வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 13
நிஷா
தேசம் : வால்கா நதிக்கரைப் பிரதேசம்
ஜாதி : ஹிந்தோ-ஐரோப்பியர்
காலம் : கி.மு. 6000
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சூரியனைக் காண முடிந்திருக்கிறது. மத்தியான வேளை; ஆனால் இன்னும் உச்சிக்கு நேரே சூரியன் வரவில்லை. பொழுது புலர்ந்து நான்கு, ஐந்து மணி நேரமாகியும் சூரியனுடைய ஒளியில் அவ்வளவு உஷ்ணத்தைக் காணோம். அவனை- சூரியனை மேகங்கள் மறைக்கவில்லை; பனிப் படலங்கள் மூடவில்லை; பெரிய காற்றோ, புயலோ கிடையாது. இந்நிலையில் உடம்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் அவனுடைய கிரணங்கள் மனத்துக்கும் தேகத்துக்கும் எவ்வித ஆனந்தத்தைக் கொடுக்கின்றன! சரி, நாலா பக்கங்களிலுமுள்ள காட்சிகளைத்தான் நோக்குவோமே! மேலே நீலநிறமான ஆகாயம்; கீழே கற்பூரத்தைப் போன்ற பனிப்படலங்கள் கவ்விக் கொண்டிருக்கும் பூமி. கடந்த இருபத்து நான்கு மணி நேரமாகப் பனி விழாததால், பூமியின் மீது படிந்திருக்கும் பனித்திரள் கொஞ்சம் கெட்டியாகி விட்டது. பனி மூடிய இந்தப் பூமி எங்கும் வியாபித்திருப்பதாக நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அதோ இருமருங்கிலும் மலைகளின் மீதுள்ள மரக்கூட்டங்களின் நடுவே சில மைல்கள் தூரம் மேடும் பள்ளமுமாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வெள்ளிப் பலகை மாதிரி கிடக்கிறது இந்தப் பூமி. வாருங்கள்; இனி அந்த மரக் கூட்டங்களைக் கொஞ்சம் நெருங்கிப் பார்ப்போம். இங்கே இரண்டு விதமான விருட்சங்கள்
அதிகமாயிருக்கின்றன. ஒரே வெண்மை நிறமாயும் ஆனால் இலைகளே இல்லாத கொம்புகள்-கிளைகள் உள்ளனவாயும் நிற்பன ஒரு வகை; ஓங்கி வளர்ந்து, ஆனால் அடர்ந்த கிளைகளையும் ஊசியைப் போன்ற முனையான இலைகளையும் உடைய தேவதாரு விருட்சங்கள் மற்ற வகை. அடர்ந்த கிளைகள் அந்த மரங்களை அப்படியே மூடிக்கொண்டிருப்பதும், அவைகளின் மீது வெண்மையான பனிக்கட்டிகள் தொங்கிக் கொண்டிருப்பதும், கண் கொள்ளாக் காட்சியாயிருக்கிறதல்லவா? தனிமையில் இருக்கும் நாம், கொஞ்சம் உற்றுக் காது கொடுத்துக் கேட்போமா? பட்சிகளின் சப்தமாவது கேட்கிறதா? மிருகங்களின் இரைச்சலாவது கேட்கிறதா? சிறிய வண்டுகளின் ரீங்காரமாவது கேட்கிறதா? இல்லை. பயங்கரம் நிறைந்த நிசப்தத்தின் ஆட்சி ஆரண்யமெங்கும் நிலவியிருக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேட்கிறதா, கொஞ்சம், பூமி, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்