முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » இங்கு மலர்ச்சி, அங்கு தளர்ச்சி
பொருளாதாரக் கட்டுரைகள் - இங்கு மலர்ச்சி, அங்கு தளர்ச்சி
- அ. ஆராவமுதன்
தற்போதைய சந்தைப் பொருளாதாரத்தில் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு தாக்கங்களை உலக மயம், தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்தியுள்ளன.
போட்டிகளைச் சமாளிக்க, உற்பத்தி மற்றும் சேவைச் செலவினங்களைக் குறைக்க, பல்வேறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மையங்களைப் பல்வேறு நாடுகள் மற்றும் இடங்களுக்கு மாற்றம் செய்து வருகின்றன. மக்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது போக, வெளிநாட்டு வேலைகள் நமது நாட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.
* இந்தியாவில் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான கணிப்பொறி கற்றவர்கள் சேவை மையங்களில், வெளிநாட்டுக் கம்பெனிகளுக்காகப் பணிபுரிந்து வருகிறார்கள். இது தொடர்ந்தால் 2008-ம் ஆண்டிற்குள் ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கு வேலையும், 150 கோடி டாலர் வருமானத்தையும் ஏற்படுத்தித் தரும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இதற்காகப் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடும் செய்து வருகின்றன. ஆனால் இதற்கு தற்போது அமெரிக்காவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர்ப்புக்குக் காரணங்கள்:
* கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு தேக்கம் அடைந்து, வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன.
* வேலை இழந்த பணியாளர்களுக்காக அமெரிக்கப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், 70-க்கும் மேற்பட்ட வலைய தளங்கள், குரல் கொடுத்து வருகின்றன. தகவல் தொடர்புப் பணியாளர் சங்கங்கள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன.
* 2004 அதிபர் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் ஜான் கெர்ரி என்ற ஜனநாயக கட்சி வேட்பாளர், வெளிநாடுகளுக்கு வேலைகளை அனுப்புபவர்கள் துரோகிகள் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
* கெல்வின் பிளாங்கன் என்ற அமெரிக்க வங்கியின் கணிப்பொறி அலுவலர் வேலை இழந்து தற்கொலை செய்து கொண்டதால் எதிர்ப்புக் குரல் உச்ச கட்டத்தை அடைந்துவிட்டது.
வேலை இழப்பைப் பற்றி அமெரிக்கப் பத்திரிகைகள், அமெரிக்க அரசியல்வாதிகள் கொடுத்து வரும் தகவல்கள், தெரிவித்து வரும் கவலைகள்:
* 2001 முதல் இதுவரை 27 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர்.
* 2015 ஆம் ஆண்டிற்குள் மேலும் 30 லட்சம் வேலைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு விடும்.
* தற்போதைய நிலைமையைச் சமாளிக்க குறைந்தது மாதம் 1 லட்சம் புதிய வேலைகளை அமெரிக்கா உருவாக்க வேண்டும்.
* இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வரும் தொழில் நுட்ப மற்றும் கணிப்பொறி வல்லுநர்கள் கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வேலைப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். வேலை இல்லாமை தொடர்ந்து நீடித்தால் அமெரிக்க மக்களின் வருமானம் குறைந்து, வாங்கும் சக்தி பாதிப்படைந்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை அது பாதித்து விடும்.
அமெரிக்க அரசாங்கம் எடுக்க முன்வந்துள்ள நடவடிக்கைகள்:
* விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள்.
* அரசாங்க வேலைகளை ஒப்பந்தக்காரர்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதில் தடை.
* நியூ ஜெர்சி, மேரிலாண்ட், வாஷிங்டன், மிசோரி ஆகிய மாநிலங்கள் உள்நாட்டு வேலைகள் வெளிநாட்டிற்குப் போவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்ற முன் வந்துள்ளன.
அமெரிக்க நாட்டில் தோன்றியுள்ள எதிர்ப்புகள் சட்டமாகவோ அல்லது வேறு வழியிலோ தீவிரம் அடைந்தால் இந்தியாவில் பாதிப்புகள் கணிசமாக இருக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
எதிர்ப்புக்கு நியாயம் உள்ளதா?
சில அமைப்பின் வழியாக விவசாயப் பொருள்கள் உட்பட தாங்கள் உற்பத்தி செய்யும் எல்லா பொருள்களையும், மற்ற நாடுகள் தடையின்றி இறக்குமதி செய்ய வேண்டும் என்று வாதாடும் வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டிலிருந்து தொழில் நுட்பக் காரணத்தினால் செலவினங்களைக் குறைப்பதற்காக, அமெரிக்க நிறுவனங்கள் "வேலைகளை'' இந்தியாவிற்கு "ஏற்றுமதி'' செய்வதை எதிர்ப்பது நியாயமற்றது.
* உலகமய, தாராளமயக் கொள்கையினால் நமது நாடு இழந்த வேலைகள் ஏராளம். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்த பிறகு, அவற்றுடன் போட்டி போட முடியாமல், மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள், பழைய நிறுவனங்கள் ஏராளம். முன்னேறிய அமெரிக்கா இழந்த வேலைகள், படித்த - தொழில் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்டவை. அவர்களுக்கு புதிய பயிற்சி அளித்து மாற்று வேலைகளுக்கு ஏற்பாடு செய்துவிட முடியும்.
ஆனால், முன்னேறிவரும் இந்தியா போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு அமெரிக்காவில் இருப்பதுபோல அரசாங்கம் அளிக்கும் சமுதாயப் பாதுகாப்பு என்ற நிவாரணம் அளிக்க வாய்ப்பும் இல்லை, வசதியும் இல்லை.
குறைந்த செலவில் சுலபமாக செய்யக்கூடிய வேலைகளை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்புவது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மிகவும் நல்லது என்று அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களும் மற்றும் பல தொழில் அதிபர்களும் கூறி வருகிறார்கள்.
திறமை கூடுதலாகத் தேவைப்படும் வேலைகளுக்கு அங்கு வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும்.
பழைய வேலை இழப்புகளும், புதிய வேலைகள் தோன்றுவதும் தொழில் நுட்பப் பொருளாதார வளர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று.
அமெரிக்கப் பொருளாதாரம் தற்பொழுது மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது. ஆகவே வரும் மாதங்களில் வேலைகள் அதிகமாகக்கூடும்.
நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
* அமெரிக்க நாட்டில் தோன்றியுள்ள எதிர்ப்புகளை அரசியல் ஆக்காமல் சாதுர்யமாகவும், உறவின் அடிப்படையிலும் சமாளிக்க வேண்டும்.
* முடிந்தால், எதிர்ப்பு அடங்கும் வரை, தாற்காலிகமாக அமெரிக்க நாட்டிலிருந்து வேலை இறக்குமதியைச் சிறிது குறைத்துக் கொண்டு மற்ற வளர்ந்த நாடுகளில் வாய்ப்பைத் தேடிப் போகலாம்.
* நமது நாட்டில் உள்ள பெரிய மென்பொருள் கம்பெனிகள் தங்களது திறமையுடன் அதிக மதிப்புக் கூட்டும் வேலைகளை, புதிய சேவைகளை வெளிநாட்டிலிருந்து எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
* அமெரிக்காவில் தொழில் தொடங்கும் இந்தியக் கம்பெனிகள் அங்குள்ள பொறியாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளை அளித்து ஒரு சமநிலையைக் கொண்டுவர வேண்டும்.
* உலக நாடுகள் மத்தியில் பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்க, வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகள் இடையே ஏற்றத்தாழ்வு குறைவது முக்கியம். அப்போதுதான் நாடுகளிடையே பூசல்கள், ஆளுமை எண்ணம் அகன்று ஒற்றுமை உணர்வு ஏற்படும். இது நாள்வரை ஆயுத மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடுகள் தற்பொழுதுதான் நாடுகளிடையே பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து ரபஞ போன்ற அமைப்புகள் மூலம் செயல்படத் துவங்கியுள்ளன. இதில் வளர்ந்த நாடுகள் ஒரு பக்கமும், வளர்ந்து வரும் நாடுகள் இன்னொரு பக்கமும் தனித்து இயங்கினால் எதிர்கால உலகப் பொருளாதாரத்தில் சமநிலை ஏற்படாது.
ஆகவே உலகமயம் தொடர எடுத்துவரும் முயற்சிகளுக்கு இடையே அவ்வப்பொழுது ஏற்படும் வேலை இழப்பு போன்ற பிரச்சினைகள் தாற்காலிகமானவை. புதிய தொழில் நுட்பங்கள், புதிய வேலைகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் எல்லா நாடுகளும் பெருந்தன்மையுடனும் பக்குவத்துடனும் செயல்பட வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம். இந்த அணுகுமுறைதான் உலகம் தழுவிய மலர்ச்சியையும், சீரான வளர்ச்சியையும் கொடுக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இங்கு மலர்ச்சி, அங்கு தளர்ச்சி - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேலை, அமெரிக்க, நாடுகள், தொழில், வேலைகள், அமெரிக்கப், வேலைகளை, வரும், நிறுவனங்கள், வேண்டும், லட்சம், வருகின்றன, வளர்ந்த, இந்தியா, பல்வேறு, பொருளாதார, நாட்டில், கொடுத்து, கணிப்பொறி, செய்து, உற்பத்தி, சமாளிக்க, நமது, இந்தியாவில், அமெரிக்காவில், தற்போதைய, இழந்த