முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » துறவியானார் பட்டினத்தார்
அர்த்தமுள்ள இந்துமதம் - துறவியானார் பட்டினத்தார்
சிவகலையிடம் சொன்னேன்.
அழுதாள்; கதறினாள்.
அவளே சிவகலை; துறவுக் கலையில் வீட்டில் இருக்க முடிவு கட்டினாள்; என் பாதங்களிலே விழுந்து வணங்கினாள்.
என் மூதாதையர்களில் ஒருவர் துறவியாகப் போனவர். அவர் எங்கள் வீட்டில் விட்டுப் போன காஷாயம் ஒன்றை வைத்து, அவர் நினைவாகப் படைப்பு நடத்தி வருகிறோம்.
அதே காஷாயத்தை சிவகலையின் கையிலிருந்து நான் பெற்றுக் கொண்டேன்.
பெற்றது மனைவியிடம்; அணிவது தாயின் முன்பு என்று கருதித் தாய் தனியாக இருந்த எங்கள் பெரிய மாளிகையை நோக்கி நடந்தேன்.
முதலில் நான் துறந்தது என் மனைவியை; இரண்டாவது நான் துறந்தது என் ரத்தத்தை.
பட்டினத்துச் செட்டி நடந்து போவதைப் பட்டினமே வேடிக்கை பார்த்துத் திகைத்தது.
தாயிடம் சென்றேன். என் ஞானத்தைச் சொன்னேன்.
அவர்கள் அழவில்லை; `எதிர்பார்த்தேன்’ என்றார்கள்.
அறிவிலே குரு பேசுகிறான். அனுபவத்தில் இறைவன் பேசுகிறான்.
“நான் காஷாயம் அணியப் போகிறேன்; ஆசீர்வதியுங்கள்!” என்றேன்.
“அதை என் கண் முன்னாலேயே பிரித்துப் பார் மகனே!” என்றார்கள்.
பிரித்தேன்! முழுக் காஷாயமாக இல்லை. ஆறு கோவணமாக இருந்தது.
“மகனே, இது என் மாமனார் சொத்து, `முற்றும் துறந்தவனுக்கு முழு ஆடை ஆகாது’ என்று அவர் சொல்லுவார்; அதனால் தான் உன்னைப் பிரித்துப் பார்க்கச் சொன்னேன்” என்றார்கள்.
எனக்கு இரண்டாவது ஞானம் பிறந்தது.
முழு ஆடையே ஒரு சொத்தல்லவா? சுமையல்லவா?
நான் தனியறையில் சென்று ஆடைகளைக் களைந்து; கெளபீனதாரியாகத் தாயின் முன் வந்து நின்றேன்.
“மகனே! உடல் சுமை இறங்கி விட்டது; மனச்சுமை இறங்கி விட்டதா?” என்று கேட்டார்கள்.
என்ன இது அதிசயம்? லெளகீகத்தைத் தவிர ஒன்றுமே தெரியாத என் தாயாரா இப்படிப் பேசுகிறார்கள்?
“மனம் ஒரு நாய்; அது கூடவே வரும்” என்று மேலும் உரைத்தார்கள்.
நான் கண்ணீரோடு, “போய் வரட்டுமா ஆத்தா?” என்றேன்.
“துறவி எங்காவது போய் வருவானா?” என்றார்கள்.
எனக்கு மூன்றாவது ஞானம் பிறந்தது.
நான் அதிர்ந்த நிலையில். “ஆத்தா! நான் போகிறேன்!” என்றேன்.
“சுயதர்மத்தை முடிக்காதவன் எங்காவது போய் விடுவது உண்டா?” என்றார்கள்.
“இன்னும் எனக்கென்ன சுயதர்மம்?” என்றேன்.
“தாய் தந்தை, ஒரு பிள்ளையிடம் கடைசியாக எதிர்ப் பார்ப்பது, கொள்ளி வைப்பதைத்தானே மகனே,” என்றார்கள்.
“அப்படி என்றால் `போய் வருகிறேன்’ என்று சொல்வது தானே ஆத்தா சரி!” என்றேன்.
“இல்லை `வருகிறேன்’ என்று மட்டும் சொல்ல வேண்டும். மகன் போகிறான் என்ற உணர்வு தாய்க்கு ஏற்படக் கூடாது. எப்போது வருவான் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்; போய் வருகிறேன் என்றால் அது மனித வார்த்தை. `வருகிறேன்’ என்றால், அது நினைத்தால் வருவேன் என்கிற ஈஸ்வரலயம். ஒரு துறவிக்கு அந்த லயம் தானே வேண்டும்?” என்றார்கள்.
எனக்கு நான்காவது ஞானம் பிறந்தது.
அவர்கள் காலில் விழுந்து வணங்கினேன்.
நான் புறப்படும்போது ஒரு சிறு சேலைத் துணியில் எதையோ முடிந்து என் இடுப்பிலே கட்டி விட்டார்கள். அது என்னவென்று எனக்கு அப்போது தெரியவில்லை.
“இந்த முடிச்சு அவிழ்ந்து விழுந்தால், நான் மரணமடையப் போகிறேன் என்று அர்த்தம். எங்கிருந்தாலும் வந்துவிடு!” என்றார்கள்.
ஈஸ்வரன் அவர்களோடு என்ன பேசினானோ அவனுக்கே வெளிச்சம்!
நான் திரும்பினேன்.
“மகனே! உன் ஐயாவுக்கு (தாத்தாவுக்கு) ஞான தீட்சை அளித்த குருவுக்கு இப்போது நூற்றிப் பத்து வயதாகிறது. மாயூரம் சாலையில் சிவானந்த மடத்தில் இருக்கிறார். அவரிடம் தீட்சை பெற்றுக்கொள்!” என்றார்கள்.
நான் பாதி வெந்த சோறாக மாயூரம் சாலையை நோக்கிப் புறப்பட்டேன்.
சிவானந்த மடம் எங்கள் சமூகத்தினராலேயே கட்டப்பட்டது. அதை `ஓயா மடம்’ என்றும் கூறுவார்கள். ஞானிகள் தங்குவதற்காக மட்டுமின்றி, வழிப்போக்கர்களுக்கு அன்னமிடுவதற்காகவும் அது ஏற்படுத்தப்பட்டது. என் தந்தை, அதற்கு ஏராளமான பொருளுதவி புரிந்துள்ளார். நான் அதன் உள்ளே நுழைந்து பார்த்ததில்லை.
முதன் முதலாக அதற்குள்ளே நுழைந்ததும், உள்ளே இருந்து வெளிவந்த சாதாரணப் பரதேசியிடம் கூட எனக்கு மரியாதை ஏற்பட்டது.
வாசனைப் புகை கமழ்ந்தது. இளநீர், முல்லைப்பூக்களின் வாசனை வந்தது. மங்கலமான ஓர் எண்ணம் அதில் வேரோடியது.
புனித மண்டபத்திற்குள் இந்த பூத உடல் நுழைந்தது.
சமணர்களும், பிறரும் கூட காலில் விழுந்து வணங்கக் கூடிய துறவியாக, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சிவானந்த யோகி.
நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன். அவர் கண்ணைத் திறந்து பார்த்தார்.
நான் விவரங்களைச் சொல்லவே இல்லை; அவரே சொன்னார்.
“தண்ணீரில் குளிப்பவனுக்கு நெருப்புச் சுடும்; நெருப்பிலே குளிப்பவனுக்கு தண்ணீர் சுடும்; இரண்டுக்கும் நடுவிலே உட்கார்ந்திருப்பவனுக்கு இரண்டுமே சுடும். போகி நீரிலே குளிக்கிறான்; யோகி நெருப்பிலே குளிக்கிறான். ரோகி நடுவிலே நிற்கிறான்; நீ போகத்துக்குத் திரும்ப நினைத்தால் முடியாது; ரோகத்திலேதான் விழ வேண்டி இருக்கும்”, அவர் பேசி முடித்தார்.
என்னை ஆசீர்வதித்தார். இடது காதிலே ஒரு மந்திரத்தைச் சொன்னார். அது சைவ மந்திரம். அவர் அதைச் சொல்லும் போது, வலது காதிலே ஒரு வைணவ மந்திரம் கேட்டது. `பிரம்மம் ஒன்றே’ என்பதை அது உணர்த்திற்று.
அந்த லயத்திலேயே நான் புறப்பட்டேன்.
மடத்தின் வாசலில் திருவோடு இல்லாதவர்களுக்கு அழகான திருவோடுகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு வகை தர்மம்.
அந்தத் திருவோட்டை கையில் வாங்கிக் கொண்டு, ஊரே என்னை வேடிக்கை பார்க்கும் நிலையில், நேரே என் தாயாரின் இல்லத்துக்கு வந்தேன். முதல் பிச்சையைத் தாயின் கையிலே தான் வாங்க வேண்டும்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், என்றார்கள், என்று, அவர், மகனே, எனக்கு, என்றேன், விழுந்து, வேண்டும், போய், என்றால், காலில், சுடும், சிவானந்த, ஆத்தா, இல்லை, எங்கள், தாயின், போகிறேன், ஞானம், பிறந்தது - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்