முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மன்னரும் துறவியானார்-பட்டினத்தார் வரலாறு
அர்த்தமுள்ள இந்துமதம் - மன்னரும் துறவியானார்-பட்டினத்தார் வரலாறு
`கட்டிய ஆடையுடனேயே உங்களோடு புறப்படுகிறேன் சுவாமி!’ என்றார்.
`தென்நாட்டுத் திருத்தலங்களை ஒருவன் தரிசிக்க ஆரம்பித்தால், பிறகு அவனுக்கு எந்த ஆசையும் வராது, புறப்படு!’ என்றேன்.
வாரிசு இல்லாத நாட்டை, காவலர்கள் கையில் ஒப்படைத்தார். இருவரும் வாசல் வரை வந்தோம்.
எதிரே குதிரையில் பட்டத்து ராணியின் சடலம் வந்தது.
ஏற்கெனவே அவளது ஆணவத்தால் ஆத்திரமுற்றிருந்த ஜனங்கள், துரோகமும் செய்தாள் என்பதால் கல்லால் அடித்துக் கொன்று விட்டார்கள்.
பத்ரகிரி குதிரை அருகே வந்தபோது, அந்தச் சடலம் அவர் காலடியில் விழுந்தது. அதிலிருந்து விலகி என்னைத் தொடர்ந்தார்.
அரண்மனை வெளிப்புற வாசலில் நின்று முதன் முதலாகப் பிச்சை கேட்டார்; பிறகு வீதி தோறும் பிச்சை.
இதிலே அதிசயம் என்னவென்றால் வடமொழி, தென் மொழி இரண்டிலேயுமே அவர் கைதேர்ந்தவராக இருந்ததுதான்.
உஜ்ஜைனியைச் சேர்ந்த ஒரு மன்னர். சிருங்காரக் களியாட்டங்களில் ஈடுபட்ட நிலையிலும் தமிழ் மொழியைப் பழுதறக் கற்றிருந்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
சோழ மண்டலத்திலிருந்து குடியேறிய தமிழ்ப்பெரும் புலவர் ஒருவரிடத்தில் தமிழ் கற்றிருந்தார் பத்ரகிரியார்.
கல்லாதவன் கற்க விரும்பினால், அவன் முதலில் கற்பது தமிழைத்தானே!
தமிழிலும் இனிமையான மொழியை உலகம் இன்னும் காணவில்லையே!
ஒவ்வொரு வீட்டின் முன் நின்றும், `அன்னமிடுங்கள் தாயே!’ என்று அவர் கேட்ட தொனியே எனக்குச் சுகமாக இருந்தது.
தனது மன்னனை கண்ணீரோடு அனுப்பியது உஜ்ஜைனி.
வந்து கொண்டே இருந்தோம். வழியில் ஒரு சிறிய காளி கோயில். இரவில் அங்கே தங்கலாம் என்று உள்ளே நுழைந்தோம்.
`திருவமுது தயாராக இருக்கிறது!’ என்றான் பரிசாரகன்.
உணவு கொண்டோம். காளியின் சந்நிதானத்தில் தலை வைத்துத் துயிலத் தொடங்கினோம்.
நள்ளிரவு. ஒரு நாயின் முனகல் கேட்டது. மெதுவாக நான் எழுந்து பார்த்தேன். கோயிலின் கிழக்கு மூலையில் ஒரு நாய் குட்டி போட்டிருந்தது.
`நாய் பல குட்டி போடும்’ என்பார்கள். ஆனால், அந்த நாயோ ஒரு குட்டி போட்டிருந்தது. அதுவும் பெண் குட்டி.
அந்தக் குட்டியை நான் கையிலெடுத்ததும், நாய் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு இறந்து விட்டது.
எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்த நாய்க்குட்டி வேறு யாருமல்ல; பத்ரகிரியாரது பட்டத்து ராணியின் மறுபிறவி.
தீயவர்களை ஆண்டவன் உடனேயே திருப்பி அனுப்புகிறான், பாவ விமோசனத்துக்காக.
`சுவாமி, இதை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறது?’ என்றார் அவர்.
அது மறுபிறப்பு என்பதற்கு வேறு சாட்சி எதற்கு?
காலையில் அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.
பத்ரகிரியார், எனது பரமானந்த சீடராகப் பின் தொடர்ந்தார்.
உஜ்ஜைனி காளி கோயிலில் எனது திருவோட்டைத் தட்டிவிட்ட பிறகு, நான் புது ஓடு வாங்கவில்லை.
`விமலர் தந்த ஓடுண்டு அட்சய பாத்திரம்’ என்று நான் பாடியது, என்னுடைய இரண்டு கைகளையே.
ஓடு வாங்காத நான், எங்கேயும் கற்றரையைத் துடைத்து அதிலேயே சாப்பிட்டு வந்தேன்.
ஓரிடத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, என்னிடம் வந்து பிச்சை கேட்டான் ஒரு பஞ்சப் பரதேசி. நான் சொன்னேன், `அப்பா நான் ஒரு ஆண்டி! அதோ உட்கார்ந்திருக்கிறான் ஒரு பணக்காரன்! அவனைக் கேள்!’ என்று.
உடனே பத்ரகிரியார் ஓடிவந்து, `என்ன சுவாமி, என்னைப் பணக்காரன் என்கிறீர்கள்!’ என்றார்.
`பின் என்னப்பா? என்னிடம் என்ன இருக்கிறது? உனக்குச் சொந்தமாக ஒரு ஓடும் நாயும் இருக்கின்றனவே!’
பத்ரகிரியார் ஓட்டைத் தூக்கி ஏறிந்து நாயைத் துரத்தினார். ஓடு பட்டு அந்த நாய் இறந்தது; அதன் பாவக் கதையும் முடிந்தது.
பிறகு இருவரும் வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு கரும்புக் காட்டருகில் அமர்ந்தோம்.
பசி அதிகம். இரண்டு கரும்புகளை எங்களுக்குக் கொடுத்தார் ஒரு நாட்டுப்புறத்தவர்.
கரும்பைக் கடித்த போது, அடிக்கரும்பு இனித்தது. நுனிக் கரும்பு கசந்தது.
`ஏன் இப்படி?’ என்று தெரியாதவன் போல் கேட்டேன், அந்த நாட்டுப்புறத்தவரை.
`வாழ்க்கையில் தொடக்கம் இனிமை, முடிவில் அவலம்!’ என்றார் அவர்.
சொல்லிவிட்டுப் போயே போய்விட்டார் அவர்.
சிவபெருமானே அப்படி வந்ததாகத்தான் கருதி, நான் இந்தக் கரும்பைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.
அந்தத் தத்துவத்தைக் குறிக்கவே, நான் இந்தக் கரும்பைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.
இருவினை அகன்று எய்திய ஞானம், இறைவனை எங்களுக்குக் காட்டித் தந்திருக்கிறது.
செல்வம் செல்வம் என்று பேயாக அலைந்த என் தமக்கையும் அவள் கணவனும் எனக்கிழைத்த தீமைகளால் பெரு நோய்ப்பட்டு மாண்டனர். அவளது குழந்தைகள், திருக்காளத்தியில் நான் இருந்த போது என்னிடம் வந்து ஆசி பெற்றுப் போயினர்.
இது எங்களுக்கு ஞானம் பிறந்த கதை.
சம்சாரத்தில் உழன்று, அந்த ஞானத்தை அடைய முயற்சியுங்கள்.
எல்லாம் வல்லவன் இறைவன்.
பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பின்பும் பொறுப்பேற்றுக் கொள்கிறவன் அவனே.
தாயின் வயிறும், சுடுகாடுமே அவனது அரசாங்கங்கள். அதனால்தான் சுடுகாட்டில் அவன் ருத்திர தாண்டவம் ஆடுகிறான்.
`ஓம் நமசிவாய’ என்று உரத்த குரலில் கூறுங்கள்.
மூன்று விரல்களும் நன்றாகப் பதியும்படி திருநீறுபூசுங்கள்.
அந்த மூன்று கோடுகளும் பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட வாழ்வு மூன்றையும் குறிக்கும்.
`ஓம் நமசிவாய’ என்று முடித்தார், பட்டினத்தார்.
திருக்காளத்தி அவரையும் பத்ரகிரியாரையும் பிரியாவிடை கொடுத்து அனுப்பியது.
(பட்டினத்தார், பத்ரகிரியார் பாடல்களில் நான் விரும்பும் பாடல்களை மட்டும் தந்திருக்கிறேன். இதில் பாட பேதமோ, இலக்கணப் பிழையோ இருக்குமானால் நான் படித்த பதிப்புகளின் குற்றமே தவிர, என் குற்றமல்ல.)
பட்டினத்தார் புலம்பல்
மென்று விழுங்கி விடாய்கழிக்க நீர்தேடல்
என்று விடியும் எனக்கு எங்கோவேநன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் சென்ற
மருதாஉன் சந்நிதிக்கே வந்து.
கண்டம் கரியதாம்; கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம்தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.
ஓடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன்கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி.
வாவிஎல்லாம் தீர்த்தம்; மணல்எல்லாம் வெண்நீறு
காவனங்கள் எல்லாம் கணநாதர்;பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்.
ஆரூரர் இங்கிருந்த அவ்வூர்த் திருநாளென்று
ஊரூர்கள் தோறும் உழலுவீர்! நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவீர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.
எருவாய்க்கு இருவிரல்மேல் ஏர்உண்டு இருக்கும்
கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய்! திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ!
எத்தனைஊர் எத்தனைவீடு எத்தனைதாய்? பெற்றவர்கள்
எத்தனைபேர் இட்டழைக்க ஏன்என்றேன்நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா; கம்பா
உனக்குத் திருவிளையாட் டோ?
அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்
சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகாமெத்தப்
பசிக்குதையா! பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குதையா காரோண ரே!
பொய்யை ஒழியாய்; புலாலை விடாய்; காளத்தி
ஐயரை எண்ணாய்; அறம்செய்யாய்;வெய்ய
சினமே ஓழியாய்; திருவெழுத்தைந்து ஓதாய்;
மனமே உனக்கென்ன மாண்பு?
மண்ணும் தணல்ஆற வானும் புகைஆற
எண்ணறிய தாயும் இளைப்பாறப்பண்ணுமயன்
கையாறவும் அடியேன் காலாறவும் காண்பார்
ஐயா! திருவை யாறா!
காலன் வருமுன்னே கண்பஞ் சடையுமுன்னே
பாலுண் கடைவாய்ப் படுமுன்னேமேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு!
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமேநித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்!
தோடவிழும் பூங்கோதைத் தோகைஉனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிருநாடிநீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன்நான்
உன்னை நினைத்தால் உதை!
வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே!ஆசைதனைப்
பட்டிறந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.
நச்சவரம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான்அங் கிருப்பதுவும்பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலில்
தூங்குவதும் தானே சுகம்.
இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே! என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.
விட்டுவிடப் போகுதுயிர்! விட்டஉடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்அட்டியின்றி
எந்நேர மும்சிவனை ஏற்றுங்கள்; போற்றுங்கள்;
சொன்னேன் அதுவே சுகம்.
ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே!மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.
வெட்ட வெளியாய் வெளிக்கும் தெரியாது!
கட்டளையும் கைப்பணமும் காணாது!இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது; பாவியே நெஞ்சில்
அவன் இற்றெனவே வைத்த இனிப்பு.
இப்பிறப்பை நம்பி இருப்பாயோ நெஞ்சமே!
வைப்பிருக்க வாயில்மனை இருக்கச்சொப்பனம்போல
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், என்று, அந்த, அவர், வந்து, பத்ரகிரியார், பிறகு, என்றார், குட்டி, பட்டினத்தார், போது, என்னிடம், நாய், பிச்சை, அவன் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்