முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » இந்தப் புத்தகம் சமுதாயங்களின் சரித்திரம்
வால்காவிலிருந்து கங்கை வரை - இந்தப் புத்தகம் சமுதாயங்களின் சரித்திரம்
இந்தப்
புத்தகம்
சமுதாயங்களின்
சரித்திரம்
ஒரு காலத்தின் தேவையை
நிறைவேற்றிய கதைகள்
ஒரு காலத்தில் சிறு பத்திரிகைகள் வாசகர் உலகத்தில் ராகுல சாங்கி ருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ யைப் படித்திராதவர்கள் இருக்க மாட்டார்கள். இலக்கிய வாசகர்களின் அலமாரிகளில் புதுமைப் பித்தன், கு.ப.ரா., மௌனி போன்றோரின் படைப்புகளுடன் இப்புஸ்தகமும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.
ஒரு புஸ்தகம் 19 பதிப்புகள் வெளி வருவது ஒரு சாதனைதான். இதன் முதல் பதிப்பு 1949ல் வெளிவந்துள்ளது. இந்த நாற்பத்தி நாலு வருடங்களில் 19 பதிப்புகள் வெளிவந்துள்ளன. இந்நூலில் வெகுஜன ரசனைக்குத் தீனியளிக்கும் விஷயங்கள் அறவே இல்லை. விற்பனைக்குப் பாதகமான அம்சங்கள் இருந்தும் இத்தனை பதிப்புகள் வெளிவந்திருப்பது கவனத்துக்குரியது.
‘ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்தியாயனின் வாழ்வு வர்ணமயமானது. ராகுல்ஜிக்கு 36 மொழிகள் தெரிந்திருக்கின்றன. தன் வாழ்நாளில் சுமார் 150 புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் வைணவத் துறவியாக இருந்தார். பின்னர் ஆர்ய சமாஜத்தில் சேர்ந்தார். பின்னர் அதிலும் அதிருப்தியுற்று பௌத்த துறவியானார் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் ஒரு மங்கோலியப் பெண்ணை மணம் புரிந்தார். அன்றைய அரசியல் சூழ்நிலையில் மனைவியையும் குழந்தையையும் இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இந்தியாவுக்கு வந்த பின்னர் கமலா என்ற பெண்ணை மணந்து கொண்டார். 1963ல் அமரரானார்.
இந்நூலில் சமுதாயங்களின் சரித்திரத்தைக் கதை ரூபத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். இந்து-ஐரோப்பிய சமுதாயங்களின் வளர்ச்சியை மட்டும் ஆசிரியர் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். ஐரோப்பியசமுதாயத்தைக் கூட முழுவதையும் இதில் கொண்டு வரவில்லை. ஐரோப்பிய சமுதாயத்தில் குறிப்பிடத்தக்கதான கிரேக்க சமுதாயத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.
இயங்கியல், பொதுவுடைமைத் தத்துவ அடிப்படையிலேயே ஆசிரியர் சமுதாயங்களின் - வளர்ச்சியை அணுகியுள்ளார். அவரது இடதுசாரி நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக, அவர் வாழ்ந்த காலத்தில் பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாயம் வால்கா நதி பாயும் சோவியத் ரஷ்ய நாட்டிலே பிறந்தது. இந்த நம்பிக்கை தான் ஆசிரியரை, வால்கா நதிப் பகுதியிலுள்ள சமுதாயத்திலிருந்து இந்நூலைத் தொடங்க வைத்துள்ளது. ஆனால், அன்று ஆசிரியர் கண்ட ஐக்கிய சோவியத், சோஷலிஸக் குடியரசு இன்று மறைந்து விட்டது.
இதைப் படிக்கும்போது அறிவுபூர்வமாக எழுதப்பட்ட நீண்ட சரித்திர நாவலைப் படிப்பது போன்ற உணர்வு நம்மைத் தொற்றுகிறது. கற்பனையும், அறிவார்த்தமும் கலந்து எழுதப்பட்ட இந்தக் கதைகள் ஒரு காலத்தின் வாசகத் தேவையை நிறைவேற்றிய கதைகள் என்பதில் சந்தேகம் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தப் புத்தகம் சமுதாயங்களின் சரித்திரம் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்