முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மறுபடியும் பாவம் புண்ணியம்
அர்த்தமுள்ள இந்துமதம் - மறுபடியும் பாவம் புண்ணியம்
இந்து மதத்தைப் பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது.
இந்து மதத்தைப் பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஷயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.
ஆனால், அவர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நடக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை.
“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம்.
அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. தத்துவார்த்த விளக்கமே கூறினார்கள்.
அந்தத் தத்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு.
அந்தத் தத்துவப்படி நடந்த சம்பவங்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு.
பாவம் புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் தத்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.
வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறுத்துவது இந்து மதம்தான்.
அதன் பண்பாடுகள் உன்னதமானவை; அதன் சடங்குகள் அர்த்தமுள்ளவை.
மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான். சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்கள் காட்டினார்கள்.
மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்த்தைகூடக் கேட்கக்
கூடாது என்றார்கள்.
பெண்ணுக்கு மங்கலம் என்பது தாலி.
திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை மரணத்தின் போது தான் கழற்ற வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போதுகூடக் கழற்றக் கூடாது. அவ்வளவு புனிதமானது அது.
ஒரு உத்தமியின் கழுத்திலுள்ள தாலியை யார் அபகரித்தாலும், அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துக்கள் நம்பிக்கை.
எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான் படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத்திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக்க விரும்பினேன்.
நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன்.
ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையிலிருந்தார். அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை. அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து அணிந்திருந்தார்.
தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார். உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன்.
நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப்பட்டிருந்தன. தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன்.
அவர் பணத்தையும் வாங்கிக்கொண்டு, “ஏராளமான வட்டி பாக்கிஇருக்கிறது, இதை வட்டிக்கு வரவு வைத்துக் கொள்கிறேன்; தாலியைத் தரமுடியாது” என்று சொல்லிவிட்டார்.
பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை.
பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து அவர் புதிய தாலியையே வாங்கி, தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், அந்தத், அவர்கள், தாலி, அடகு, நடந்த, என்பது, இந்து, என்று - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்