முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » உடல் நலத்தை பாதிக்கும் கோபம்
அர்த்தமுள்ள இந்துமதம் - உடல் நலத்தை பாதிக்கும் கோபம்
மனிதனுக்கு ரத்தக் கொதிப்பு ஏன் வருகிறது?
`மெண்டல் டென்ஷன்’ என்கிறார்கள் டாக்டர்கள்.
இதயத்துடிப்பு அதிகமாவதற்கும் அதுவே காரணம்.
உணர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மனம் உடலைத் தாக்குகிறது. உடலின் மென்மையான ரத்தம் கொதிக்கத் தொடங்குகிறது. அந்தக் கொதிப்பு அதிகமாகி அதிகமாகி இருதயத்தைத் தாக்குகிறது.
கொழுப்புச் சத்துக்களாலும் ரத்தக் கொதிப்பு அதிகமாகும் என்றாலும், அது இல்லாதவனுக்கும் ரத்தக்கொதிப்பு வருவதற்கு `டென்ஷன்’ தான் காரணம்.
குடும்பம், தொழில், கடன் இந்த மூன்றிலேயும் டென்ஷனை வளர்க்கும் சூழ்நிலை உண்டு என்றாலும், பயங்கரமான டென்ஷன் மனதுக்கு ஏற்படுவதே பகை உணர்ச்சியால் தான்.
குடும்பக் கோபம் தணியும்; தொழிலின் கவலை தணியும்; கடன் கவலை தணியும்; ஆனால், பகை உணர்ச்சி மட்டும் சீக்கிரம் தணியாது.
ஒரு தடவை யார் மீதாவது பகை ஏற்பட்டு விட்டால், அது திடீர் திடீர் என்று தோன்றும்.
கோடைகாலத்து மேகம் போல கூடும்; விலகும்; சமயங்களில் மழைகாலத்து மேகம் போல ஏழு நாட்களுக்கு மூடிக் கிடக்கும்.
எவனையாவது உதைக்க வேண்டும் போல் தோன்றும்; அதற்கான சக்தி இருக்காது. ஆனால், ஆத்திரம் மட்டும் தணியாது.
மூடி வைத்த கண்ணாடிச் சீசாவுக்குள் அடைப்பட்ட ஆவி கொதிக்கத் தொடங்கினால், சீசா வெடித்துப் போகும்.
உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கும் பகை உணர்ச்சி எதிரியைத் தாக்காது; உன் உடலைத்தான் தாக்கும்.
பிறருக்குப் பகைவன் என்று தன்னை வரித்துக்கொண்டு விட்டவன், தானே தனக்கு எதிரியாகிறான்.
இராமன், இராவணனைப் பகையாக நினைக்கவில்லை; அதனால் அவனுக்கு இராவணனை எண்ணித் துடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; சீதையை எண்ணி உருகுகிற நிலைதான் ஏற்பட்டது.
இராவணனோ சூர்ப்பனகையின் போதனையால், `ராமன் பகைவனே’ என்று முடிவு கட்டிவிட்டான்.
அந்தப் பகை, அவனது மரண பரியந்தம் வரை இருந்தது.
சீதையை அடைய முயன்றான், தோற்றான்; ஆத்திரம் வளர்ந்தது.
தம்பி விபீஷணன் அவனை விட்டுப் பிரிந்தான்; இன்னும் அது வளர்ந்தது.
அனுமன் வரவால் அது அதிகரித்தது.
அமர்க்களத்து நிகழ்ச்சிகளால் அது நெருப்பாய்க் கொதித்தது.
அப்போது `அலோபதி’ மருத்துவம் இல்லை. இருந்திருந்தால், இராவணனின் ரத்தக் கொதிப்பையும் கம்பன் விவரித்திருப்பான்.
`பகைவனுக்கு அருள்வாய்’ என்று சொன்ன ஞானிகளெல்லாம் கருணையால் சொல்லவில்லை; ரத்தக்கொதிப்பு வராமல் இருக்க மருந்து சொன்னார்கள்.
பகைவனே இல்லாமல் இருப்பது எப்படி?
சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும்; சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும்.
பெற்ற பிள்ளை ஒரு தவறு செய்துவிட்டால், அதை ஜீரணித்துப் பிள்ளையைத் திருத்து.
அடுத்தவன் உன்னைப் பற்றி அவதூறு பேசினால் அதை அலட்சியப்படுத்து.
கத்திரிக்காயை ஜீரணி; அதன் காம்பை அலட்சியப்படுத்து.
மாறாகக் காம்பை ஜீரணிக்க முயன்றால் ஜீரணமாகாது; காயை அலட்சியப்படுத்தினால் பசி அடங்காது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, வேண்டும், தணியும், உணர்ச்சி, கொதிப்பு, ரத்தக் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்