முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » நவீனமாகிறது தோல் தொழில்
பொருளாதாரக் கட்டுரைகள் - நவீனமாகிறது தோல் தொழில்

உலக அளவில் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் தோல் பொருட்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் உலக வரை படத்தில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 1995ம் ஆண்டுக்கு முன்னர் ஒட்டு மொத்த தோல் பொருட்கள் உற்பத்தியும், விற்பனையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆனால் கடந்த 1999ம் ஆண்டு முதல் இதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தோல் பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் சர்வதேச அளவில் காணப்படும் கடும் போட்டியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச தோல் பொருட்களுக்கான சந்தையில் சீனா சமீபத்தில் முழு வேகத்தில் குதித்துள்ளது. அது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் அதற்கு என ஒரு இடத்தை பிடிக்கும் முயற்சியில் அது வெற்றியும் பெற்றுள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா சிறிது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தரம், விலை, எண்ணிக்கை ஆகியவற்றில் இந்தியாவை காட்டிலும் சீனா முந்திச் செல்வதுதான் காரணம். இதனால், சர்வதேச சந்தையில் தோல் பொருட்களுக்கான ஒரு சிறந்த இடத்தை பெற இந்தியாவிற்கு நீண்ட காலம் பிடிக்கும்.
உலக அளவில் இந்திய தோல் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டுமானால், தோல் பொருட்கள் உற்பத்தியில் சில தரக் கட்டுப்பாடுகளையும், புதிய தொழில் நுட்பங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் காணப்படும் சவால்களை சமாளிக்க முடியும். நாட்டில் உள்ள சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகள்தான் தோல் பொருட்ளை தயாரிக்கின்றன. இவற்றில் பெரிய தோல் தொழிற்சாலைகள் மட்டுமே தயாரிப்புக்களை தரத்துடன் தயாரிக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. சிறிய தொழிற்சாலைகளுக்கு அந்த வசதி இல்லாத காரணத்தினால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்த நிலை மாற சிறிய தொழிற்சாலைகளையும் நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சிறிய தொழிற்சாலைகளை நவீனப்படுத்த தொழிற்சாலைகளின் முதலீடு, வங்கி கடன், மான்யம் உள்ளிட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது. அத்திட்டம் செயல்படுத்தப்படும்போது நாட்டின் தோல் உற்பத்தி சிறப்பாக இருக்கும். கடந்த 70ம் ஆண்டுகளில் தோலை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே பிரதான தொழிலாக இருந்து வந்தது. இந்நிலையில் நாட்டின் தோல் தொழிலை முன்னேற்றமடைய செய்ய முடிவு செய்த மத்திய அரச, இதற்காக 10வது ஐந்தாண்டு திட்டத்தில் தோல் தொழிலை அங்கீகரித்து தோல் தொழில் செய்வோர் மற்றும் தோல் தொழிற்சாலைகள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு தோல் தொழிலில் உள்ள ஒவ்வொரு பக்கத்தை பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் தோலை பதப்படுத்துதல், காலணிகள் தயாரித்தல், காலணி உதிரி பாகங்கள், தோல் பொருட்கள் மற்றும் தோலாடைகள் ஆகியவை குறித்த திட்டங்களை ஏற்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்து தோல் தொழிலை நவினமயமாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேவையான ஆலோசனைகள் கூறப்பட்டிருந்தன. இதையடுத்து இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி குறிப்பிட தக்க வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக காலணி தயாரிக்கும் தொழில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. தற்போது இந்தியாவில் இருந்து 4.6 சதவிகிதம் என்ற அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதி உள்ளது. இது உலக தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 3 சதவீதமாகும்.
உலக அளவில் தோல் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதல் இடத்தை பெற இந்திய பல வளங்களை கொண்டுள்ளது. போதிய அளவில் கச்சாப்பொருட்கள், குறைந்த ஊதியத்தில் திறமையான தொழிலாளர்கள் போன்றவை தோல் உற்பத்திக்கு நல்ல எதிர்காலத்தை தர உள்ளன. நாட்டின் அன்னிய செலவாணியை அதிகரிக்க இப்போதைக்கு உள்ள முக்கிய தொழில்களில் தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலும் ஒன்று. உதாரணமாக, கடந்த 1991 - 92 ஆம் ஆண்டுகளில் தோல் ஏற்றுமதியின் மூலம் நம் நாடு பெற்ற ஏற்றுமதி வருமானம் 3 ஆயிரத்து 36 கோடி ரூபாய். இதுவே 2001 - 02ல் 9ஆயிரத்து 212 கோடி ரூபாயாக அதிகரித்தது. கடந்த 2002 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி அளவு 5 ஆயிரத்து 367 கோடி ரூபாயாகும். இந்த தொகையை மேலும் அதிகரிக்க முடியும். ஆனால், போதிய வரை முறை இல்லாத காரணத்தினால் அது நிறைவேறாமல் உள்ளது. பதப்படுத்தப்பட்ட தோல், பதனிடாத தோல், தோல் காலணிகள் உள்ளிட்ட தோல் உற்பத்தி செய்யும் சிறுதொழில் துறையை தனது கட்டுப்பாட்டில் வைக்க அரசு கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு சட்டம் வெளியிட்டது. தொழிற்சாலை அமைவிடம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மாநில மற்றம் மத்திய அரசுகளின் சட்டம், ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் போன்ற பல விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து யு.என்.டி.பி., நிறுவனத்துடன் இணைந்து 1992 முதல் 1998 வரை தேசிய தோல் அபிவிருத்தி திட்டம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியது. மொத்தம் 70 கோடி ரூபாய் மதிப்பிலானது இத்திட்டம். நாட்டில் உள்ள நிறுவனங்கள். ஏஜென்சிகள் ஆகியவற்றின் மூலம் தோல் தொழிலை ஒருங்கிணைத்து வளர்ச்சி அடைய செய்யவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் தோல் பொருட்கள், தோலாடைகள், காலணிகள் உற்பத்தி ஆகியவை வடிவமைக்கும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தோல் தொழிலில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி குறித்தும் இந்த திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. மொத்ததில் நாட்டின் தோல் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு கடந்த ஆண்டுகளில் பெருமளவில் முயற்சி எடுத்தது.
இந்தியாவின் தோல் உற்பத்தி தரமிக்கதாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தோல் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துதல், இந்தியா தோல் பொருட்களுக்கான ''பேஷன் ஷோ'' க்களை சர்வதேச அளவில் நடத்துதல் உள்ளிட்ட பல விஷயங்களில் இப்போது தோல் பொருள் ஏற்றுமதி குழுமம் கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச சந்தை தோல் பொருட்கள் விற்பனையில் இந்தியா மிகப் பெரிய இடத்தை பெற வேண்டும் என்றால், இந்தியாவின் தோல் பொருட்கள் உற்பத்தி தரம் மிக்கவையாக இருக்க வேண்டும் என்பதை இக்குழுமம் உணர்ந்து, இன்றைக்கு தோல் பொருட்கள் உற்பத்தில் தரம் கொண்டதாக இருக்கும் இத்தாலி நாட்டின் தொழில் நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தத்தில் சர்வதேச சந்தையில் அன்னிய நாடுகளில் போட்டியை சமாளிக்க நாடு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மிக சிறந்த முறையில் தோல் பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நவீனமாகிறது தோல் தொழில் - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தோல், பொருட்கள், அளவில், உற்பத்தி, சர்வதேச, ஏற்றுமதி, நாட்டின், கடந்த, தொழில், கோடி, இடத்தை, தொழிலை, வளர்ச்சி, சிறிய, வேண்டும், உள்ள, சந்தையில், மத்திய, பொருட்களுக்கான, ஆகியவை, விற்பனையில், அரசு, மூலம், காலணிகள், ஆண்டுகளில், தேவையான, பெரிய, தரம், உள்ளிட்ட, இந்தியா, உள்ளது, ரூபாய், இந்திய