முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » தேயலாமா நம் தேசிய உணர்வு
பொதுவான கட்டுரைகள் - தேயலாமா நம் தேசிய உணர்வு
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்கள் வார நாள்களில் வந்தால், ஐயோ, வெறும் கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக ஒரு நாள் அலுவலகம், கல்லூரிக்குப் போக வேண்டுமே! ஒரு அரை மணி நேர விழாவுக்காக ஒரு நாள் மெனக்கெட வேண்டுமா? என்று பெரியவர்களும் ஒரு சாக்லேட்தான் தருவார்கள் அதற்காக பள்ளிக்குப்போக வேண்டுமா? என்று மாணவர்களும் சலித்துக்கொள்கின்றனர். இந்தத் தினங்கள் திங்களன்று வந்தால் வெள்ளி இரவே ஊருக்குப் போகலாம்; வெள்ளியன்று வந்தால் வியாழன் இரவு பயணப்படலாம். மூன்று நாள்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை கிட்டும் என்ற சந்தோஷம்.
ஒவ்வோர் ஆண்டும் புது ஆண்டுக் காலண்டரில் பண்டிகைகளும், சுதந்திர, குடியரசு தினங்களும் என்றைக்கு வருகின்றன, எப்போது விடுமுறை எடுக்கலாம், எப்போது அவற்றை வறையறுக்கப்பட்ட விடுமுறை நாளோடு இணைத்து எடுக்கலாம் என்று பார்த்து வைத்துக்கொள்கிறோம். நம் எண்ண ஓட்டம் இப்படி இருக்க, ஞாயிறு அன்று தேசிய தினம் வந்துவிட்டால் எத்தனைப் புலம்பல்கள்? மற்ற அலுவலகங்கள் என்றால் தொலைகிறார்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயமாக வந்தாக வேண்டும்.
தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெகுவாகக் குறைந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் லௌகீக வாழ்க்கை சுகத்திற்காக நியாயங்களும் தர்மங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் ஒழுக்கத்தை நேர் செய்தாக வேண்டும். இன்றைய இளைஞர்களின் உள்ளத்தில் அயல்நாடு போகும் கனவு மட்டுமே உள்ளது. இந்தத் தேசத்தின் மீது எந்தப் பிடிப்பும் இல்லை அவர்களுக்கு! சுதந்திரப் போராட்டத்தின் வலிகளையும் வேதனைகளையும் சோகங்களையும் அறியாதவர்கள்; கண்ணீராலும் செந்நீராலும் வளர்க்கப்பட்டது இந்த சுதந்தரச் செடி என்பதை உணராதவர்கள். பெற்றவளின் வலியை எந்தப் பிள்ளைதான் உணருகிறது? எனவே சுதந்தர தினமும், குடியரசு தினமும் அவர்களைப் பொறுத்தவரை ஒரு சடங்கு, அவ்வளவே. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இன்றைக்கு அவர்கள் காணும் தலைமையில் காந்தி, நேரு, காமராஜர் போன்ற முன்னுதாரணங்கள் இல்லையே? தன் வசதிக்காக, தேசத்தையே அடகு வைக்கும் தலைவர்கள், மக்கள் நலனைப் புறக்கணித்து வோட்டு வங்கிக்காகச் செயல்படும் தலைவர்கள் - இவர்களையே பார்த்து, ஒரு நல்ல அரசியல் தலைவரின் இலக்கணம் என்ன என்பதையே தெரியாதவர்கள். அவர்களின் இந்த எண்ணத்தையே போக்குவது நம் கடமை.
நம் தலைநகர் புது தில்லியிலும் மற்ற மாநிலத் தலைநகரங்களிலும் மிகச் சிறப்பாக இந்த இரண்டு கொண்டாட்டங்களும் நடத்தப்படுகின்றன. எத்தனை பிரம்மாண்டமான ஏற்பாடுகள்! வருடா வருடம் புதிய கரு, புதிய முயற்சிகள், ஆனால் அசுர உழைப்பு! எவ்வளவு நாள்கள் திட்டமிட்டிருக்க வேண்டும்? பள்ளிக் குழந்தைகளின் விதவிதமான நடனங்கள், வண்ண வண்ண உடைகள்; அந்தச் சிட்டுகள் லயம் பிசகாமல், தாளம் தப்பாமல் ஒன்று போல் செய்யும் அழகு; சூரிய காந்திப் பூக்களாக மலரும் மொட்டுகள்; சிறகை விரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்; பளபளக்கும் உடைகள் - எல்லாமே கவினுறு காட்சிகள்தான். இவ்வாறு பயிற்சி அளிக்க அந்த ஆசிரியர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்? நம் முப்படை வீரர்களும் மிடுக்காக, ஏறுபோல் பீடுநடை போடும் காட்சியின் கம்பீரமே தனி. அதைக் காணும் ஒவ்வோர் இளைஞனுக்கும் தானும் ராணுவசேவை புரிய வேண்டும் என்று அந்த ஒரு கணத்தில் மட்டுமாவது தோன்றியே தீரும்.
இவ்வளவையும் ஒளிபரப்புச் செய்கின்றனர். ஆனால் எத்தனை பேர் பார்க்கின்றனர்? பள்ளி செல்லும் பிள்ளைகளால் பார்க்க முடியாது, தொடர் பார்க்கும் பெண்களும் பார்க்க மாட்டார்கள். இன்னும் சிலர் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக, சேனல் சேனலாகத் தாவுவார்கள். மொத்தத்தில் இந்நிகழ்ச்சிகளைத் தயார் செய்ய எடுத்துக்கொண்ட காலம், செலவு, சிரமம் ஆகியவற்றிற்கான பலன் ஏதுமில்லை.
எனவே அன்று எல்லாத் தொலைக்காட்சி சேனல்களும் வேறு எந்த நிகழ்ச்சியையும் போடாமல், குடியரசு, சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முழுதும் முடியும் வரை அதைத்தான் ஒளிபரப்ப வேண்டும். தங்களுடைய சிறப்பு நிகழ்ச்சிகளை அதற்குப் பின் ஒளிபரப்புச் செய்ய வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றலாம். இன்னொன்று அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடாமல் வேலை நாள்களாகக் கொள்ளவேண்டும். ஆனால் முதுகு வளையும் புத்தகச் சுமையையும் மனம் நிறையப் பயத்தையும் வெறுப்பையும் சுமந்து கொண்டு செல்லாமல் குதூகலமாகச் செல்ல வேண்டும். காலையில் கொடியேற்றம் முடிந்தபின் கலைந்து செல்லாமல் தேசிய உணர்வை ஊட்டும் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அன்றைய தினம் ஆடல், பாடல் கொண்டாட்டங்கள் எல்லாம் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம், நம் அரசியல் அமைப்புச் சட்டம், அதன் பிரிவுகள், தேசத் தலைவர்கள் பற்றியதாகவே இருக்க வேண்டும்.
நம் சுதந்திரப் போரின் கண்ணீர் கதைகளை அவர்கள் கேட்கட்கும். அந்தந்தப் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அழைத்து வந்து அவர்களை உரை நிகழ்த்தச் சொன்னால், அவர்கள் பட்ட கஷ்டங்களையும் செய்த தியாகங்களையும் தொலைத்த இளமையையும் இழந்த உறவுகளையும் பற்றி இவர்கள் நேரிடையாகக் கேட்டால், பெரிய மனமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அந்தத் தியாகிகளைக் கௌரவிக்கும்போது, பெரிசு என்று ஒதுக்கப்பட்ட தாங்கள் மதிக்கப்படுவதை எண்ணி மகிழ்ந்து போவார்கள்.
காலையில் பார்க்க முடியாதவர்களுக்கா இந்த நிகழ்ச்சிகளை மாலையிலும் மறு ஒளிபரப்புச் செய்யலாம். தனியார் தொலைக்காட்சிகளையும் நிர்பந்திக்கலாம்.
படம் முடிந்தவுடன் திரையரங்குகளில் முன்பெல்லாம் தேசிய கீதம் போட்டார்கள். தற்போது இல்லை. காரணம் 3 மணி நேரம் அமர்ந்து படம் பார்ப்பவர்களால், 3 நிமிடம் நம் தேசிய கொடிக்காக நின்று மரியாதை செலுத்த முடியவில்லை?
ஒரு சிறிய ஆறுதல் என்னவென்றால், அடுக்குமாடி குடியிருப்பினரும் காலனி வாசிகளும் சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டையும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். குழந்தைகளிடையே கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், சிற்றுண்டி என ஜமாய்க்கிறார்கள்.
படிப்பறிவில்லாத மக்களை விட்டுவிடுவோம். இந்தத் தேசம் வளர்த்துவிட்ட, பாரதத் தாய் ஊட்டி வளர்த்த படித்த மக்களும் இப்படித்தானே உள்ளனர். எனவே, பெரியவர்களை விட்டு விடுவோம். நம் புனர் நிர்மாணப் பணியைக் குழந்தைகளிடமிருந்து, சிறார்களிடமிருந்து ஆரம்பிப்போம். அறிவியலும் கணிதமும் கணிப்பொறியும் அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்யட்டும். ஆனால் நாம் ஊட்டும் தேசபக்தி அவர்களின் ஆன்மாவை ஒளிரச் செய்யும். நல்லனவற்றையே எண்ணச் செய்யும். புதிய சகாப்தத்தைப் படைக்க ஆவன செய்வோம். இந்தத் தேசிய விழாக்கள் அதற்கான விதைகளை ஊன்றும் திருநாள்களாகட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேயலாமா நம் தேசிய உணர்வு - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும், தினம், தேசிய, குடியரசு, சுதந்திர, விடுமுறை, இந்தத், ஒளிபரப்புச், பார்க்க, நிகழ்ச்சிகளை, செய்யும், பள்ளி, வந்தால், சுதந்திரப், தலைவர்கள், அவர்களின்