சத்ய சோதனை - பக்கம் 406
34 ஆன்மப் பயிற்சி |
சிறுவர்களின் உடல், அறிவுப் பயிற்சியைவிட அவர்களுடைய ஆன்மிகப் பயிற்சியே இன்னும் அதிகக் கஷ்டமானதாக இருந்தது. ஆன்மப் பயிற்சிக்கு நான் சமய நூல்களை அவ்வளவாக நம்பியிருக்கவில்லை. என்றாலும், ஒவ்வொரு மாணவனும் தன் சமயத்தைக் குறித்த மூலாதாரமான விஷயங்களை அறிந்திருப்பதோடு அச்சமய சம்பந்தமான நூல்களைப் பற்றியும் பொதுவாகத் தெரிந்திருப்பது அவசியம் என்று கருதினேன். ஆகவே, என்னால் இயன்றவரையில், அத்தகைய அறிவு அவர்களுக்கு இருக்கும்படி செய்து வந்தேன். ஆனால், அது அறிவுப் பயிற்சியின் ஒரு பகுதியே என்பது என் கருத்து. டால்ஸ்டாய் பண்ணையில் சிறுவர்களுக்குக் கல்வி போதிக்கும் பணியை நான் மேற் கொள்ளுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஆன்மப் பயிற்சி அதனளவில் தனியானது என்பதை அறிந்திருந்தேன். ஆன்மாவை வளர்ப்பது என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு ஒருவரைப் பாடுபடும்படி செய்வதோடு தன்னைத் தானே அறியச் செய்வதுமாகும். இளைஞருக்கு அளிக்க வேண்டிய பயிற்சியில் இது முக்கியமானதோர் பகுதி என்று கருதினேன். ஆன்ம வளர்ச்சியோடு தொடர்பில்லாத எல்லாப் பயிற்சியும் பயனற்றது என்றும், அது தீமையாகவும் ஆகக் கூடும் என்றும் எண்ணினேன்.
வாழ்க்கையில் நான்காவது நிலையான சன்னியாச ஆசிரமத்தை அடைந்த பிறகே ஆன்ம ஞானத்தை அடைய முடியும் என்ற மூட நம்பிக்கை இருந்து வருகிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், மதிப்பதற்கரியதான இந்த அனுபவத்திற்கு வேண்டிய முயற்சியை வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தை அடையும் வரையில் தள்ளி வைத்துக்கொண்டு போனால் பிறகு அடைவது கிழப்பருவத்தையேயன்றி ஆன்ம ஞானத்தை அன்று. பரிதாபகரமான இரண்டாவது குழந்தைப் பருவத்திற்குச் சமமான அந்த முதுமைப் பருவம், பூமிக்குப் பாரமாக வாழ்வதேயாகும். நான் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தபோதே, 1911-12-ஆம் ஆண்டிலேயே இக்கருத்தைக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால், என்னுடைய இக்கருத்துக்களை இதே முறையில் நான் அப்பொழுது எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.
அப்படியானால், ஆன்மப் பயிற்சியை அளிப்பது எப்படி? குழந்தைகள், தோத்திரப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் படி செய்தேன் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் நூல்களிலிருந்து அவர்களுக்குப் படித்துச் சொன்னேன். ஆனால்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 404 | 405 | 406 | 407 | 408 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், ஆன்மப், ஆனால், ஆன்ம, ஞானத்தை, என்பது - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்