முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 125
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 125
கூச்சலிலிருந்து விடுதலையடையவேண்டும் என்ற ஆசை ஏற்படும் பொழுதும் எனது களைப்பைத் தீர்க்கும் மருந்து என்னுடைய லோபாவோடு சிறிது நேரம் கழிப்பதைத் தவிர வேறு இல்லை.”
“நான் உனக்காக எப்பொழுதும் தயாராக இருக்கிறேனே.”
லோபாவின் பெரிய கண்கள் எங்கோ தூரத்தில் நோக்கிக் கொண்டிருந்தன. அவளுடைய பொன்னிறக் கூந்தல் காலை இளம் காற்றிலே பறந்து கொண்டிருந்தது. லோபா தன்னை மறந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். பிரவாஹன் அவளுடைய கூந்தலைத் தனது விரல்களால் தடவிக் கொண்டே,
“லோபா! நான் உன் முன்னிலையில் ஒரு அழகற்றவன் என்றே எனக்குத் தோன்றுகிறது.”
“அழகற்றவனா?” அவன் முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டே லோபா,
“இல்லை பிரவாஹன். உன்னைப் பற்றி நான் எவ்வளவு கர்வப்படுகிறேன் தெரியுமா? என் அத்தையோடு வந்த எட்டு வருடப் பாலகனை என் குழந்தைக் கண்களால் பார்த்த அந்நாள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அப்பொழுது நான் நான்கு வயதுச் சிறுமி; ஆயினும் என்னுடைய ஞாபகசக்தி அந்தக் காட்சியைப் பதியச் செய்வதிலே தவறு செய்துவிடவில்லை. அந்தப் பொன்னிறமான கூந்தல், நீண்டு வளைந்த மூக்கு, மெல்லிய சிவந்த உதடுகள்,
பிரகாசம் பொருந்திய பெரிய பெரிய நீலக்கண்கள், தங்கநிற மேனி இவை யாவும் எனக்கு நினைவிருக்கின்றன. என் தாயார், ‘லோபா இதோ பார்! இவன் உன் அத்தை மகன்’ என்று உன்னை அறிமுகப்படுத்தியதும் நினைவிருக்கிறது. நான் வெட்கப்பட்டுக் கொண்டு நின்றேன். ஆனால் தாயார் உன்னை முத்தமிட்டு, ‘பிரவாஹன்! உன் மாமன் மகள் வெட்கப்படுகிறாள். அவள் வெட்கத்தைப் போக்குவது உன் வேலை’ என்று கூறினாள்.”
“ஆம், நான் உன்னிடம் வந்தேன். ஆனால் நீ மாமியின் வாசனை யூட்டிய கூந்தலுக்குப் பின் ஒளிந்து கொண்டாய்.”
“நான் ஒளிந்து கொண்ட பொழுதும், என் கண்களுக்குப் பாதையைத் திறந்தே வைத்திருந்தேன். நீ என்ன செய்கிறாய் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். தாயாரின் மடியையும், வேலைக்காரிகளின் குழந்தைகளையும் தவிர, அப்போது வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. தந்தையாரின் குருகுலமும் அப்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கவில்லை. ஆகவே இந்த வீட்டில் எனக்குத் தனிமை உணர்ச்சி அதிகமாக இருந்தது. அந்தச் சமயத்தில் உன்னுடைய வருகை எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது தெரியுமா?”
“அப்பொழுதும் நீ என்னிடமிருந்து ஒளிந்து கொண்டு தானே இருந்தாய். உன்னுடைய சிவந்த சரீரமும், உருண்டை முகமும் எனது இளம் கண்களுக்குப் பெருவிருந்தாய் இருந்தன. நான் உன் பக்கத்தில் வந்து உனது தோளிலே கையை வைத்தேன். அதைப்பார்த்து அம்மாவும் மாமியும் என்ன சொன்னார்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இருவரும் புன்முறுவலோடு, ‘நமது
ஆவலைப் பிரம்மா நிறைவேற்ற வேண்டும்’ என்றார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், என்று, ஒளிந்து, எனக்கு, எனக்குத், கொண்டே, பெரிய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்