முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » இந்நூலைப் பற்றி
வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி
இந்நூலைப்
பற்றி
“வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற புத்தகம் தயாரானதும், முதல் பிரதி எனக்குத்தான் கிடைத்ததென்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தை ஒரு முறையல்ல; பலமுறை படித்தேன். படித்துச் சொன்னேன். வயதாலும், அறிவாலும், தன்மையாலும் மாறுபட்ட பல திறத்தவருக்கும், படித்துச் சொல்லியிருக்கிறேன்; இக்கதைகளில் ‘கதை’ அம்சத்தைவிட, ‘சரித்திர’ அம்சமே அதிகமாயிருக்கிறதென்பது என் கருத்து. ‘கதைகள்’ லேசாகவும் சுலபமானதாயும் இருக்க வேண்டும்; ஆனால் இதிலுள்ள அநேகக் கதைகள், அறிவின் பாரத்தால் அழுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக்கருத்தை நான் ராகுல்ஜியிடம் தெரிவித்தேன். அதற்கு “இந்தக் கதைகள் நாளையும் செயலையும் குறிக்கும் சரித்திரமாகக் கருதப்பட்டாலும் எனக்குத் திருப்தியே” என்பதுதான் அவர் பதில்.
இந்நூலை நான் மனமாரப் புகழ்ந்திருக்கிறேன்; பலர் புகழவும் கேட்டிருக்கிறேன். பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஒரு மகாராட்டிர அறிஞர் “இந்த ஹிந்திப் புத்தகத்திற்கு ஈடான புத்தகம் இந்தியப் பாஷைகள் எதிலும் இதுவரை தோன்றவில்லை” என்று ஒரு பத்திரிகையில் இந்நூலைக் குறிப்பிட்டு எழுதியிருந்தபோது, தாய்மொழிப் பற்றுள்ள என் மனம் கர்வத்தால் நாட்டியமாடத் தொடங்கி விட்டது.
புகழ்ச்சி மட்டுமா? கடுமையான தாக்குதலையும், “வால்காவிலிருந்து கங்கை வரை” பெற்றிருக்கிறது. “விஸ்வ பந்து” என்ற பத்திரிகையின் டிசம்பர் இதழ் ஒன்றில் சுவாமிஜி என்ற புனைபெயரில் இந்நூலைத் தாக்கியுள்ள கனவான், “வேதத்தைத் தாக்கும் ‘மொட்டைத் தத்துவார்த்தி ராகுல்’ என்று கூறும் அளவுக்குக்கூடப் போயிருக்கிறார். தாக்கத் துணிந்தவர்கள் புனைபெயர் வைத்துக் கொள்வதேனோ?
ஒரு புத்தகம் பிடித்திருப்பதும் பிடிக்காமலிருப்பதும் மனிதர்களின் ருசியைப் பொருத்த விஷயம் மட்டுமல்ல, அவர்களின் திறமையைப் பொறுத்ததுங்கூட. எந்த ஒரு புத்தகமும் எல்லோருக்கும் திருப்தியைக் கொடுப்பதில்லை. இந்த விதிக்கு விலக்காக, “வால்காவிலிருந்து கங்கை வரை” மட்டும் எப்படியிருக்க முடியும்?
ராகுல்ஜியின் இந்த மகத்தான சிருஷ்டியை நான் நன்குணர்ந்திருக்கிறேன். நம் தாய் நாட்டின் மகானாகிய ஒரு சிந்தனையாளர், தமது வாழ்நாள் முழுவதும் தேடித் திரட்டிய அறிவுப் பொக்கிஷம், இந்நூலிலே அள்ளித் தரப் பெற்றிருக்கிறது. அவருடைய முடிவுகள் யாருக்கேனும் தவறாகத் தோன்றினால் அவர்கள் தர்க்க ரீதியாக, காரண - காரிய முறையில் அவைகள் தவறு என்று நிரூபிக்கட்டும்.
இந்நூலின் ஆரம்பக் கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸ்வன், புருகூதன் என்ற நான்கும் கி.மு. 6000த்திலிருந்து 2500 வரை உள்ள சமுதாயத்தைச் சித்தரிக்கின்றன. அது சரித்திரத்திற்கு முந்திய காலம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்நூலைப் பற்றி - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்