முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » பட்டினத்தாரின் இளமைக்காலம்
அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தாரின் இளமைக்காலம்
திரை கடலோடித் திரவியம் தேடும் மூன்றாம் வருணத்தவரான வணிகர்கள் மரபில் நான் ஒருவன்.
பூம்புகார்ச் சோழர்களும் சரி, பிற சோழர்களும் சரி, தாங்கள் முடிசூட்டிக் கொள்ளும் போது வணிகர்களிலேயே மிகப் பெரிய தனவந்தராக இருப்பவர் தான் அந்த மகுடத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும். ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக நாங்களே மகுடங்களை எடுத்துத் தந்திருக்கிறோம் என்பதிலிருந்து எத்தனை தலைமுறைகளாக எங்கள் குடும்பம், செல்வம் நிறைந்ததென்று நீங்கள் கண்டு கொள்ளலாம்.
என் தந்தை பெயர் சிவநேசன் செட்டியார். தாய் ஞானகலை ஆச்சி.
நான் பிறந்ததும் என் கழுத்திலும் கை கால்களிலும் ஆடிய தங்க நகைகளைப் போலவே, நான் படுத்திருந்த தொட்டிலுக்கும் நவமணிகள் பூட்டப்பட்டன.
எனது ஆட்காட்டி விரலினால் எனது குரு மண்ணில் என்னை `ஹரி ஓம்’ என்று எழுத வைத்த போது, இறைவன் தத்துவத்தையே நாம் ஒருநாள் அறிவோம் என்று எண்ணியதில்லை.
கிண்கிணிச் சதங்கையோடு துள்ளி விளையாடிய இளம் குழந்தை பாடம் படித்தது, திங்களில் பத்து நாள்; ஆடி மகிழ்ந்தது மீதி இருபது நாள்.
காவிரிக் கரையில் சிறுவர்களோடு ஆடுவேன்; குதிரைக் குட்டிகளில் ஏறி எருமைகளைத் துரத்துவேன். `குதிரை போகும் வேகம் எருமை போகவில்லையே ஏன்?’ என்று யோசிப்பேன்.
கூற்றுவன் தன் கடமையைக் குறைவாகச் செய்யவே எருமையை அவனுக்கு வாகனமாகக் கொடுத்தார்கள் என்பது இப்போது புரிகிறது.
`பிள்ளை படிக்கவில்லையே’ என்று பிறப்புக்குக் காரணமான தந்தை வருந்தினார்.
`படிக்காவிட்டால் என்ன, பத்துத் தலைமுறைக்குச் சொத்திருக்கிறதே’ என்று பத்துமாதம் சுமந்த மாதா தேற்றினாள்.
இவை அத்தனையும் நடந்தது ஆறு வயது வரையிலே தான்.
எனது ஆறாவது வயதில் ஈன்ற தந்தை சான்றோனை அடைந்தார்.
காவிரிப்பூம்பட்டினமே எங்கள் மாளிகை முன்னால் கூடி என் தந்தையின் சடலத்தைச் சுமந்து சென்று எரியூட்டிற்று.
புகார் நகரத்தில் எங்களுக்கு இருந்த வாணிபக் கடைகள் இருபது. யவனர்களோடு வாணிபம் செய்வதற்காகவும், யவனர்கள் தெருவில் நான்கு கடைகள் இருந்தன. விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் அவற்றிலேதான் இருந்தன.
தந்தை காலமானதும் செல்வச் சுமையும், வாணிபப் பொறுப்பும் என் தாயின் தலையிலே விழுந்தன.
`இல்லங் காக்கும் நாயகிக்கு செல்வமும் காக்கத் தெரியுமே அன்றி, வாணிபம் செய்யத் தெரியாதே’ என்று, என் அம்மான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தாயின் உடன் பிறந்த மூவருள் இளையவர் அவர்.
பொருளில் மிகுந்தவர். அவரது பெயர் சிவசிதம்பரம் செட்டியார். அவரது மனைவி பெயர் சிவகாமி ஆச்சி.
ஒன்றைக் கூற மறந்தேன். எனக்கொரு தமக்கை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தத் தமக்கையின் பெயர் தில்லையம்மை.
எனது அம்மான் சிவசிதம்பரம் செட்டியாருக்கு ஒரே ஒரு பெண் மகவு. அவள் பெயர் சிவகலை.
செல்வக்கலை கூடிய குடும்பத்தில் எல்லாமே கலைகளாக இருப்பதில் வியப்பில்லை. எனக்கு மட்டும் எங்கள் பெற்றோர், சுவேதாரண்யன் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தார்கள்.
உங்களில் பலர் அறிந்த விஷயங்கள்தான் இவை. ஆயினும் மாதரார்க்குப் புரியும் வண்ணம் பெயர்களை விளம்பினேன்.
பத்தாண்டுச் சிறுவனாக நான் வளர்ந்த போது எனது கவனம், மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளிலேயும் திரும்பிற்று.
அவ்வளவு சின்ன வயதிலா என்று நீங்கள் ஐயப்படுவீர்கள். அது தெளிவானதோர் ஞானமன்று. இன்ப உணர்வுகள் நிறைந்த புதுமையான அறிவு.
அப்போது கடலோடிக் கொண்டிருந்த எங்கள் கப்பல்கள் பன்னிரண்டு, அதில் ஒன்று என் தந்தை கடல் கடந்து செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதில் துடுப்பு வலிப்போர் மட்டும் இருபது பேர். அவர்கள் தங்குவதற்கும், இடம் உண்டு. என் தந்தைக்காக அலங்கரிக்கப்பட்ட தனி அறை உண்டு. உள்ளே அமர்ந்தால் இல்லத்தில் அமர்வது போலவே இருக்கும். அந்தக் கப்பலில் பயணம் செய்து பார்க்க நான் அவாவினேன்.
வாணிபத்துக்காக நாங்கள் அடிக்கடி போகும் இடங்களில் ஒன்று பன்னீராயிரம் தீவு.
நான், என்னுடன் ஒத்த செல்வச் சிறுவர்கள் இருவர்- பெயர்கள் மாணிக்கம், வைரம்- அவர்களும், என் தாயின் அனுமதி பெற்று அந்தக் கப்பலில் பயணம் செய்தோம்.
கப்பல் தளத்தில் நின்று வானையும் கடலையும் நோக்கிய போது, அந்தப் பிரம்மாண்ட சிருஷ்டி என்னை வியக்க வைத்தது.
புவி வாழ்க்கையில் மிகப் பெரியவனாகக் காட்சியளிக்கின்ற மனிதன் கூட, கடலுக்குள்ளே விழுந்து விட்டால் அவன்மீனுக்குச் சிறியவனாகி விடுகிறான். சம்சாரக் கடலும் அப்படித்தான்.
இதை நான் அன்று உணரவில்லை.
பழந்தீவுகளில் நான் போய் இறங்கியபோது, அந்த நாட்டு மக்களைப் பார்ப்பதற்கு எனக்குப் பரிதாபமாக இருந்தது.
நாகரிகத்தில் முன்னேறிய சோழ நாடு எங்கே? உலகம் தோன்றியபோது எப்படி இருந்தார்களோ அப்படியே இன்னும் இருக்கும் இந்தத் தீவு மக்கள் எங்கே?
எங்கள் கப்பலைக் கண்டதும், எங்களோடு வாணிபம் செய்யும் தீவு வணிகர்கள், கடல் துறையில் கூடி விட்டார்கள்.
`செட்டியார் மகன்’ என்று என்னை அவர்கள் அழைத்துக் கொண்டு போய் நடத்திய இராஜோபசாரம் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை.
அடுத்த வீடு சென்றாலும் மரியாதை; அடுத்த நாடு சென்றாலும் மரியாதை; பிறப்பில் இருந்தே வறுமையை அறியாத சுகபோகத்தோடு, பத்து வயதிலேயே பிறரது மரியாதை; அது எங்களிடம் குவிந்து கிடந்த பொருளுக்குத் தான் தரப்பட்ட தென்றாலும், என்னை ஒரு ஆணவக்காரனாக ஆக்குவதற்கு அதுவே போதுமானதாக இருந்தது.
எனது பதினாறாவது வயதில் கடைகளை நானே கவனிக்க ஆரம்பித்தேன்.
குதிரைக் குட்டிக்கு ஓடக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? வணிகனுக்குக் கணக்கு வராமற் போனால், அதுதானே பூர்வ ஜென்ம பாவம்.
குறையாகவே படித்த எனக்கு, கூட்டத் தெரியும்; பெருக்கத் தெரியும்; கழிக்கத் தெரியும்; வகுக்கத் தெரியும். எங்கள் சமூகத்தில் ஒருவன் இந்த நாலும் தெரிந்தவனாக இருந்தால், அவனால் கடையை நடந்த முடியும்.
இந்தப் பருவம்தான் என் வாழ்வில் அதிசயமான பருவம்.
அழகிய ரதத்தில் என் வீட்டிலிருந்து நான் கடைக்குப் போகும் போதெல்லாம், இத்தனை நாழிகைக்கு நான் வருவேன் என்று எத்தனை பெண்கள் வாசலிலேயே நிற்பார்கள்!
தேவனுக்காகக் காத்துக் கொண்டு நிற்கும் தேவதைகள் போல, அவர்கள் எனக்காகக் காத்துக் கொண்டு நிற்பார்கள்.
சாளரத்துத் திரைச் சீலையை விலக்கிக் கொண்டு நாணம் மிகுந்த பதுமைகள் சிலவும், என்னைப் பார்ப்பதுண்டு.
ஐந்து வயதிலேயே மணம் முடித்துவிடும் எங்கள் குலத்தில் நான் ஒருவன்தான் பதினாறு வயது வரையிலே மணம் முடிக்கப்படாதவனாக இருந்தேன்.
எனக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்றே பல பெண்களும் தங்கள் பெற்றோரால் வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், என்று, எங்கள், எனது, தந்தை, பெயர், கொண்டு, போது, தெரியும், என்னை, அவர்கள், தீவு, மரியாதை, எனக்கு, இருபது, நீங்கள், தான், போகும், வாணிபம், தாயின், உண்டு - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்