முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » காலம் அறிந்து காரியம் செய்
அர்த்தமுள்ள இந்துமதம் - காலம் அறிந்து காரியம் செய்
காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள், அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை.
ஒரு வருஷம் முடிகிறது என்றால், ஒரு வயது முடிகிறது என்று பொருள்.
வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர, இறங்குகிற சக்தி கிடையாது.
எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல; ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பதே கேள்வி.
மராட்டிய வீரன் சிவாஜியின் வயதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்? அவன் நடத்திய வீர சாகஸங்கள் வரலாறாயின!
ஆதிசங்கரர் சமாதி அடையும்போது வயது முப்பத்து இரண்டுதான்.
ஆனால், அந்த வயதுக்குள் அவர் ஆற்றிய காரியங்களின் பயனே இன்றைய பீடங்கள்.
இந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதிசங்கரர் ஒரு மைல்கல்.
இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவரும் அவரே.
வயதுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் ஓடுகிற வருஷங்கள் உருப்படியான வருஷங்களாக இருக்க வேண்டும்.
இன்ன ஆண்டில், இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால், அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.
உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே!
பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் பயனற்ற பிறவிகளே!
எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.
எனது இளமைக் காலங்கள்- அவற்றை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
எழுத உட்கார்ந்தால் மளமளவென்று என் கைப்படவே நாற்பது ஐம்பது பக்கங்கள் எழுதியதை எண்ணிப் பார்க்கிறேன்.
பரபரப்பான நடை; சுறுசுறுப்பான சிந்தனை; துருதுருவென்றிருந்த மூளை.
எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிறேன்.
அவை, எவ்வளவு வீணாகி விட்டன என்பதை எண்ணும் போது, `இறைவா, இன்னொரு முறை இளமையைத் தர மாட்டாயா?’ என்று கெஞ்சத் தோன்றுகிறது.
`அதைப் புத்தகமாக எழுத வேண்டும். இதைப் புத்தகமாக எழுத வேண்டும்’ என்றெல்லாம் இப்போது ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது.
திடீர் திடீரென்று உடம்பு சோதனை செய்கிறது.
இந்தச் சோதனை இல்லாத காலங்களில் பயனற்ற அரசியல் கட்டுரைகளை எழுதினேன்; பயனற்ற மேடைகளில் காட்சியளித்தேன்; வீண் வம்புகளில் ஈடுபட்டேன்; விளையாட்டுகளையே வாழ்க்கை என்று கருதினேன்.
சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆசைகள் வளர்ந்தபோது அந்தச் சக்தியை வழங்க, உடம்பு அடிக்கடி மறுக்கிறது.
இரணியனுக்கும் பிரஹலாதனுடைய வயதிருந்தால் அவன் நரசிம்ம அவதாரத்துடனேயே சண்டை போட்டுப் பார்த்திருப்பான்.
அறிவும் உணர்ச்சியும் தாமதித்தே வருகின்றன; ஆனால், காலம் முந்திக் கொண்டு வருகிறது.
இருபது வருஷங்களுக்கு முன்பு குமரியாக இருந்தவள் இப்போது கிழவியாகக் காட்சியளிக்கிறாள்.
அப்போது அவளுக்காக ஏங்கிய ஆடவர்களும், இப்போது அவளிடம் ஆத்ம விசாரம்தான் பேச முடிகிறது.
முன்பு எனக்கு வந்த வருமானம் இப்போது இல்லை.
அந்த வருமானத்தை நான் செலவழித்த போது இதே போல் வந்து கொண்டே இருக்கும் என்று கருதினேன்.
ஆனால், அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் உள்ள பேதம் இப்போதுதான் புரிகிறது.
மலர் பூத்தவுடனேயே அது கூந்தலுக்குப் போகாவிட்டால், அது வாடியவுடனேயே காலடியில் விழத்தான் வேண்டியிருக்கும்.
ஈயம் பத்திரமாக இல்லாவிட்டால், அது பேரீச்சம் பழத்துக்குத்தான் விலையாக இருக்கும்.
குருஷேத்திரம் எப்போது நடந்தது?
பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பிறகு.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, ஆனால், பயனற்ற, வேண்டும், இப்போது, எழுத, எண்ணிப், பார்க்கிறேன், அந்த, வயது, அவன், முடிகிறது - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்