முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » ஞானத்தின் பரிபக்குவ நிலை
அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானத்தின் பரிபக்குவ நிலை
இந்து தெய்வங்கள் மனித வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத உன்னத நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. `தெய்வத்துக்கு இணையாக எதையும் சொல்லக் கூடாது’ என்று கட்டளை போடுவதில்லை.
இந்து தெய்வம் மனித வடிவில் இயங்கும்.
மனித வாழ்க்கையின் பல கூறுகளிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்.
அது காதலிக்கும்; பரவசப்படும்; அது போர் புரியும்; யுத்த தர்மத்தைப் போதிக்கும்.
அது தூது செல்லும்; அரசு தர்மத்தைப் புகட்டும்.
காதலனையும் காதலியையும் சேர்த்து வைக்கின்ற வேலைக்குக் கூட அது துணை புரியும்.
ஆகவேதான் இந்து இதிகாசங்களோ, புராணங்களோ வறட்டுத்தனமாக இல்லை.
மற்ற மதத்தவர்கள் படித்தால் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுவதாக இல்லை.
நமது இதிகாசங்களில் லெளகீகத்தின் கம்பீரம் இருக்கிறது.
சுகமான காதலியின் கனவு இருக்கிறது.
அவற்றில் ஒன்று ராதா – கிருஷ்ண பாவம்.
இந்த பாவத்தை ஒரு காம நூல் போலவே வடித்தார் ஜயதேவர்.
அது ஞானத்தின் முதிர்ச்சி பெற்ற நிலையாயினும் காம ரசமாகவே தோற்றமளிக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அவர் `அஷ்டபதி கீதகோவிந்தம்’ என்ற தலைப்பில் இதனை எழுதினார்.
ஒவ்வொன்றும் எட்டு சரணங்கள் கொண்ட இருபத்து நான்கு கீதங்களாக அவர் இதனை வடித்தார்.
இதில் ஒரு வேடிக்கை. இதைப் படித்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், `இது ஒரு ஆபாச நூல்’ என்று தடை செய்ய உத்தரவிட்டார்.
அதோடு ஜயதேவரைக் கைது செய்யும்படியும், ஆணை பிறந்தது.
அதன் பிறகுதான் ஜயதேவர் வாழ்ந்தது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது விளக்கப்பட்டது.
ராதை, கிருஷ்ணனுக்காக ஏங்குகிறாள்; கிருஷ்ணன், ராதைக்காக ஏங்குகிறான்; தோழி ஒருத்தி தூது செல்கிறாள்; இடையில் அனைத்தும் வருணனைகள்; அவர்கள் வாழ்ந்த கதைகள்.
ஒவ்வொன்றும் சுவையான வருணனை.
சற்று பச்சையாக இருந்தாலும் தேவ பாவத்தோடு அவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, லெளகீக வாழ்க்கையிலும் மனிதனுக்கு இச்சை வருகிறது.
நல்ல காதலன் காதலியின் இலக்கிய பாவம், கீத கோவிந்தம் முழுவதிலும் இழையோடுகிறது.
அதனால், அதன் உபந்யாசகர்கள் இதை மேடையில் எடுத்துச் சொல்வதில்லை.
பக்தி நூல் வரிசையில் பலர் இதைச் சேர்ப்பதும் இல்லை.
ஆனால், நான் இதனைச் சேர்க்க விரும்புகிறேன்.
அண்மையில் கீத கோவிந்தத்தில் இருந்து எட்டு கீதங்களை கவிதைகளாக எனது `கண்ணதாசன்’ இதழில் எழுதியுள்ளேன்.
மற்றவற்றையும் கவிதையாக எழுதி முடிக்க இருக்கிறேன்.
தோழி கண்ணனிடம் சொல்கிறாள்:
`கேசவா! ராதா எவ்வளவு மெலிந்து விட்டாள் தெரியுமா? அவள் கழுத்தில் தங்க வடம் போட்டிருப்பாளே, அதைத் தாங்கக்கூடச் சக்தி இல்லாமற் போய்விட்டது அவளுக்கு; மயங்கி மயங்கி விழுகிறாள்.
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
குளிர்ச்சியான சந்தனத்தை அவள் மார்பில் பூசினேன். `ஐயோ, கொதிக்கிறதே!’ என்றாள்.
`நான் படும் துன்பத்தில் ஏனடி நஞ்சிட்டுக் கொல்கிறாய்?’ என்றாள்.
அவள் நெஞ்சில் நெருப்பு மூண்டிருக்கின்றது. அதனால் வருகின்ற மூச்செல்லாம் அனல் மூச்சாக வருகின்றது.
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
கண்ணா! என்ன வஞ்சனை உனக்கு!
அவள் இவ்வளவு மெலியும்படி வஞ்சித்து விட்டாயே?
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
கண்ணெனும் வலைவீசி உன்னைக் கட்டியிழுக்க நினைத்தாள்; மணிவண்ணன், தப்பிவிட்டான் என்றதும் மாயக்கண்ணீர் வடித்தாள்.
புண்ணாகி விட்டது அவள் நெஞ்சு; புனலாடுகின்றன அவள் கண்கள்; அனல் பட்ட புழுவானாள் ராதை!
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
மாந்தளிர் மஞ்சத்தில் படுக்க வைத்தேன். `ஐயோ! மஞ்சத்தில் ஏனடி நெருப்பை இட்டாய்’ என்றாள்!
கொஞ்சமா அவள் துயரம்…?
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
குன்றத்தைக் குடையாகப் பிடித்தவனே! ஆயர் குலம் காத்தவனே!
கோபியரை முத்தமிடும் கோபாலா!
கம்சக் கூட்டத்தின் வம்சத்தையே கருவறுத்த கண்ணா!
அடியவர்க்குக் கருணை மழை பொழியும் கார்முகிலே!
ராதையைக் காத்தருள மாட்டாயா…?’
-தோழியின் உரை கேட்டான் கண்ணன்.
அவனுக்கும் ஏக்கம் பிறந்தது.
தன்னுடைய தாபத்தையும் அவனிடம் கூறுகிறான்.
ராதையை உடனே அழைத்து வரச்சொல்கிறான்.
தோழி, ராதையிடம் சொல்கிறாள்:
`ராதா! கண்டேன் கண்ணனை!
தென்றல் தாலாட்டுமிடத்தில் அவன் இருக்கிறான். அங்கே செம்பூக்கள் மணம் பரப்புகின்றன.
பிரிந்திருக்கும் காதலர்களை வாட்டி எடுப்பானே மன்மதன், அவன் கண்ணனையும் வாட்டுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
மன்மதன் கணைகள் வீச, மதியும் வந்து உயிர் குடிக்க, அந்த வெண்ணிலா ஒளியில் தன்னை மறந்து தன்னைந் தனியே வாடுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
நள்ளிரவு.
தேனீக்கள் இசை பாடுகின்றன. அந்தப் பாடல்களில் மலர்கள் உறங்குகின்றன; ஆனால் மாயவன் உறங்கவில்லை.
அங்குமிங்கும் அலைகிறான்; ஏங்குகின்றான்!
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
அவன் தன் இல்லத்தைத் துறந்தான். காட்டுப் பூக்களால் மெத்தை விரித்துக் காட்டிலே காத்திருக்கிறான்.
எப்பொழுதும் அவன் வாயிலிருந்து, `ராதா! ராதா….!’ என்ற ஒலியே புறப்படுகிறது.
புல் மஞ்சத்தில், பூப்படுக்கையில் உண்ணாமல், உறங்காமல், முல்லைச் சிரிப்புதிர்த்து மோகத்தால் வாடுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் குயில்கள் சிறகடித்தால், `என் ராதை தான் வருகிறாளோ…?’ என்று அங்குமிங்கும் ஓடுகிறான்; ஆசையுடன் தேடுகிறான்.
நங்கை உன்னைக் காணாவிட்டாலும் அவன் நம்பிக்கை தளரவில்லை.
மங்கலான இந்த இரவு, உன்னை அவன் சந்திக்கும் நேரமடி!
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
வானில் இடி இடித்தால், `இது ராதையின் கால் சிலம்பு ஒலி,’ என்கிறான்.
கானகத்தில் அவன் உன்னைக் கட்டி அணைத்ததை எண்ணி எண்ணி உன் அழகையே புகழ்ந்து கொண்டிருக்கிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
பட்டாடை புனைந்து பரிமளிக்கும் கூந்தலுடன் இட்டமுடன் விளையாட ஏற்ற இடம் நாடி, கட்டழகன் செல்கிறான்; காதலி நீ பின் தொடர்க, முட்டியெழும் ஆசையை மோகனமாய்த் தீர்ப்பதற்கு!
ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
`ராதை! ராதை!’ என வேய்ங்குழல் ஊதுகிறான்!
பாவை மென்னுடல் தழுவும் சற்றே பரிமளிக்கும் பூவை நின்னாசை நினைப்பால் கூறுகிறான்.
ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
பறவை சிறகடிக்க, பசுங்கொடிகள் அசைந்தாட, `பாவை வருவாள்’ என்று எதிர்பார்த்து ஏக்கமுற,
புத்தம் புதுமலராய்ப் பூவமளி அமைத்து, அவன் நீ வருவாய் என வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பான்!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
ஒலிக்கும் நூபுரங்கள், மாபெரும் தொல்லையடி!
மறைவாய் கலவி செய்ய மாபெரும் இடையூறு!
கருப்பில் ஆடையுடன் கங்குல் கவிகையிலே, இருள்சேர் பூப்பந்தல் இனிதாய்ச் சேர்ந்திருக்க, தருணம் இதை உணர்ந்து தடுமாற்றம் அகற்றிவிடு!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
முரஹரி மார்பிடை முயங்கும் மாலையடி, கார்மேகக் கூட்டத்தில் வெண்பறவைக் காட்சியடி!
மின்னல் இடையாளே!
ஊடல் அகற்றி இனி இன்னல் தீர்க்க வரும் இனியவனைக் கூடிடுக! தருணம் இது, தோழி, தடுமாற்றம் அகற்றிவிடு!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
பூமகள் விரித்த மஞ்சம்; பொன்னுடலைச் சாய்த்தவுடன், மேகலையை அவிழ்ந்து விடு! மோகத்தோடு உறவாடு!
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவள், வனமாலி, அவன், மயங்கி, தடுமாறி, மயங்குகிறானே, விளையாட, மாதைப், பிரிந்து, மறைந்து, என்று, ஆனந்தத், தென்றலடி, கரத்தால், பற்றியொரு, பாசமிகு, கோபியரின், கேசவா, தழுவி, நிற்கிறாய், கொங்கை, நிற்கிறாள், ராதை, தோழி, ஆற்றங், கரையருகே, மனித, என்றாள், உன்னைக், மஞ்சத்தில், இந்து, இல்லை - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்