முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » பிரார்த்தனை கீதம்
அர்த்தமுள்ள இந்துமதம் - பிரார்த்தனை கீதம்
பகவான் கீதையில் ஒரு இடத்தில் சொல்கிறான், `கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்’ என்று.
தனிமையில் இனிமையைத்தான் அவன் அப்படிக் கூறுகின்றான்.
`தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றான் பாரதி.
பரபரப்பான நகர, நாகரிகத்தில் தனிமை எங்கே நமக்குக் கிடைக்கிறது?
கிராமத்து நண்பர்கள் மேல் எனக்கொரு பொறாமை உண்டு.
ஒவ்வொரு கிராமத்தைப் பார்க்கும் போதும், `நமது வாழ்க்கை இங்கேயே அமைந்திருக்கக் கூடாதா?’ என்றே நான் ஏங்குகிறேன்.
ஆயிரம் விலங்குகளுக்கு காலையும், கையையும் கொடுத்து விட்ட நிலையில், இந்த ஏக்கம் எப்போது தீரப் போகிறது?
குளுகுளுவென்று காற்றடிக்கும் ஆற்றங்கரையையும், கரையில் இருக்கும் மரங்களையும், பச்சைப் புல்வெளியையும், பறந்து செல்லும் பட்சி ஜாலங்களையும், துள்ளியோடும் கன்றுக் குட்டிகளையும், தொடர்ந்து செல்லும் பசுக்களையும், ஆயர் மகளிரின் வளைகுலுங்கும் கைகளையும், களை எடுப்போரின் கலகலப்பையும், வைக்கோற் கட்டைத் தலையில் சுமந்து வரப்பிலே போகும் விவசாயிகளையும், அழகான கிராமத்துக் கோயில் களையும் பார்க்கப் பார்க்க மனது என்ன பரவசப்படுகிறது!
எனது துன்பங்கள் அதிலே மறைகின்றன.
`மலை வாசம் போனால் என் மனதில் இருக்கும் சுமைகளெல்லாம் இறங்கி விடுகின்றன’ என்றார் ஜவஹர்லால் ஒரு முறை.
கிராமம், நகரத்திலே இருப்பவனுக்குச் சுமை தீர்க்கும் பூமியாகிறது. ஆனால் கிராமத்திலே இருப்பவனின் நிலை என்ன?
அங்கேயே உழன்று கொண்டிருப்பவனுக்கு இந்த அற்புதக் காட்சிகளும் துன்பங்கள் தானே?
துன்பத்தை மனத்திலேயே வைத்திருப்பவன், எங்கே போனாலும் துன்பம்தான்.
இறக்கி வைக்கத் தெரிந்தவன், எங்கே இருந்தாலும் இறக்கி வைத்துவிட முடியும்.
ஆனால், இறக்கி வைக்கும் இடமும் சுகமாக அமைந்து விட்டால், அது தானாகவே உன் மனதிலிருந்து இறங்கிவிடும்.
தனிமையில் உட்கார்ந்து கொண்டு, `அது என்ன ஆகுமோ, இது என்ன ஆகுமோ?’ என்று அழுகின்றவன், எங்கே உட்கார்ந்து அழுதால்
என்ன?ஆனால், இயற்கையாகவே துன்பங்களை அகற்றத் தெரிந்தவன் குளிர்ந்த சூழ்நிலையில் அவற்றை அடக்கிவிட முடியும். தனிமை – அதிலும் பலவந்தமான தனிமை – மனைவி மக்களைப் பிரித்துக் கொண்டுபோய்ச் சிறையிட்ட தனிமை – அந்தத் தனிமையிலேதான் காந்திஜியின் சிந்தனைகள் வளர்ந்தன; நேருஜி உலக வரலாறு எழுதினார்; வினோபாஜி கீதையை முழுக்க ஆராய்ந்து தெரிவித்தார். நானும் கூட இருபத்தாறு வயதில் ஒரு காவியம் எழுதி விட்டேன்.
ஞானிகள் தனிமையில் தோன்றிய தத்துவங்களே, இந்து மதத்தின் சாரம்.
பரமார்த்திக ஞானத்தைத் தெளிவாக விளக்குவதற்கு பரமஹம்ஸரின் தனிமை பயன்பட்டது.
ஆல்வாய் நதிக் கரையில் ஆதிசங்கரர் மேற்கொண்ட தனிமையே, அத்வைத சிந்தாந்தத்திற்கு ஆணி வேர்.
தனிமையாக உட்கார்ந்து சுகமாகச் சிந்தித்தால் அகக்கவலை, புறக்கவலை இருக்காது.
எங்கே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப்பார்.
கற்பனை புறாவைப் பறக்க விடு.
அழகான பெண் ஒருத்தியைக் காதலிப்பது போலவும், அடுக்கடுக்காகப் புகழ் மாலைகள் குவிவது போலவும், ஊரெல்லாம் உன்னைத் தேடுவது போலவும் கற்பனையை வளர்த்துக் கொள்.
அப்படியே வீடு திரும்பு; சாப்பிட்டு விட்டுத் தூங்கு. இனிமையான கனவுகள் வரும்.
சுமைகளையும், தொல்லைகளையும் பற்றிப் பயந்துக் கொண்டே படுத்தால் தூக்கம் பிடிக்காது. திடீர் திடீரென்று விழிப்பு வரும். கெட்ட கனவுகள் வரும்; அப்போது யாராவது மெதுவாகக் கூப்பிட்டால் கூடச் செவிட்டில் அடிப்பது போலிருக்கும்.
பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடுகின்றன. தைரியத்தினால் தான் அவை கனமடைகின்றன.
தைரியத்தை வளர்ப்பதற்குத் தனிமையைப் போல சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை.
அதிலும் பசுமை நிறைந்த காடுகளில் நடந்து சென்றால் ஒரு உற்சாகமும், தைரியமும் வரும்.
அதனால் தான் ஞானிகள் தங்கள் வாழ்க்கைக்குக் காடுகளை தேர்ந்தெடுத்தார்கள்.
கட்டுப்பாடற்ற சிட்டுக் குருவிகள்; மரமேறித் தாவும் குரங்குகள்; துள்ளித் திரியும் மான் குட்டிகள்- இவற்றைக் காணும் போது உள்ளம் எவ்வளவு உற்சாகமடைகிறது!
பரபரப்பான வாழ்க்கையில் இந்த நிம்மதி ஏது?
காடுகளில் திரியும் கொடிய திருடர்களிடம் கூடக் கருணையும், அன்பும் இருக்கும்.
காரணம், அது காடு வளர்த்த மனோதத்துவம்.
தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவன் கூடக் காட்டுக்குப் போனால் அந்த எண்ணத்தை விட்டு விடுகிறான்.
ஜீவாத்மா, மகாத்மா ஆவது தனிமையிலே.
அண்மையில் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழுகின்ற மிருகங்கள் பற்றி, நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.
அதற்கு `யானை ராஜா’ என்று பெயரிட்டு, நானே பின்னணி உரை எழுதி, முன் பகுதியையும் பின் பகுதியையும் நானே பேசி இருக்கிறேன்.
அது வெறும் படம்தான். ஆனால், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தொண்ணூறு நிமிஷங்களும் ஆப்பிரிக்கக் காட்டிலே உலாவுவது போலிருந்தது.
கேள்வி கேட்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்; அந்த ஆறுகளிலே லட்சக்கணக்கில் நாரைகள் சிறகடித்துக் கொண்டே, அவை தண்ணீர் மீது ஓடுவதும், பிறகு அணி வகுத்துக் கொண்டு பறப்பதும், வானிலே வட்ட வடிவமாக சதுர வடிவமாக அவை அணி வகுப்பதும், ஏதோ ஆயிரம் பூமாலைகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு வகை வகையாக ஆட்டுவது போலிருந்தது.
இடுப்பளவு தண்ணீரிலே அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று.
ஓடிக் கொண்டிருக்கும் இடுப்பளவு தண்ணீரில் உட்கார்ந்திருந்தால் உஷ்ணக் கோளாறு வராது; மனம் கொதிக்காது. சாத்விகக் குணம் வரும். `போனால் போகட்டும்’ என்ற உணர்வு வரும். எந்தத் துன்பத்தையும் அலட்சியப்படுத்தும் அமைதிவரும்.
துன்பங்களை ஜீரணிப்பதற்குத் தனிமையின் இனிமையான சூழ்நிலை பெரும் உதவி செய்கிறது.
ஒன்று செய்யுங்கள்.
கிராமத்தில் இருப்பவர்கள், பக்கத்தில் இருக்கும் காட்டில் நல்ல நிழல் தரக்கூடிய மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதுவும் ஓடுகிற தண்ணீரிலோ, குளத்துத் தண்ணீரிலோ விழுந்து குளித்த பிற்பாடு துண்டை விரித்து உட்காருங்கள்.
நகரத்தில் இருப்பவர்கள், காற்றோட்டமான தனி அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே உட்காருங்கள்.
இதற்குக் காலை அல்லது மாலை நேரமே உகந்தது.
எதிரே ஏதாவது ஒரு தெய்வத்தின் சிலை இருந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் கவலை இல்லை.
எங்கே, பிரார்த்தியுங்கள்:
“பிறப்புக்கு முன்னாலும் இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே! உன்னை நான் வணங்குகிறேன்.”
“மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றாலே அலைக் கழிக்கப்படுவது போல், மண்ணிலே விழுந்து நானும் அலை கழிக்கப்படுகின்றேன்.”
“எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப் பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால், அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என் மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு.”
“நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன். அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்து விடு.”
“நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.”
“என் அறிவு சிறியது; உன் ஆட்சி பீடம் பெரியது.”
“அகந்தை, ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால், இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும்.
இனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா, எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்கா வண்ணம் அருள் செய்.”
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், வரும், எங்கே, என்ன, உட்கார்ந்து, கொண்டு, தனிமை, என்று, ஆனால், இருக்கும், காடுகளில், நானே, தனிமையில், இருந்தால், விடு, இறக்கி, இந்த, துன்பங்கள், போலவும் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்