சத்ய சோதனை - பக்கம் 54
14.விரும்பி மேற்கொண்ட விரதம் |
விக்டோரியா ஹோட்டலில் என்னைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்துத் திங்கட்கிழமையன்று டாக்டர் மேத்தா அங்கே சென்றார். அங்கிருந்து நாங்கள் போய்விட்டோம் என்பதை அறிந்தார். எங்கள் புது விலாசத்தைத் தெரிந்துகொண்டு, எங்கள் அறைகளுக்கு வந்து என்னைப் பார்த்தார். கப்பலில் நான் செய்துவிட்ட தவறினால் என் உடம்பில் படை வந்துவிட்டது. அலம்புவதற்கும் குளிப்பதற்கும் கப்பலில் கடல் நீரையே உபயோகித்து வந்தோம். அந்நீரில் சவுக்காரம் கரையாது. சோப்பு உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று கருதி நான் சோப்புத் தேய்த்துக் கடல் நீரில் குளித்தேன். அதன் பலனாக உடம்பு சுத்தமாவதற்குப் பதிலாகப் பிசு பிசுப்பாயிற்று. இதனால், உடம்பில் படை வந்துவிட்டது. அதை டாக்டர் மேத்தாவுக்குக் காட்டினேன். அவர் காடித் திராவகத்தைப் போடச் சொன்னார். அதைப் போட்டதும் ஒரே எரிச்சலெடுத்து, நான் கதறி அழுதது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. டாக்டர் மேத்தா, என் அறையையும் அதில் நான் சாமான்கள் வைத்திருந்ததையும் பார்த்தார். அதில் தமக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். “ இந்த இடம் உதவாது ” என்றார். “நாம் இங்கிலாந்துக்கு வருவது படிப்பிற்கு மாத்திரம் அல்ல. முக்கியமாக ஆங்கிலேயரின் வாழ்க்கையிலும், பழக்க வழக்கங்களிலும் அனுபவம் பெறுவதற்காகவும் வருகிறோம். இதற்கு நீர் ஓர் ஆங்கிலக் குடும்பத்துடன் வசிப்பது நல்லது. ஆனால், நீர் அப்படி வசிப்பதற்கு முன்னால்....... என்பவருடன் சிறிது காலம் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அவரிடம் உம்மை அழைத்துப் போகிறேன்” என்றும் கூறினார்.
அவருடைய யோசனையை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, அந்த நண்பரின் அறைகளுக்கே குடிபோனேன். அவர் முழு அன்புடன் என்னைக் கவனித்துக் கொண்டார். தமது சொந்த சகோதரனைப் போலவே பாவித்து என்னை நடத்தினார். ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளையெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஆங்கில மொழியில் பேசவும் கற்றுக் கொடுத்தார். என்றாலும், என் சாப்பாட்டு விஷயம்தான் சங்கடமான பிரச்சனையாயிற்று. உப்போ, மசாலையோ இல்லாமல் வேகவைத்த காய்கறிகள் எனக்குப் பிடிக்கவே இல்லை. எனக்காக என்ன சமைப்பதென்று புரியாமல் எங்களுக்கு உணவளித்த வீட்டு அம்மாள் திகைத்தார். காலை ஆகாரத்திற்கு ஓட்ஸ் தானியக் கஞ்சி இருக்கும். அது கூடியவரை வயிற்றை நிரம்பும். ஆனால், மத்தியானச் சாப்பாட்டிலும் இரவுச் சாப்பாட்டிலும் எப்பொழுதும் எனக்குப்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
- Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்