முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » பூஜையில் நிம்மத
அர்த்தமுள்ள இந்துமதம் - பூஜையில் நிம்மத
சந்நியாசிகளும், சாதுக்களும் செய்வது போன்ற ஒரு பூஜையை இங்கே சொல்லி, உங்களை நான் பயமுறுத்தப் போவதில்லை.
ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் சொல்வது போல, சில எளிமையான வழிகளையே சொல்லப் போகிறேன்.
ஆத்மாவையும், உடலையும் அமைதியடையச் செய்வதே பூஜையின் நோக்கம். இரண்டும் அமைதியுற்ற நிலையே, நிம்மதிக்கு மூலாதாரம்.
பகவத் கீதை படித்திருப்பீர்கள். அதிலுள்ள தியான யோகம் உங்களுக்கு விளங்கியிருக்கும். அது சற்று கடுமையானது.
எளிமையான முறையில் ஒரு சிறிய அறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த அறையில் விநாயகர், சூரியன், ஈஸ்வரன், விஷ்ணு, அம்பாள் இந்த ஐந்து தெய்வங்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அன்பும் பக்தியும் மீறிப்போய், கிடைக்கின்ற சுவாமி படங்கள், சிலைகள் அனைத்தையும் வைத்துக் கொள்வது தவறில்லை என்றாலும், பெரியவர்கள் சொல்வது போல மேற்கண்ட ஐந்து மூல மூர்த்திகளையும் ஒருங்கு வைத்துப் பூஜை செய்வதே சிறந்தது.
இதற்குப் `பஞ்சாயதன பூஜை’ என்று பெயர்.
இந்த மூர்த்திகளைக்கூட ஓவிய ரூபமாகவோ, சிலை வடிவமாகவோ வைக்காமல் வேறொன்றில் ஆவாகனம் செய்து வைப்பது நல்லது என்கிறார் பெரியவர்.
அவை இயற்கையாகக் கிடைக்கும் ஐந்து பொருள்களில் அமைந்திருக்க வேண்டும்.
இவற்றில் ஈஸ்வரனுக்குரிய `பாண லிங்கம்’. இது நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.
அம்பிகைக்குரியது, `ஸ்வர்ணமுகி சிலா’ என்ற கல்; தங்க ரேகை ஓடிய அந்தக் கல், ஆந்திர தேசத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.
விஷ்ணுவின் வடிவமான, `சாலக் கிராமம்’, நேபாளத்தில் கெண்டகி நதியில் கிடைக்கிறது.
சூரியனுக்குரிய `ஸ்படிகம்’, தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.
விநாயகருக்குரிய `சோனபத்திரக் கல்’ கங்கையோடு கலக்கும், `சோனே’ ஆற்றில் அகப்படுகிறது.
இந்த ஐந்தையும் ஒரு இடத்தில் சேர்த்து வைத்தால், `தேசத்தையே ஒரு இடத்தில் வைத்துப் பார்த்தது போல் இருக்கும்’ என்கிறார் பெரியவர்.
எல்லாக் கற்களுமே வழுவழுப்பாக இருக்குமாம். இடுக்குகள், இடைவெளிகள் இருக்காதாம். கழுவுவதும், துடைப்பதும் சுலபமாம். அபிஷேகம் செய்து துடைக்க அதிக நேரம் ஆகாதாம். இதற்கு பூஜை மண்டபம் கூடத் தேவை இல்லையாம். ஒரு சின்ன சொம்பிலோ, சம்புடத்திலோ கூடப் போட்டு வைத்து விடலாமாம்.
நாலு கரண்டி தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம், அட்சதை வைத்து அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாமாம்.
வெளியூருக்கு அதை எடுத்துக்கொண்டு போகலாமாம்; அங்கே புஷ்பம் கிடைக்கவில்லையே என அலையாமல் வில்வ இலையையும், துளசி தலத்தையும் காய வைத்து எடுத்துக் கொண்டு போனால், ஈஸ்வரனையும், விஷ்ணுவையும் அவற்றால் அர்ச்சிக்கலாமாம். மற்ற தெய்வங்களையும் அட்சதையால் அர்ச்சனை செய்யலாமாம்.
நைவேத்தியத்திற்கு காய்ந்த திராட்சைப் பழங்களைக் கொண்டு செல்லலாமாம்; எல்லாவற்றையும் ஒரு சின்னப் பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு போய் விடலாமாம்.
இந்தப் `பஞ்சாயதன’ பூஜைக்கு, பின்னால் புத்துயிர் கொடுத்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். அவர் இந்த ஐந்து தெய்வங்களோடு, முருகப் பெருமானையும் சேர்த்துப் பார்த்தார்.
நாமும், மேற்கண்ட ஆவாகனக் கற்களோடு ஒரு சிறு வேலையும் வைத்துக் கொள்ளலாம்.
கண் ஒன்றைப் பாராமல், காது ஒன்றைக் கேளாமல், மனம் ஒன்றை நாடாமல், வாய் ஒன்றைப் பேசாமல், கை ஒன்றைத் தேடாமல், சிந்தனை ஈஸ்வரன்; ஜெபிப்பது அவனையே; பூஜை தீபாராதனை கைகளால் என்றிருக்க வேண்டும்.
அறைக்கதவை நன்றாகச் சாத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம். இது ஒரு வகை ரிலாக்ஸேஷன்.
உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சுவாமிகளிடம் விட்டுவிடுங்கள். துன்பங்களை அவன் மீது இறக்கி வைத்து விடுங்கள்.
`மரணத்திற்கு எப்போதும் தயார்; அதுவரை அமைதியைக் கொடு’ என்று வேண்டுங்கள்.
`வடிவேலறிய வஞ்சகம் இல்லை’ என்று சத்தியம் செய்யுங்கள். உடம்புக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்துக்கு அமைதியையும் பிரார்த்தியுங்கள்.
`வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டும்’ என்று சொல்வார்கள். `குளித்து விட்டுத்தான் பூஜை செய்ய வேண்டும்’ என்பார்கள். எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.
துன்பம் நெருங்கும் போதெல்லாம் பூஜையில் உட்காருங்கள். சோதனை நேரும்போதெல்லாம் உட்காருங்கள். அடுத்தவர்மீது கோபம் வரும்போது உட்காருங்கள்.
சந்தோஷம் வரும்போது நன்றி செலுத்துவதற்காக உட்காருங்கள். நோயுற்ற போது நோய் தீரப் பிரார்த்தியுங்கள்.
புறத்தூய்மை வெறும் தண்ணீரால் அமைகிறது; அகத் தூய்மைதான் உங்கள் வாய்மையில் காணப்பட வேண்டும்.
பக்தித் தத்துவம் பயன் மிக்கது.
பாவிகளையும் துரோகிகளையும் விட்டு விலகி நிற்கப் பரமேஸ்வரனைச் சரணடையுங்கள்.
பிறப்பிற்கு முன்னால் அவனிடம் தான் இருந்தோம். இறப்புக்குப் பின்னால் அவனிடம் தான் போகப் போகிறோம்.
(ஒவ்வொரு கடவுளையும் வணங்கும் போது பாராயணம் செய்ய வேண்டிய பாடல்கள் இங்கே தனித்தனியாக இடம்பெற்றுள்ளது)
(தொடரும்)
***
சூரியனை வணங்குகிறவர்கள் கீழ்க்கண்ட எனது பாடலைப் பாடுங்கள்.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர்உயிர்கட் கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே! நலமே போற்றி! நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி! போற்றி!
***
ஈஸ்வரனை வணங்குகிறவர்கள் கீழ்க்கண்ட இராமலிங்க சுவாமிகளின் மகாதேவ மாலைப் பாடலைப் பாடுங்கள்.
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயி ராம்ஒளிதான் ஆகிக்
கலகநிலை அறியாத காட்சி யாகிக் கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ணதாகி
இலகுதிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
அலகில்அறி வானந்த மாகிச் சச்சி தானந்த மயமாகி அமர்ந்த தேவே!
உலகமெலாம் தனிநிறைந்த உண்மை யாகி யோகியர்தம் அனுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகமுறா உபசாந்த நிலைய தாகிக் களங்கமற்ற அருள்ஞானக் காட்சி யாகி
விலகலுறா நிபிட ஆனந்த மாகி மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர் இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே!
வித்தாகி முளையாகி விளைவ தாகி விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் குறைவாகி நிறைவாக்கிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே!
வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின் மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின் நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தங்கி நின்ற முதலாகி மனோதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்று மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே!
வாயாகி வாயிறந்த மவுன மாகி மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக் கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித் தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சக்தியெல்லாம் உடைய தாகி ஒன்றாகிப் பலவாகு ஓங்குந் தேவே!
அடியேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட அருட்கடலே!
மன்றோங்கும் அரசே! இந்நாள்
கொடியனேன் செய்பிழை திருவுள் ளத்தே கொண்டுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டே!
நெடியனே முதற்கடவுட் சமூகத் தோர்தம் நெடும்பிழைகள் ஆயிரம் பொறுத்த மாயை
ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல் எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே!
அன்பர்திரு உளங்கோயி லாகக் கொண்டே அற்புதசிற் சபையோங்கும் அரசே! இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய்! நின்னைத்துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர் துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ என்னளவெனச் செல்வேனிவ் வேழையே னே!
அருளுடைய பரம்பொருளே! மன்றி லாடும் ஆனந்தப் பெருவாழ்வே! அன்பு ளோர்தம்
தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட சிவமே!மெய் அறிவுருவாம் தெய்வமே! இம்
மருளுடைய மனப்போதை நாயினேன் செய் வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே!
***
வறுமையில் வாடுபவர்கள் அம்பாளை வணங்குங்கள். அம்பாளை வணங்குகிறவர்கள் கீழ்க்கண்ட இராமலிங்க சுவாமிகளின் பாடல்களைப் பாடுங்கள்.
கடலமுதே! செங்கரும்பே! யருட் கற்பகக் கனியே!
உடலுயிரே! யுயிர்க்குள் ளுணர்வே! யுணர் வுள்ளொளியே!
அடல்விடை யாரொற்றி யாரிடங் கொண்ட அருமருந்தே!
மடலவிழ் ஞான மலரே! வடிவுடைய மாணிக்கமே!
கண்ணே! யக் கண்ணின் கருமணி! மணியில் கலந்தொளிசெய்
விண்ணே! வியனொற்றி யூரண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே! மலைபெறும் பெண்மணியே! தெய்வப் பெண்ணமுதே!
மண்ணேய நீத்தவர் வாழ்வேமணி வடிவுடை மாணிக்கமே!
முப்போது மன்பர்கள் வாழ்த்தொற்றி யூரெம் முதல்வர் மகிழ்
ஒப்போ தருமலைப் பெண்ணமுதே! யென் றுவந்துநினை
எப்போதுஞ் சிந்தித்திடர் நீங்கிடு வார்தனக் கருள்வாயே!
மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே!
தாயே! மிகவும் தயவுடை யாளெனச் சாற்றுவரிச்
சேயேன் படுந்துயிர் நீக்கவென்னே உளஞ் செய்திலையே
நாயேன் பிழையினி நாடாது நல்லருள் நல்கவரு
வாயே! வெம்ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே!
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போற்றி, வைத்து, தேவே, மாகி, பூஜை, வேண்டும், இந்த, உட்காருங்கள், யாகி, மாணிக்கமே, ஐந்து, என்று, செய்து, தாகி, கிடைக்கிறது, கொண்ட, வடிவுடை, செய்ய, நேரம், வைத்துக், கொண்டு, வணங்குகிறவர்கள், கீழ்க்கண்ட, பாடுங்கள் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்