முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » கலாமின் கசப்பு மருந்து
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - கலாமின் கசப்பு மருந்து
இந்த ஆண்டு சுதந்திர தின உரையில், தேசிய வாழ்க்கையில் ஆரோக்கியம் மீள்வதற்கான கசப்பு மருந்தை அரசியல் உலகுக்கு குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தந்திருக்கிறார். மதத்தை மையமாகக் கொண்ட அரசியல் வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இதையும் பொதுப்படையாகக் கூறாமல், புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் குறிகாட்டி கூறியிருக்கிறார். இந்தத் தலைமுறையில் புதிதாக எத்தனை மசூதிகள், கோயில்கள், குருத்துவாராக்கள், தேவாலயங்களை நாம் கட்டினோம் என்பதைப் பார்த்து வரலாறு நம்மை நினைவில் வைத்துக்கொள்ளாது. வளமும் பாதுகாப்பும் மிகுந்த இந்தியாவை விட்டுச் செல்வதன் மூலமே எதிர்கால சந்ததியினரின் மனங்களில் நாம் நிலைத்து நிற்க முடியும் என்பதையும் அவர் நினைவுறுத்த தயங்கவில்லை.
அரசியல் சார்பற்ற, சுதந்திரச் சிந்தனை படைத்த, விஞ்ஞான உணர்வு மிக்க குடியரசுத் தலைவர் என்பதை கலாம் இச்சுதந்திர தின உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக, எப்படியும் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியே முடிப்போம் என்று பாஜக தலைவர்களில் சிலர் சூளுரைத்து வருகிறார்கள். விசுவ ஹ’ந்து பரிஷத் போன்ற சங்கப் பரிவாரங்களோ அயோத்தியுடன் மட்டுமே நிற்கப்போவதில்லை. காசி, மதுரா ஆகியவற்றையும் மீட்காமல் விடப்போவதில்லை என்றும் முழங்கி வரும் தருணத்தில், புதிய கோயில்களைக் கட்டுவது தானா தற்பொழுது தலையாய அவசரப் பிரச்சினை? என்று கலாம் கேட்காமல் கேட்டிருக்கிறார்.
நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடங்கலாக இருக்கக்கூடிய பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதோடு, இனம், மதம், அரசியல் அடிப்படையில் செயல்பட்டு வருகின்ற பிளவு சக்திகள் - தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பயங்கரவாதத்தைக் கருவியாகக் கொள்வதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கத் தயங்கவில்லை.
நாட்டை வளப்படுத்துவதற்கு உரிய 5 இயக்கங்களை தொலைநோக்குப் பார்வையுடன் அவர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அவை: 1. நதிகளை இணைத்தல். 2. குறைந்த உற்பத்திச் செலவில் தரமான மின்சாரம் வழங்குதல். 3. கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல். 4. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப விரிவாக்கம். 5.சுற்றுலா மேம்பாடு. இப்பட்டியலின் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாகப் பரிணமிக்கச் செய்வதற்கான உத்தியை அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.
அதோடு, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பிரச்சினைகளில் ஆர்வம் செலுத்தும் போக்குக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைப்போம். நமது நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மேம்படுத்த ஒற்றுமையோடு உழைப்போம் - என்ற உறுதிமொழியை, அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்ற புத்திமதியையும் கலாம் வழங்கியுள்ளார்.
சரியான சந்தர்ப்பத்தில் துணிவுடன் வழங்கப்பட்டுள்ள விவேகமான அறிவுரை இது. இதன்மூலம் - தாம் அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் மட்டுமன்றி நாட்டின் மனசாட்சியும் என்பதை, கலாம் தெளிவாக மெய்ப்பித்திருக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலாமின் கசப்பு மருந்து - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அரசியல், அவர், கலாம், தலைவர்கள், நாட்டின்