஷயத்தில் ரொம்பவும் கவனம்.
நெளிவு சுளிவுகள் இல்லாமல் நீண்டு தெரியும் நெடுஞ்சாலையில் பஸ் வரும் திசையில் பார்வை எட்டும் புள்ளியிலிருந்து பின்வாங்காத கண்களுக்கு வேறு ஒரு புள்ளி நகர்வதாகத் தோன்றியது. உடன், வேட்டியை மடித்து இறுக்கிக் கட்டிக் கொண்டு பஸ்ஸில் நெரித்து ஏறுவதற்கான ஆயத்தத்தோடு நின்றேன். வேப்பமரம் கடந்து கிழக்கு மாற செல்லும் பஸ்ஸில் ஓடி குதித்து ஏற என்னைப்போல் அனைவரும் ஆயத்தமானதை உணர்ந்து சோர்ந்து போனேன். இந்த வீர சூரர்களை எப்படி முந்த முடியும்?
ஒலி எழுப்பிக் கொண்டு வரும் பஸ் வேப்பமரத்தடியில் நின்று கொஞ்சம் பயணிகளை ஏற்றுகையில் முண்டியடித்து அதில் தொற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு. நாலைந்து பயணிகளுடன் வந்த பஸ் அங்கு நிற்காமல் விரசாகப் போய்விட்டது ஏமாற்றத்தை தந்தது. பஸ்ஸை முறைத்தேன் - எவ்வளவு சீட் கெடக்குது!
என் பார்வையின் உட்பொருள் உணர்ந்து அருகில் நின்றவர் சொன்னார் - 'அது பாஸ்ட் பாசஞ்சர்'. மணிக்கணக்கில் எதிர்பார்த்துக் களைத்துப்போன கர்ப்பிணிகள். கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த தாய்மார்கள், மருந்துச் சீட்டுகள் வைத்திருந்த நோயாளிகள், இரயிலைப் பிடிக்க, அரசு விரைவுப் பேருந்துகளைப் பிடிக்க, அரசு விரைவுப் பேருந்துகளைப் பிடிக்க முன் பதிவு செய்திருந்த தொலைதூரப் பயணிகள் எல்லாம் நிறுத்தாமல் போன டிரைவரை கண்டமேனிக்கு ஏசிக்கொட்டினார்கள்.
"நாற்காலி பழையதுதானப்பா, ஆளுதான் மாறியிருக்கு" என்றார் கதர்சட்டை போட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் கையிலிருந்த காம்பு வளைந்த குடையை தரையில் இடித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் மீது ஏற்பட்ட கோபத்தைத் தணித்துக் கொண்டார்.
"அய்யாவுக்கு எங்கே போவணும்?" என்றேன் அவரிடம், தணிந்த குரலில்.
"சனியன் பிடிச்ச பஸ் வந்தா தானே? வராட்டா எங்கே போவது? சுடுகாட்டுக்கா?" என்று வெடித்துச் சிதறினார் தியாகி.
"அந்தா வருது."
ஆங்காங்கே உட்கார்ந்தும் கூட்டம் பிரிந்தும் நின்ற பயணிகள் பஸ்ஸிற்குள் மல்லுக்கட்டி ஏற தயாரெடுத்துக் குழுமினர்.
வேகமாக வந்த பஸ் ஏச்சுக் காட்டிவிட்டு வந்த வேகத்தில் கிழக்குமாறப் பாய்ந்தது. அதிலும் சில பயணிகளே காணப்பட்டனர். பஸ் போன திசையை வெறித்துப் பார்த்த என்னிடம் ஒருவர் சொன்னார் - "சார், அது பாயிண்ட் டு பாயிண்ட்". "நிப்பாட்டி பத்து பேரை ஏத்திட்டு போனாதான் என்ன? அவன் தலையிலேயா சுமக்கான்?" ஒரு பெண்ணாப் பிறந்தவள் கேட்ட கேள்விக்கு யாரும் பதிலே பேசவில்லை.
வேப்பமரத்தோடு சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த கட்சிக் கரை வேட்டி கட்டிய தொண்டரிடம் நேரம் கேட்டேன்.
எட்டே முக்கால்.
அந்நேரம் பஸ் கிடைத்து பெரிய பஸ் நிலையம் போய் அங்கிருந்து வெளியூர் பஸ்ஸை பிடித்துப் போனால் டாக்டரிடம் பிளட் ரிசல்ட்டை காட்டலாம். ஜேப்பில் டவுன் பஸ்ஸிற்கு தனியாக வைத்திருந்த இரண்டு ரூபாய் நாணயமும் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொண்டேன்.
மேற்கிலிருந்து தூள் கிளப்பிய படி டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது ஆறுதலைத் தந்தது. இதில் ஏறிப் போனாலும் டாக்டரை சந்திக்க முடியும்.
வந்து கொண்டிருந்த பஸ்ஸின் வேகம் குறைந்தது. சற்று விலகி ஒருவரை இறக்கிவிட்டதைக் கண்டதும் கூட்டம் அப்படியே அங்கு விரைந்தது. கூட்டம் போய் எட்டுவதற்குள் புகை துப்பிய பஸ் கண்ணிலிருந்து விட்டிலாய்ப் பறந்தது.
'மொபசல் பஸ்' என்றார்கள்.
அங்குமிங்கும் ஓடிக் களைத்துப்போன பயணிகள் மீண்டும் வேப்பமரத்தடிக்கு வந்தனர்.
"இதுக்குத்தானாப்பா போராடி சுதந்திரம் வாங்கினோம்" என்று கேட்டு சலித்துக் கொண்டார் தியாகி. ஓடியதால் ஏற்பட்ட மூச்சு வாங்கல் அடங்கவில்லை அவருக்கும் எனக்கும்.
நேரம் நகர நகர கூட்டம் கூடிவிட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் என மூன்று பஸ்ஸ•க்கு. கிழக்குமாறப் போக வேண்டியவர்கள் மேற்கும், மேற்குமாறப் போக வேண்டியவர்கள் கிழக்கும், கண்களைப் பாய்ச்சி நின்றனர்.
போதாத குறைக்கு ஓயாத மழையும் சிணுங்கிக் கொண்டிருந்தது. வேப்பமரத்தை ஒட்டி செத்துப் போன மாஜி நகரசபை உறுப்பினரின் கடும் முயற்சியில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி, ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத இற்றுப்போன அந்தக் குப்பைத் தொட்டி நிறைந்து கவிந்து கழிவு பொருட்கள் சுற்றும் பரவிக் கிடந்தன. பன்றிகளும், நாய்களும் காகங்களும் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தன. அதிலிருந்து வீசிய துர்வாடையும் அங்கு பரவியது.
தோளில் நீட்டித் தொங்கப்போட்டிருந்த கட்சிச் சால்வை முனையால் மூக்கைப் பொத்திக் கொண்டு எதிர்க்கட்சித் தொண்டர் ஒருவர் திரும்பி நின்று, "என்னய்யா நிர்வாகம்?" என்று கேட்டார். பிறகு என்னைப் பார்த்து, "ஒரு தட்டி போர்டு வைக்க வேண்டும்" என்றார்.
இதற்கிடையில் கீழ்திசையிலிருந்து ஒரு பஸ் வருவதைக் கண்டதும் அவர் சனத்திரளில் கரைந்தார். எப்படியேனும் இதற்குள் ஏறியாக வேண்டுமென்ற வெறி எனக்கு.
ஒலி எழுப்பிக் கொண்டு வந்த பஸ் வந்ததைவிட அதிக வேகத்தில் குதித்துப் பாய்ந்தது. ஏமாந்து நின்றேன்.
எல்.எஸ்.எஸ். என்று யாரோ சொன்னதைக் கேட்டதும் தியாகிக்கு கோபம் பொத்துவிட்டது.
"போயும் போயும் இப்படி சீரழியவா அண்ணு போராடி ஜெயிலுக்கு போனோம்." ஏதோ தெரியாமல் தவறு செய்துவிட்டது போல் ஏமாற்றத்துடன் கூறினார்.
கையில் குடை இல்லாததால் சிணுசிணுத்த மழைத் தூறல் உச்சந்தலையில் கொள்ளாமலிருக்க மரத்தடியிலுள்ள பெட்டிக் கடையின் கீழ் ஒரு ஆட்டுக் குட்டியைப் போல் கொடுகி நின்றேன். அங்க நின்றிருந்தாலும் நெளிவு சுளிவுகள் இல்லாத நெடுஞ்சாலையின் கீழ்முனை புகை மூட்டம் போல் கண்ணுக்குத் தெரியும். பார்வை எட்டும் தொலைவில் ஒரு புள்ளியின் அசைவு தெரிந்தது. கூர்ந்து நோக்கினேன். பஸ்ஸே தான்; டவுன் பஸ்!
'அந்தா வருது' ஒருவர் சுட்டிச் சொன்னதும் திரள் அங்கு ஆவலோடு நோக்கியது. அப்பாடா! மூச்சு நேரானது. இது கிடைக்காமல் போனால் குறித்த நேரத்தில் டாக்டரை சந்திக்க முடியாது. எப்படியும் ஏறியாக வேண்டும். எந்த 'ஈவு சீவு' மில்லாத பேர்வழி. கொடுத்த நேரம் தவறிச் செல்லும் நோயாளிகளை வாசல் காப்பவன் உள்ளே செல்ல விடமாட்டான். நேர விசயத்தில் டாக்டர் அவ்வளவு கண்டிப்பானவர்.
உடலில் ஒரு பக்கம் செயலிழந்து போனபோது உடனடியாக அந்த டாக்டரை பார்க்க கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம் என்றார்கள். நோய் விசாரிக்க வந்த பழக்கக்காரர்கள். வெளியூர் என்றும், பயணம் செய்கையில் நோய் தாக்கியது என்றும் அதனால் அப்பாய்ன்ட்மெண்ட் வாங்க இயலவில்லை என்றும் கெஞ்சியபோது தோன்றிய ஈவு இரக்கத்தினால் பரிசோதனை செய்தார். மறுபடியும் போய் காட்டச் செல்லும்போது எச்சரித்தார். 'அப்பாய்ன்ட்மெண்ட் வாங்காமல் வரக்கூடாது.' 'பெயர் கூப்பிட்டால் ஆள் இருக்கணும். இல்லேண்ணா திரும்ப கூப்பிட மாட்டாங்க' என்று வந்திருந்த நோயாளிகள் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது. 11 மணிக்கு முன் அங்கு செல்லத் தவறினால் இனி இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் அவரைச் சந்திக்க முடியும். இதயத்தோடு சம்பந்தப் பட்ட நரம்பு நோயானதால் எந்நேரமும் எதுவும் நிகழலாம். நினைப்பே நடுக்கத்தைத் தந்தது! சிறு குழந்தைகள்! மனைவி! முதியவர்களான தாய் தந்தையர்கள்!!
விலாபுடைக்க வந்த பஸ்ஸிலிருந்து சிலர் இறங்குவதற்கும் வெடுக்கென்று பஸ்ஸை எடுப்பதற்கும் இடைப்பட்ட நொடிக்குள் அறிவுக்குப் புலப்படாத ஒரு சக்தி கைக்கூடவும், படிக்கட்டில் நின்றிருந்தவர்களை நெரித்து விலக்கிக் கொண்டு எப்படியோ நுழைந்து விட்டேன்.
கண்மூடித்தனமாக திடமென பஸ்ஸை எடுத்ததால் தடுமாறி விழுந்தவர்களை நெரிசலில் பின் கண்ணாடி வழியாக பார்க்க முடியவில்லை.
'சில்லரை கொடுங்க...' யாரையோ கவ்வினார் நடத்துநர்.
"எத்தனையோ பஸ் போவுது, அதிலே ஏறி போவ வேண்டியதுதானே" என்று எரிச்சல்பட்டு நான் நீட்டிய இரண்டு ரூபாய் நாணயத்தைப் பிடுங்கிக் கொண்டு டிக்கெட்டைக் கையில் திணித்தார். அந்த சொர சொரப்பான செய்கை என்னைக் கோபமூட்டியது. ஆனால், வாய் திறக்க உரிமை மறுக்கப்பட்ட அந்த சூழலில், இறக்கிவிட்டு விடுவாரோ என்ற பய உணர்வு எனக்குள் ஏற்பட்டதால் மவுனமாகி விட்டேன்.
பெரிய பஸ் நிலையத்தில் இறங்கியதும், ஏதோ பஸ்ஸை பிடிக்க விழுந்தடிக்க ஓடியவரிடம் மணி கேட்டதற்கு, 9.30 என்று கூறி அவர் ஓடிக் கொண்டிருந்தார். நான் ஏறவேண்டிய பாயிண்ட் டூ பாயிண்ட் புறப்பட தயாராகி ஒலி எழுப்பிக் கொண்டு மெல்ல உருண்டது. விழுந்தடிக்க எட்டிப்போய் பின் பக்க நீளவாட்டு இருக்கையில் எஞ்சியிருந்த ஒரே சீட்டில் சடக்கென்று உட்கார்ந்து கொண்டேன்.
ஓட்டுநரின் பின்பக்கம் நின்று முதல் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் போது, "இடையில் எங்கும் நிற்காது" என்று நடத்துநர் அதட்டி எச்சரித்தது என்னைப் பார்த்து, விரைவாகச் சென்றால் சற்று முன்னரே போய் உட்கார்ந்தால் பெயர் கூட்பிட்டதும் ஓடி உள்ளே செல்லலாமே என்ற எண்ணத்தில் அதை அதட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு டிக்கெட் கொடுக்கும் போதும் என்னவெல்லாமோ சொல்லி பயணிகளை அடக்கி ஆண்டார் நடத்துநர்.
எங்கும் நிற்காது என்று ஏறும் போது என்னைப் பார்த்து எச்சரித்த நடத்துநர் சிடுமூஞ்சுடன், 'எங்கே போவணும்' என்று எரிச்சல்பட்டு என் பக்கம் வரும்போது பஸ் நகர எல்லையிலுள்ள பொறியியல் கல்லூரியைத் தாண்டி வெகுதூரம் சென்று விட்டிருந்தது.
டாக்டரை அவசரமாக பார்க்க வேண்டி வந்ததால் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து கடன் பெற்ற ரூபாய் 150 இரண்டு நோட்டுகளாக ஜேப்பிற்குள் இருந்தது. ஜேப்பியிலிருந்து பணம் எடுக்குமுன் நடத்துநர் போட்ட அலறலில் நடுங்கி விட்டேன்.
'சொல்லுமய்யா...'
போக வேண்டிய இடத்தை நடுங்கும் குரலில் சொல்லி 50 ரூபாய் நோட்டை நீட்டினேன்.
'சில்லரை குடும்.'
'இல்லையய்யா.'
'அப்பம் இறங்கும்.'
'அய்யா டாக்டரை 11 மணிக்கு சந்திக்கணும். அவர் இண்ணு வெளி நாடு போறாரய்யா.'
"நீர் யாரையும் போய் பாரும். அதுக்கு நா என்னய்யா வேணும்? சில்லரை இருந்தா குடும். இல்லேண்ணா எறங்கும்." என்ன செய்வதென்று அறியாது சுற்று முற்றும் பார்த்தேன். பரிச்சயமான முகம் ஏதுமில்லை. எதுவும் அறியாமலும், பத்திரிகை வாசிப்பதில் கவனம் செலுத்தியும் உட்கார்ந்து கொண்டிருந்த பிற பயணிகள் சக பயணியின் இக்கட்டை கண்டு கொள்ளவில்லை. பல முறை சில பயணிகளுக்கு இப்படிப்பட்ட இக்கட்டான சூழல் உண்டானபோது எதுவும் தெரியாத பாவனையில் பயணம் செய்த எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மன அவலம் தான் அன்று அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்?
டவுன் பஸ்ஸிற்காக ஓடிய வெப்புராளத்தில் சில்லரை மாற்ற தவறிவிட்ட மடமையை நினைத்து நொந்து கொண்டு கெஞ்சினேன்.
"அய்யா, எறங்கும்போது மீதி தந்தா போதும்."
"பாக்கி எழுதித்தர முடியாது. சில்லரை இருக்கா! இல்லேண்ணா எறங்கி நடயும்."
நடத்துநர் உடும்பு பிடியாகப் பிடித்தார், "சில்லரை இல்லையா" என் இளைய மகன்கூட இவ்வளவு பணிவாக என் முன்னால் நின்றதில்லை. அவ்வளவு பணிவாக நின்று கெஞ்ச வேண்டிய இக்கட்டு.
நீண்ட விசில் முழங்கியதும், பஸ் சடக்கென்று நின்றது.
"வந்து தொலையானுவளே"
வயது முதிர்ச்சிக்கு கிடைக்க வேண்டிய மதிப்புகள் உடைந்து தூளானதும் எழும்பினேன். சுற்றும் பார்வையை ஓட்டினேன். உணர்ச்சி மரத்துப்போன முகங்களில் ஓட்டிக் கொண்டிருந்த கண்கள் என்னை வேடிக்கை பார்த்தன. சாலை ஓர வெட்டவெளியில் காய்த்த புல் மேயும் கொல்லி மாடுகளுக்கு நேராக சில கண்கள் திரும்பிக் கொண்டன.
"எறங்கும் ஒய்" தயங்கியதைக் கண்டதும் கத்தினார்.
எஜமான கட்டளைக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாத பணிவு உணர்வோடு ஒரு காலை படிக்கட்டில் வைத்ததும் அவர் சொன்னது காதில் விழுந்தது.
'அம்பது ரூபாக்கே நோட்டும் தூக்கிட்டு வந்திருக்கானுவோ. அப்பன் ஊட்டு பஸ்ஸ•னு நெனப்பு. சரியான சில்லரை கொடுக்க வேண்டும் எண்ணு ஒலக்கபோல எழுதியிருக்குது கண்ணுக்கு தெரியல்லியா?'
மறுகாலை தரையில் வைக்கு முன் இரட்டை விசில் உயர்ந்தது. பஸ் குதித்தோடியது.
மழைச் சிணுங்கல் ஓய்ந்து வெயில் மூத்துப்போன சாலை ஓரங்களில் ஒதுங்க நிழல் மரங்களை காணவில்லை. டவுன் பஸ் தொடும் எல்லையைத் தாண்டி விட்டிருந்த அந்த இடத்தில், மனித நடமாட்டங்கள் தெரியவில்லை. பாரம் ஏறிய லாரிகள், காருகள், இரு சக்கர வாகனங்கள், நிப்பாட்டாத பஸ்கள் அங்குமிங்கும் தொங்கலோட்டம் ஓடிக் கொண்டிருந்தேன்.
இனி ஏதானாலும் டாக்டரை சந்திக்க முடியாதபடி பெருவழி ஆதாரமான அவஸ்தை! திரும்பி செல்ல வழி காணவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக தொடராக வந்த பஸ்களுக்கு கை நீட்டினேன்... கார்களுக்கு ... லாரிகளுக்கு இரு சக்கர வாகனங்களுக்கு. வந்ததைவிட வேகமாய் ஓட்டிச் சென்றார்கள். பஸ் கொள்ளையும், வழிப்பறியும் தினசரி செய்தி என்பதால்.
நடந்து தளர்ந்தபோது வெயிலில் சுட்ட ஒரு மைல்கல் மீது அதன் சூட்டைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்து கொண்டேன்.
"எதுக்கு உட்காந்திருக்கீரும்."
கரகரத்த குரல் கேட்டு குனிந்த தலையை உயர்த்தினேன். பயமூட்டும் மீசை வைத்த தடிமாடன் ஒருவன் காலை ஊன்றி சைக்கிளில் உட்கார்ந்தபடி கேட்டபோது குலை நடுங்கினேன். ஜேப்பியில் 150 இருக்கிறது! தட்டிப் பறிக்கவா?
காய்ந்த நாவால் எதனால் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறேன் என்று விளக்கினேன்.
"பின்னாலே உட்காரும்".
வேண்டாமென சொல்வதற்கான மனநிலை அப்போது எனக்கு இல்லை. எப்படியும் அங்கிருந்து இடம் பெயர்ந்தால் போதும் என் நிலை. உள் நடுங்க அவர் பின்னால் நான் உட்கார, அவர் சைக்கிள் மிதித்தார். அவர் முதுகோடு முகம் ஒட்டி இருந்ததால் வயல் சகதியின் வாடை அவர் உடம்பிலிருந்து வீசிக் கொண்டிருந்தது. அந்நேரம் அருவருப்பைத் தரவில்லை. சைக்கிள் மிதிக்க மிதிக்க சொன்னார்.
"மீசை இல்லாமல் மொட்டையா நடந்தா ஏமாளிண்ணு நெனச்சு ரொம்ப குதிரை ஏறுவானுவோ. அதுக்குத்தான் மீசையை நீட்டி வச்சிருக்கேன். இப்போ, இப்படியெல்லாம் பந்தா காட்டினாத்தான் வாழலாம்."
மாநகராட்சி எல்லையிலுள்ள பெட்ரோல் பங்கை கண்டபோது தான் நிம்மதி மூச்சு வந்தது.
"நான் இங்கே எறங்குறேன், டவுன் பஸ் வரும்."
"பேசாம உட்காரும்" வேகமாக மிதித்து என்னை பெரிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார்.
ரொம்பவும் தளர்ந்து போயிருந்தேன். அப்படி வெயில்!
"அண்ணே ஒரு காப்பி?"
"வயலுக்கு தண்ணி பாய்ச்சப் போனவன், ஒம்மொ இருப்பு கண்டப்போ சகிக்கல்ல; அதுதான் ஒம்மெ ஏத்தீட்டு வந்தேன். தாயமாட நேரமில்லை. நான்போறேன்."
சட்டை அணியாமல் வட்டத் தலைப்பாகை கட்டிய அந்த மெலிந்த உருவம், சாலையை குறுக்கே முறித்து கடந்து வாகனக் கடலில் மூழ்கியது. அவர் உடம்பிலிருந்து முகர்ந்த வாடை! அதுதான் மனித வாடை!
'தனலட்சுமி'க்கு நேராக நடந்தேன். உட்கார்ந்த இடத்தில் மேஜை, மீது எனக்கு முன் பெரிய வாழை இலையும் தண்ணீர் கோப்பையும் இருந்தன.
"இட்லி?"
"இல்லை சாப்பாடுதான்."
பையன் சொல்லும் போது பார்வை கல்லாக்கு நேராக சென்றது. கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் யாரையோ புன்முறுவலோடு வரவேற்பதாகத் தெரிந்தது.
நடுவில் என்னை இறக்கிவிட்ட நடத்துநரும், அவருடன் ஓட்டுநரும் வருகிறார்கள்.
கன்னத்தில் கறுப்பு உண்ணியுள்ள அதே நடத்துநர்! பணப்பையைத் திறந்தார். உள்ளிருந்து எடுத்து ஒரு பெரிய சில்லரை பொட்டலம் கல்லாவில் கொடுத்துவிட்டு கை அலம்ப உள்ளே சென்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரு பஸ் பயணத்தின் போது... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ", அவர், கொண்டு, டவுன், சில்லரை, நேரம், டாக்டரை, நடத்துநர், பெரிய, வந்த, முன், பயணிகள், வரும், பார்த்து, இரண்டு, எனக்கு, அங்கு, பஸ்ஸை, போய், அந்த, போது, பிடிக்க, சந்திக்க, பற்றியும், நின்று, கொண்டிருந்த, நின்றேன், மணிக்கு, கூட்டம், நேராக, நான், ஒருவர், வேண்டும், தான், சொன்னார், ரூபாய், மூச்சு, வாடை, உள்ளே, என்னைப், போல், பார்க்க, எதுவும், உட்கார்ந்து, வேண்டிய, போதும், ஓடிக், இல்லை, என்றும், இல்லேண்ணா, விட்டேன், என்னை, தியாகி, பார்வை, முடியும், எழுப்பிக், சொல்லி, எப்படியும், அதுதான், செல்லும், கேட்டு, மீரான், தந்தது, கொண்டேன், வந்து, கொண்டிருந்தது, பாயிண்ட், எங்கே, அரசு, பயணிகளை, மீது, கண்டதும்