முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » விடுதலை வீரன் செகுவேரா
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - விடுதலை வீரன் செகுவேரா

- வி.கெ. பாலகிருஷ்ணன்
கம்யூனிஸ்ட் கியூபா தோன்றி முப்பத்தெட்டு ஆண்டுகளாகிறது. அதன் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ முதியவராகி விட்டார். கியூபாப் புரட்சியிலும் அதன்பிறகு உருவான அரசியலும் புரட்சிநாயகன் ஃபிடலுக்கு சக தோழனாக இருந்த ஏர்னஸ்டோ செ குவேரா இப்போது உயிரோடிருந்தால் அறுபத்தொன்பது வயதை எட்டியிருப்பார். கியூபாப் புரட்சி நிறைவேறிய பிறகு அரசுப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பொலீவியா சென்று, அந்நாட்டு விடுதலைப் புரட்சிக்கிடையே வீரமரணம் எய்தினார்.
செகுவேராவின் உயிர்த் தியாகம் நிகழ்ந்த முப்பதாண்டுகளுக்குப் பிறகு 97 அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அவருடைய உடல் பகுதிகள் கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவருக்கு வீரவணக்கம் செலுத்த கியூபாத் தெருக்களில் வரிசையாகக் குழுமிக் காத்திருந்த பல்லாயிரம் மக்களுக்கு செ குவேரா மனத்தளவில் இளைஞராகவே இருந்தார். புரட்சியின் அழியாத நினைவுகளும் ஆவேசமும் அவர்களுடைய உள்ளத்திலும் முகத்திலும் ஒருங்கே பிரதிபலித்தன. அக்டோபர் இறுதியில் இந்தியாவுக்கு வருகை தந்த செ குவேராவின் புதல்வி அலைடாவின் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களும் இதே மனநிலையில்தான் இருந்தனர்.
மறைந்து முப்பது ஆண்டுகளான பிறகும் எர்னஸ்டோ செ குவேரா (கியூபா மக்கள் அவரை அன்புடன் 'செ' என்றுதான் அழைக்கிறார்கள்) உலகம் முழுக்க இன்றைக்கும் புரட்சி ஆவேசத்தின் துடிப்பாகத்தான் திகழ்கிறார். அர்ஜெண்டினா, பொலீவியா, லெபனான் போன்ற அனைத்து நாடுகளிலும் ஏன் இண்டர்நெட்டின் வெப்சென்டர்களில்கூட, கம்யூனிசத்திற்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட பலத்த வீழ்ச்சிக்குப் பிறகும், செகுவேரா முக்கியத்துவம் பெற்றவராகத்தான் இருக்கிறார்.
சோவியத் யூனியன் நொறுங்கிப்போன நிகழ்வும், இடதுசாரி இயக்கங்கள் திருப்பித் தாக்குதலுக்குள்ளாகியதும், செ குவேராவின் உடற்பகுதிகளைச் சாந்தாகிளாராவுக்குச் சென்ற வாகன வரிசையைப் பொறுமையுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கு பல்லாயிரக்கணக்கான கியூபா மக்களுக்கு தடையாக இருக்கவில்லை.
புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்த செ குவேரா, ஆயுதமேந்திய கொரில்லாப் போராட்டத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்காவை முழுமையான கம்யூனிசம் மற்றும் மனித நேயத்தின் புத்துலகத்திற்கு வழிநடத்திச் செல்லும் முயற்சியில் தான் எதிர்பாராதவிதமாக 'களப்பலி' க்கு ஆளானார். ஆஸ்துமா நோயாளியான ஒரு டாக்டரால் எந்த எல்லைக் கோடுவரை, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வண்ணக் கனவுகளை நனவாக்க உழைக்க முடியும் என்ற கேள்விக்கு விடை தான் செ குவேராவின் வாழ்க்கை.
"செ-யின் உயிர்ப்பலி அவருடைய முன்மாதிரியைப் பின்தொடர உறுதிபூண்ட லட்சக்கணக்கானவர்களின் பிறவிக்கான விதையாகும் என்பதை நிரூபிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்று செ குவேராவின் நினைவு நாளில் முப்பதாண்டுகளுக்கு முன் ஃபிடல் காஸ்ட்ரோ கூறினார். ஆனால், இன்றைக்கு செ குவேராவின் கொரில்லாப் போர் முறையை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், மத அடிப்படைவாதிகள் ஆகியோர் தங்களுடைய ஆயுதமாகப் பயன்படுத்துவதையும் பார்க்கிறோம். ஆனால், செ குவேராவின் அளப்பரிய தியாகம் வரலாற்றில் நட்சத்திரமாகச் சுடர்விடுவதை எந்தச் சக்தியாலும் இருட்டடிப்பு செய்யவோ மூடி மறைக்கவோ முடியவில்லை.
அர்ஜென்டினாவில் ரொசாரியோ என்னுமிடத்தில் 1928 ஜூன் 14 இல் பிறந்து 1953 மார்ச்சில் மருத்துவப் பட்டம் பெற்ற செகுவேரா தனக்குள் ஒரு கனவை சீராட்டி வளர்த்துக் கொண்டிருந்தார். தொலைவில் ஏதேனும் ஒரு லத்தீன் அமெரிக்க கிராமத்தில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வாழவேண்டுமென்பதே அந்தக் கனவாகும். ஆனால், அந்தக் கனவானது இந்த சமூக அமைப்பெனும் மேனியில் பரவிய அநீதியும் அடக்கி ஒடுக்குமுறைகளுமாகியத் தொழுநோயை புரட்சிச் சுடர்களால் ரண சிகிச்சை செய்து குணப்படுத்தும் பாதைக்கு திசை திருப்பியது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இளவயதில் மேற்கொண்ட சாகசப் பயணங்களும் 1954இல் குவாடிமாலாவில் நடைபெற்ற அரசுக்கெதிரான கலவரத்தைப் பார்க்க நேரிட்டதும், இந்தச் சமூக அமைப்புக்குத் தான் சிகிச்சை தேவையென்ற முடிவுக்கு அவரை வரவழைத்தது.
1955 ஜூலையில் ஓர் நாள் குளிர் இரவில் ஃபிடல் காஸ்ட்ரோவும் செ குவேராவும் மெக்சிகோவில் முதன் முதலாகச் சந்தித்தனர். அந்த ஒரே இரவில் காஸ்ட்ரோவின் எதிர்காலப் புரட்சிப் போராட்டத்தில் செ குவேராவும் இணைவது என்று முடிவாயிற்று. பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் பிறகு நடைபெற்ற கியூபாவின் விடுதலைப் புரட்சியில் செ குவேராவுக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கியூபாத் தோழர்கள் அவரை அன்புடன் 'செ' என்று அழைத்தனர்.
1956இல் செ குவேரா கீழ்வருமாறு எழுதினார்: "கிரான்மா என்ற சிறு கப்பலில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இருளில் நாங்கள் துக்ஸ்பான் துறைமுகத்திலிருந்து பயணத்தைத் துவக்கினோம்" ஆம், கியூபாவில் சமத்துவ சமுதாயத்தைச் சமைக்கக் கப்பல் பயணம் மேற்கொண்ட அந்த விடுதலைக் குழுவில் 83 பேர் இருந்தனர். 1956 டிசம்பர் இரண்டாம் நாள் கியூபாக் கரையில் லாஸ் கொளராடசை 'கிராண்மா' சென்றடைந்தது. கிராண்மா கப்பலில் சென்ற ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அந்த 83 பேர் கொண்ட போராளிகள்தான் கியூபாப் புரட்சியின் அடிக்கற்களாவார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண் முன்னால் அரங்கேறிய கியூபாப் புரட்சி 1959 ஜனவரி முதல் நாள் அன்று கியூபா சர்வாதிகாரி ஃபுல்ஜெனிசியோ பாத்திஸ்டா நாட்டை விட்டு ஓடியதுடன் வெற்றி பெற்றது. புரட்சிக்கு செ குவேரா நல்கிய மகத்தான அர்ப்பணிப்புகளை முன்னிட்டு 1959 பிப்ரவரி ஒன்பதாம் நாள் அவருக்கு கியூபாக் குடியுரிமை அளிக்கப்பட்டது. புரட்சியின் வெற்றிக்குப் பிந்திய ஆண்டுகளில் கியூபாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கடிவாளம் பிடித்தவர் செ குவேரா என்பது குறிப்பிடத்தக்கதாகும். கியூபாவின் தேசிய வங்கியின் தலைவராக அவர் பணியாற்றினார். பின்னர் தொழில் அமைச்சர் நிதியமைச்சராகவும் செயலாற்றினார்.
எங்கு அநீதி நடமாடுகிறதோ அங்குதான் ஒரு புரட்சிக்காரன் தேவைப்படுகிறான் என்று நம்பிய செ குவேரா 1965 மார்ச் பதினான்காம் நாள் கியூபாவின் பொது அரங்கிலிருந்து மறைந்துவிட்டார். தான்சானியா வழி காங்கோவை அடைந்த செ குவேரா மீண்டும் கியூபாவுக்குத் திரும்பிய பிறகு, பொலீவிய விவசாயிகளை ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவிக்க ஆயுதப் புரட்சிக்கு தயார் நிலையை மேற்கொண்டார். பெயரையும் தோற்றத்தையும் மாற்றி 1966 நவம்பர் நான்காம் நாள்பொலீவியாவை அடைந்தார்.
பொலீவியாவில் ஆன்டீஸ் மலைத் தொடர்களினூடே இடுக்கண்களைத் தாங்கி முன்னேறிய செ குவேராவும் சக கொரில்லாப் போராளிகளும் அமெரிக்கர்களிடம் பயிற்சி பெற்ற பொலீவிய ராணுவத்தின் பலத்த எதிர்த்தாக்குதலைச் சந்திக்க நேரிட்டது. 1967 அக்டோபர் எட்டாம் நாள் பொலீவிய ராணுவத்திடம் அகப்பட்டுக் கொண்ட செ குவேரா கொடிய சித்ரவதைகளுக்குப் பிறகு மறுநாள் ஒன்பதாம் தேதி லாஹ’குவேராவில் ஒரு பள்ளியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய சடலம் அங்கிருந்து வால்லெ கிராண்டே ராணுவ முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதற்கருகில் இருந்த ஒரு மருத்துவ மனையின் சலவை அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டது. கொரில்லாப் போராளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக செ குவேராவின் உடலை இவ்வாறு காட்சிக்கு வைத்தனர். செ குவேராவின் உடலை அடக்கம் செய்த இடத்தை வெளியிட ராணுவ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பொலீவிய ராணுவத்திலிருந்து விடுபட்ட ஒரு ராணுவ அதிகாரி இரண்டாண்டுகளுக்கு முன் செ குவேராவின் உடலை அடக்கம் செய்த இடத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டார். இது உலகெங்கும் செ குவேராவைப் பற்றிய ஆர்வத்தை மீண்டும் விழித்தெழச் செய்தது. கியூபாவின் நெருக்குதலுக்குப் பணிந்து செ குவேராவின் உடல் பகுதிகளைக் கண்டடைய பொலீவியா ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தது. பிரான்ஸ், அர்ஜெண்டைனா, கியூபா போன்ற நாடுகளின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் தேடுதலில் பங்கேற்றனர். இறுதியில் கடந்த 97 ஜூன் மாதம் வால்லெகிராண்டெ ராணுவ விமான நிலையத்தின் புல்வெளிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் செ குவேராவினுடையதுதான் என்று 'ஜீன்' ஆராய்ச்சி மூலம் தெளிவாகியது.
எக்னாமிஸ்ட் வார இதழ் எழுதியதைப்போல், தாங்கள் எவ்வளவு பெரிய 'தங்கச்சுரங்க'த்தின் மீது இருக்கிறோம் என்பதை உலகின் தொலைதூர மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் செ குவேராவில் இருந்தெல்லாம் செ குவேராவின் ஆதரவாளர்கள் வால்லெகிராண்டேவையும், லாஹ’குவேராவையும் பார்வையிட வந்தபோதுதான் பொலீவிய ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டனர். இவ்வாறு வேட்டையாடப்பட்ட நாட்டிலேயே செ குவேரா கொண்டாடப்பட்டார். செ குவேரா உயிர்ப்பலியான 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தை 97 அக்டோபர் ஒன்பதாம் நாளிலிருந்து 'செ குவேரா வாரமாக' பொலீவியாவில் கொண்டாடப் பட்டது. புரட்சியாளனின் பெயரைச் சொல்லி சுற்றுலா வாய்ப்பை பொலீவியா உருவாக்கிக் கொண்டதைத்தான் இது வெளிக்காட்டுகிறது. செ குவேராவும் தோழர்களும் போராட்டம் மேற்கொண்ட பொலீவியன் காடுகளில் 500 மைல் 'செ குவேராரூட்' பயணத்தையும் பொலீவிய சுற்றுலாத் துறை செயல்படுத்தியது. 'செ குவேரா வாரம்' ஆயிரக்கணக்கான பாடகர்களின் இன்னிசையுடன் வால்லெகிராண்டாவில் கோலாகலமாகத் துவக்கப்பட்டது.
செ குவேரா கொல்லப்பட்ட லாஹ’குவேரா கிராம மக்கள் அவரை ஒரு செயிண்ட் (புனிதர்) ஆக வணங்குவதாக பத்திரிகைகள் உள்ளிட்ட மேற்கத்திய தகவல் தொடர்புச் சாதனங்கள் உள்நோக்குடன் திரும்பத் திரும்பக் கூறுகின்றன. செ குவேராவின் முகம் இயேசு கிருஸ்துவின் சாயலில் இருப்பதாகச் சொல்லப்படும் கருத்துக்களுக்கு அவைகள் அதீத முக்கியத்துவம் அளிக்கின்றன. கார்டியன் வார இதழ் கீழ்வருமாறு எழுதியது: "லாஹ’குவேரா கிராம மையத்தின் முன் சிலுவை நாட்டிய ஒரு சிறிய வழிபாடு மையம் இருக்கிறது. மழை பொய்க்கும் போதும் வறட்சியினால் அவதிப்படும்போதும் கிராம மக்கள் செ குவேராவி6ன் படங்களுடன் அங்கு வந்து ஆடிப்பாடி பிரார்த்தனை செய்கின்றனர். செ குவேரா அவர்களுக்கு செயிண்ட் எர்னஸ்டோ (புனித எர்னஸ்டோ) ஆவார். செயிண்ட் எர்னஸ்டோவிடம் வேண்டினால் அவர் ஏமாற்றமாட்டார் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்."
தவறான காதல் தொடர்புகளால் பிரபலமான பிறகு, முற்றிலும் தனிப்பட்ட காரணங்களால் பிரிட்டீஷ், அரச குடும்ப உறவைத் துண்டித்துக் கொண்ட இளவரசி டயானா தன்னுடைய லேட்டஸ்ட் காதலனுடன் ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார். மதர் தெரசாவைவிட பெரிய புனிதவதியாக டயானாவைச் சிறப்பித்துச் சித்தரிக்க முயன்ற மேற்கத்திய தகவல் தொடர்புச் சாதனங்களின் மற்றொரு முகத்தை செ குவேராவை புனிதவாளனாகச் சித்தரிக்கும் முயற்சியிலும் காணலாம். உலக அழகிப் போட்டிகளில் வென்று கும்மாளமடிக்கும் பெண்களைவிட எந்த வகையிலும் சமூகத்திற்கு தேவைப்படாத டயானா யார் என்பதை மேற்கத்திய 'மீடியாக்கள்' மூடி மறைத்துவிட்டன. டயானாவின் வாழ்க்கையில் மலிந்த கறுப்பு கதைகளுக்கு அவர்கள் கருணை வண்ணம் பூசி திசை திருப்பிவிட்டனர்.
இதைப்போலவே உலகின் எந்த மூலை முடுக்குகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிப் போராட்டங்களுக்கு ஆதர்சப் போராளியாக இருப்பதால்தான் விவசாயிகள் தொழிலாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்காளர்கள் ஆகியோர்களிடையே செ குவேராவின் புகழ் வியக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த உண்மையை மூடிமறைக்கத் தான் மேற்கத்திய பத்திரிகைகள் செ குவேடராவின் மீது இறை மகத்துவம் திணித்து அவரைப் புனிதவானாகச் சித்தரிக்கின்றன.
1977ம் ஆண்டு அக்டோபர் 9 முதல் 17 வரை ஹவானாவிலிருந்து சாந்தாகிளாரா வரை செ குவேராவின் உடல் பகுதிகள் சுமந்த வாகனங்களின் வரிசை நகர்ந்து செல்ல சாலையின் இரு மருங்கிலும், அவருக்கு வீராஞ்சலி செய்யக் காத்திருந்த ஆயிரமாயிரம் கியூபாக் குடிமக்களுக்கு அவர் புனிதரோ புண்ணியாத்மாவோ இல்லை. காலகாலத்திற்கும் அழியாத நினைமவுகளை விட்டுச் சென்ற புரட்சிப் போராளியாவார்.
1998ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று டில்லியில் செ குவேராவின் மகள் அலைடாவுக்கு அளிக்கப்பட்ட பொது வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது அவர் கூறிய கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். "என்னுடைய தந்தை மிகவும் எளிமையான மனிதராவார்... அவர் மக்களை மிகமிகக் கூடுதலாக நேசிக்கவும், மதிக்கவும் செய்தார். ஆனால், அவர் சில ஆண்டுகளாக பலரால் ஒரு செயிண்ட் ஆக (புனிதர்) உயர்த்தப்பட்டிருக்கிறார். இத்தகைய விஷயங்கள் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது அவரை அன்றாட வாழ்க்கையிலிருந்து அகற்றுகிறது. நேசிப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களுக்குரியவராக இருந்த போதிலும் அவர் முற்றிலும் இந்த உலகின் மனிதராவார். அவரைப் பின்பற்றுவதாக இருந்தால் செ குவேராவின் மனிதநேய குணங்களைத்தான் பின்பற்ற வேண்டும்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலை வீரன் செகுவேரா - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - குவேராவின், குவேரா, அவர், நாள், ", பிறகு, அக்டோபர், பொலீவிய, கியூபாவின், அவரை, கியூபா, கொரில்லாப், மேற்கத்திய, செயிண்ட், கிராம, குவேராவும், ராணுவ, தான், பொலீவியா, மக்கள், கியூபாப், ஃபிடல், ஒன்பதாம், கொண்ட, கியூபாக், புரட்சி, உடலை, காஸ்ட்ரோ, ஆண்டு, உலகின், புரட்சிப், இருந்த, அவருடைய, புரட்சியின், எந்த, லத்தீன், எர்னஸ்டோ, சென்ற, அடக்கி, அவருக்கு, மேற்கொண்ட, உடல், அமெரிக்க, முன், என்பதை, அந்த