முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » ஞானியின் பக்குவம்
அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானியின் பக்குவம்
இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும்பாகி விடுகிறான்.
கனபரிமாணத்தில் அளவிட முடியாததாக இருக்கும் ஆலமரத்தைக் கண்ணுக்குத் தெரியாத காற்றும் சாய்த்து விடுகிறது.
துறவிக்கு வேந்தன் துரும்பு.
சொத்து சுகங்களில் எவனுக்குப் பற்றில்லையோ, அவனுக்கு இவை எல்லாமே துச்சம்.
`நான், நான்’ என்னும் ஆணவத்தைப் பற்றி, `அர்த்தமுள்ள இந்து மதம்’ முதல் பாகத்தில் எழுதியிருக்கிறேன்.
அந்த ஆணவம் போகிக்கு வரும்; யோகிக்கு வராது.
எல்லாவற்றையும் கடந்த நிலை ஞானியின் நிலை.
`என்னுடையது’ என்று சொல்ல இறைவனைத் தவிர அவனுக்கு எதுவும் இல்லை.
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.
அந்த மிராசுதார் ஒரு பெரிய நஞ்சை நிலப்பரப்பைக் காட்டி, `இவையெல்லாம் என்னுடையவை’, என்றார்.
தன்னுடைய சொத்துக்களை ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டி, `இது எனக்குச் சொந்தம்’, என்றார்.
எவ்வளவு பெரிய ஆணவக்காரனும் இறுதியில், இறைவன் என்னும் நெருப்புக்கே சொந்தமாகி விடுகிறான்.
ஆனால், பற்றற்ற துறவியின் சடலம் எரியும்போது கூட அந்த நெருப்பு அவர்கள் ஊணுடலை எரிப்பதோடு நின்று விடுவதில்லை; ஞான ஒளியையும் பரப்புகிறது.
புறப்பட்ட இடம் எவனுக்குத் தெரிகிறதோ, அவனுக்கே தான் போய்ச் சேர வேண்டிய இடமும் தெரியும்.
ஜனநாயகத்தில் ஐந்து வருட காலம் என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வருகிறவனே, அந்தப் பதவி நிரந்தரமானது, என்பது போல் ஆடத் தொடங்கி விடுகிறான்.
அவன் மந்திரியான உடனே அரசாங்கக் கார்கள் ஓடி வருகின்றன.
அதிகாரிகள் `சலாம்’ போடுகிறார்கள்; போலீஸ்காரர்கள் `சல்யூட்’ அடிக்கிறார்கள்.
அதே போலீஸ்காரன் ஒரு சமயத்தில் அதே மந்திரியை கைது செய்கிறான்.
தான் நியமித்த நீதிபதியாலே அவன் விசாரிக்கப்படுகிறான்.
தான் நிர்வகித்த சிறைச்சாலைக்குள்ளேயே அவன் குடியேறுகிறான்.
மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ, அப்படியே அவனும் நடத்தப்படுகிறான்.
ஆனால், பற்றற்ற துறவிக்கோ, இந்தச் சிக்கல்கள் எவையும் இல்லை.
தன் உடலுக்காக ஒரு `சோப்பு’க் கூட அவன் வாங்குவதில்லை.
கங்கையில் தண்ணீர் ஓடினால் அவன் குளிக்கிறான்; அது வற்றிவிட்டால் அவன் கிணற்றுத் தண்ணீரை நாடுகிறான்.
ஆனால், பதவி மோகக்காரனோ, ஒரு புதிய கங்கையை உற்பத்தி செய்ய விரும்புகிறான்.
`விட்டுவிடப் போகுதுயிர், விட்டவுடனே உடலை சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்,’ என்றார் பட்டினத்தார்.
`மேல் விழுந்து உற்றார் அழுமுன்னே ஊரார் சுடும் முன்னே குற்றாலத்தானையே கூறு’ என்றார்.
மரணம் நிச்சயம் என்று தெரிந்தும், மனிதன் ஆசையாலும் ஆணவத்தாலும் அலைமோதுகிறான்.
ஆனால், ஞானிக்கு ஒருவகை ஆணவம் வருகிறது. அந்த ஆணவம் வென்றும் விடுகிறது.
`நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்றாரே அப்பர் சுவாமிகள். அவர் கடைசி வரையிலே தன்னை ஒரு இறைவனின் குடிமகனாகக் கருதினாரே தவிர, ஒரு அரசனின் குடிமகனாகக் கருதியதில்லை.
ஒரு பஞ்சப் பரதேசி, துறவி, சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.
குளிர்காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலிலே துண்டை விரித்து அவர் படுத்திருந்தார்.
உலகத்தையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவன் அருகிலே வந்தான்.
ஞானி அவனைக் கவனிக்கவில்லை.
கால்மேல் கால் போட்டபடி சூரிய கிரணங்களில் குளித்துக் கொண்டிருந்தார்.
`நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்!’ என்றான் அவன்.
`அப்படியா?…’ என்று சாதாரணமாகச் சொன்னார் ஞானி.
`ஏ, ஞானியே! உனக்கு என்ன வேண்டும், கேள்; நான் தருகிறேன்!’ என்றான் அலெக்சாண்டர்.
`எனக்கு ஒரு உதவி வேண்டும்,’ என்றார் ஞானி.
`என்ன வேண்டும்? பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா, மாளிகை வேண்டுமா?’ என்று கேட்டான்.
`ஒன்றும் வேண்டாம். நீ கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். உன் நிழல் வெயிலை மறைக்கிறது’ என்கிறார் ஞானி.
அலெக்சாண்டர் என்றால் உலகமே நடுங்கும்; ஞானி நடுங்கவில்லை.
அலக்சாண்டரின் ஆணவத்தை, ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.
காரணம், ஞானிக்குத் தேவை என்று எதுவுமில்லை.
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பாராத ஆணவம், தன்னம்பிக்கை.
ஆசை வயப்பட்ட ஆணவம், திமிர்.
ஒரு ஞானியிடம் ஒரு பணக்காரன் போனான்.
`இதோ பார்! நான் வந்திருக்கிறேன்’ என்றான்.
ஞானி அமைதியாக அவனைப் போகும்படி கை அசைத்தார்.
`பின் எப்பொழுது வருவது?’ என்று அவன் கேட்டான்.
`நான் செத்த பிறகு வா’ என்றார் அவர்.
`நீ செத்த பிறகு நான் வந்து என்ன செய்வது?’ என்றான் அவன்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவன், என்றார், என்று, ஞானி, ஆணவம், வேண்டும், ஆனால், அந்த, என்றான், அலெக்சாண்டர், நான், வேண்டுமா, தான், `நான், காட்டி, விடுகிறான், அவர் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்