முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மனிதனுக்கு தேவையான யோகம் எது?
அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதனுக்கு தேவையான யோகம் எது?
போகத்தில் புரண்டு, ரோகத்தில் அவதிப்படும் சாதாரண மனிதன், இனி யோகத்தை தரிசிக்கும்படி செய்வோம்.
அண்மையில் ஒரு நண்பரை நான் சந்தித்தேன். அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் இறந்து போனார்கள். குடும்பத்திலும் சிறிது கசப்பு. அவர் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
சோகமாக உட்கார்ந்திருந்த அவர், `இனி என்ன இருக்கிறது பிரதர்? வனமோ வனாந்தரமோ எங்காவது போய்ச் சிவனே என்று விழ வேண்டியது தான்!’ என்றார்.
அப்படி விழுவதுதான் யோகமா?
இல்லை, அது வெறும் விரக்தி.
செயல்படக் கூடியவன் செயலை மறப்பதும், அல்லது துறப்பதும் கரும யோகத்தின் ஒரு பகுதி.
பலமுள்ளவன் எதிரியை அடிக்காமலிருப்பது அடக்கத்துக்கு இலக்கணம்.
வசதியுள்ளவன், பிறரை ஏமாற்றாமல் இருப்பது பெருமையின் ஒரு கூறு.
நன்கு வாழும்போதே ஒருவன் யோகியாவது, உயர்ந்த நிலை.
விரக்தியுற்ற நிலையில் யோகியாவது, தாழ்ந்த நிலை.
`தமோ’வாக இருப்பது `ரஜோ’வாக மாறி, `சத்வ’ குணத்துக்குத் தள்ளப்படும் யோகத்தில் பெருமை இல்லை.
ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் பார்த்துச் சிரித்தபடி யோக நிலையை எட்டுவதே தெய்விகம்.
இமய மலையிலும், அதன் அடிவாரங்களிலும் ஏராளமான சாதுக்கள் திரிகிறார்கள்.
பலர் ஏற்படுத்திய மிஷன் அமைப்புகளில், பலவகையான சந்நியாசிகள் இருக்கிறார்கள்.
இவர்களில் மூன்று வகையினர் உண்டு.
ஒரு வகையினர், சிறு வயதிலேயே ஞானம் கைவரப்பெற்று அப்படியானவர்கள்.
இன்னொரு வகையினர், குடும்பத்தில் சிக்கிச் சீரழிந்து வந்தவர்கள்.
மூன்றாவது வகையினர், பிறப்பிலேயே ஆண் தன்மை இல்லாதவர்கள்.
இவர்களிலே ஞானிகள் உண்டு; துறவிகள் உண்டு; சந்நியாசிகள் உண்டு; ஆனால் யோகிகள் இல்லை.
`யோகி’ என்பவன் சித்தத்தை மட்டும் அடக்கிப் பழகியவனல்ல; ஜகத்தையும் அடக்கி வெற்றி பெற்றவன்.
அவர்களுடைய திருஷ்டியில் மூன்று காலங்களும் தோன்றும்.
அவர்கள் தங்கள் கண்களால் எதைப் பார்த்தாலும் வசியமாகும்.
யோகிகளின் பார்வையில் புலி அடங்கும்.
மயில் ஆடும்.
மேகம் மழை பொழியும்.
அவனை நெருப்புச் சுடாது.
குளிர் அவனை அடக்காது.
மார்கழி மாதத்தில் சமவெளியில் நம்மால் உலவ முடியவில்லை.
அவர்கள் வெள்ளிப் பனிமலையில் உலாவுகிறார்கள்!
பனிக்கட்டிகள் மிதந்து வரும் நீரில் நீராடுகிறார்கள்!
கிடைக்கும் உணவை உண்கிறார்கள்.
போகத்திற்கு அலைவதில்லை.
ரோகம் அவர்களைத் தீண்டுவதில்லை.
மருந்து மாத்திரைகளுக்கு அங்கே வேலை இல்லை.
நாம் எல்லாருமே அப்படி யோகிகளாக முடியுமா?
முடியாது.
அப்படித்தான் ஆகத்தான் வேண்டுமா?
தேவை இல்லை.
யோகியாக இல்லாமலேயே, யோகம் கைவரப் பெற்றவனாக லெளகீக வாழ்க்கையை ஒருவன் நடத்த முடியும்.
ஒருவன், மனைவியோடு வாழலாம்; ஆனாலும், அவளைத் தீண்டாமலிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருவனுக்கு நிறைய உணவு வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தாலும் அந்த உணவை உண்ணாமலிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
இதுதான் இயக்கத்தில் இயங்காமை.
இதுவே லெளகீக மனிதனுக்குத் தேவையான யோகம்.
பதவி என்றால் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் நேரம் வரும் போது, அந்தப் பதவியைத் தூக்கியெறியும் திராணி எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை.
`நம்மை அது அடக்குவதா, அதை நாம் அடக்குவதா?’ என்று வரும் போது, `எதையும் நான் அடக்க முடியும்’ என்ற நிலைக்கு வருவதே யோகம்.
அழகான பெண்ணொருத்தி தனிமையிலே காத்திருக்கிறாள், நமக்காக.
நமக்கோ ரத்தம் உடம்பில் துறுதுறுவென்று ஓடுகிறது.
இந்த நிலையில் அந்தப் பெண்ணை வெறுக்கக் கற்றுக் கொள்வது யோகம்.
எது கிடைத்தாலும், `எனக்கு, எனக்கு’ என்று ஓடுகிறவன் போகி.
பின்பு ஒரு நாள் அவன் ரோகி.
`எதையும் விடத் தான் உயர்ந்தவன்’ என்று கருதக் கூடியவன் யோகி.
வாரியார் சுவாமிகள் சொன்ன கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
ஒரு குறுகலான பாலம்; நன்றாகக் குளித்து விட்டு நெற்றியில் விபூதிப் பூச்சோடு அந்தப் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது ஒரு யானை; எதிரிலே அசிங்கமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பன்றி. பன்றி, வாலை ஆட்டிக் கொண்டு கம்பீரமாக வருகின்ற வேகத்தில், சக்தி வாய்ந்த யானைக்கு கோபம் வரவில்லை. அது ஒதுங்கி நின்று வழி விடுகிறது. பன்றிக்கோ தான் வெற்றி பெற்று விட்டதாக நினைவு. யானையே தனக்குப் பயந்து விட்டதாக ஒரு கனவு. ஆனால், யானையினுடைய நினைவோ, `பாவம் பன்றி! விட்டு விடுவோம்’ என்பதாகும்.
தன்னை உயரத்தில் வைத்துப் பார்க்கும் ஆணவம் இல்லாமல் யானை ஒதுங்கிற்று.
இன்னொரு யானைக் கதை.
ஒரு யானையின் மீது சவாரி செய்ய ஒரு அணில் விரும்பிற்று. `சரி, முதுகில் ஏறிக் கொள்!’ என்றது யானை. அணில் ஏறிக் கொண்டது.
யானை அதைச் சுமந்து செல்லும் போது யானையின் தலையில் ஒரு தென்னை மட்டை விழுந்தது.
யானை ஒரு பிளிறு பிளிறிற்று.
உடனே அணில் கேட்டது, `நான் முதுகில் இருக்கிறது வலிக்கிறதா?’ என்று.
யானைக்கு அணில் ஒரு சுமையா?
ஆனாலும், அணிலுக்கு அப்படி ஒரு நினைவு.
தாழ்ந்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதும் போது, உயர்ந்தவர்கள் சிரித்துக் கொண்டே ஒதுங்கிவிட வேண்டும்.
அதுவும் யோகம் தான்.
`என்னைவிட நீ உயர்வா?’ என்று சண்டைக்குப் போகக் கூடாது.
`உலகத்தில் கடவுள் தனக்கு அடுத்தபடியாக நம்மை வைத்திருக்கிறான்’ என்று கருதி, அந்தத் தெய்விக நிலையை எட்டி விடுகிறவனே
யோகி.`பட்டதெல்லாம் போதுமடா பகவானே’ என்ற பட்டினத்தார் யோகம், அனுபவ யோகம்.
ஒன்றைப் பார்த்த உடனேயே, `இது விஷம்’ என்று கண்டு கொள்பவனே அறிவார்ந்த யோகி.
`இது மோசம்’ என்று கண்டு கொள்கிறவன் அறிவார்ந்த யோகி.
அதை அனுபவித்துப் பார்த்து விலகுபவன், அனுபவ யோகி.
அறிவார்ந்த யோகியின் செயலைத்தான், `ஞான திருஷ்டி’ என்கிறார்கள்.
ஒரு பஸ்ஸில் ஏறி வெளியூருக்குச் செல்ல விரும்பினார் ஒரு நண்பர். திடீரென்று, `இன்றைக்கு போக வேண்டாம்’ என்று முடிவு கட்டினார்.
அன்று அந்த பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது.
இது இறையருள் யோகம்.
இறைவன் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுப்பதில்லை.
பூர்வ ஜென்ம விதிவசத்தால் சிலருக்கு இது கைகூடுகிறது.
நூறாண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி இறையருள் யோகம் கைவரப் பெற்றவர்கள் பிறக்கிறார்கள்.
இந்த விதிவிலக்குகளை நம்முடைய வாழ்க்கையில் எடைபோடக் கூடாது.
உண்மையான யோகம் என்பது, நான் முன்னே சொன்னபடி, வாழ்ந்து கொண்டே வாழாமல் இருப்பது; அல்லது வாழாமலே வாழ்வது.
பகவான் கீதையிலே கூறும் முக்கியமான யோகங்கள் சில. கரும யோகம் அவற்றிலே ஒன்று.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோகம், என்று, இல்லை, யானை, யோகி, உண்டு, வகையினர், அணில், போது, தான், அந்தப், பன்றி, அறிவார்ந்த, வரும், இருப்பது, அப்படி, ஒருவன், ஆனால், வேண்டும், நான், எல்லோருக்கும் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்