முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » குழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…
அர்த்தமுள்ள இந்துமதம் - குழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…
`ஆரம்பத்தில் பிறப்பும் நம்கையில் இல்லை;
அடுத்தடுத்து நடப்பும் நம்வசம் இல்லை.’
குழந்தை பிறந்ததிலிருந்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் வரை இது முழுக்கப் பொருந்தும்.
`இந்தப் பருவத்தில் எப்படி வாழ்வது’ என்று அவனுக்குச் சொல்லிப் புரியாது. ஆனால், அவனை `எப்படி வளர்ப்பது’ என்று தாய் தந்தையர்க்குச் சொல்வது முக்கியம்.
இந்தப் பருவத்தில் ஒரு குழந்தையைக் கவனமாகப் பழக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.
ஒன்று, உணவு; மற்றொன்று, கல்வி.
சுத்தமாக இருக்கப் பழக்கி வைப்பது முக்கியம்.
கிராமத்தில் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினால், கால்களை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், என் தாயார்.
காலைக் கழுவும் போது, முழுப் பாதத்திலும் தண்ணீர் ஊற்றி ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவச் சொல்வார்கள். முன் காலில் தண்ணீர் விழுந்து கணுக்காலில் விழாமல் போனால், `எந்த இடத்தில் தண்ணீர் படவில்லையோ அந்த இடத்தில் சனீஸ்வரன் வந்து உட்கார்ந்து கொள்வான்’ என்பார்கள். நள மகா
ராஜனை அப்படித்தான் சனீஸ்வரன் பற்றிக் கொண்டானாம்.
பேரின்பம் தருகின்றவன் பரமேஸ்வரன்; பெருந்துன்பம் தருகின்றவன் சனீஸ்வரன். இந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் `ஈஸ்வரன்’ பட்டம் உண்டு.
இந்த இரண்டாவது ஈஸ்வரன் எப்பொழுது ஒரு குழந்தையைப் பற்றி கொள்கிறானாம்?
தயிரும், கீரையும் அதிகம் சாப்பிட வேண்டியவை.
ஆனால், இரவிலே இவற்றைச் சாப்பிடவே கூடாது. அப்படிச் சாப்பிட்டால், `சனீஸ்வரன் பிடிப்பான்’ என்பார்கள்.
ஏன் சொன்னார்கள்?
தயிரும், கீரையும் முழு அளவில் ஜீரணமாகப் பதினெட்டு மணி நேரமாகும்.
பகலில் சாப்பிட்டால், காலையிலேயே தெளிவாக மல ஜலம் கழியும். இரவிலே சாப்பிட்டால் மறுநாள் மத்தியானம் அகாலத்தில் வயிற்றைக் கலக்கும்.
இந்துக்களின் தெய்வ நம்பிக்கை பெரும்பாலும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஒன்று, உடல் ஆரோக்கியம்; மற்றொன்று, ஆன்ம ஆரோக்கியம்.
பன்னிரண்டு வயது வரையில் நான் தலை முடியை கிராப்பு வெட்டிப் பழகியதில்லை. மொத்தமாக வளர விட்டு விடுவார்கள். எனக்கு என் தாயார் ஜடை போட்டு விடுவார்கள். `மலைக் கோயிலுக்கு முடி, அழகர் கோயிலுக்கு முடி’ என்று ஒவ்வொரு கோயிலுக்காக முடி வளர்க்கச் சொல்வார்கள்.
ஒரு கோயிலுக்குப் போய் முடி இறக்கிக் கொண்டு வந்தவுடனேயே, அடுத்த கோயிலுக்காக `நேர்ந்து’ விடுவார்கள்.
காரணம், பால வயதில் சேருகிற அழுக்கு, மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கா வண்ணம் அடிக்கடி `முடி இறக்குதல்’ என்ற பெயரில் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதையும் தெய்வத்தின் பெயரால் கட்டுப்பாடாகச் செய்வார்கள்.
புத்த சந்நியாசிகளும் சரி, சமண சந்நியாசிகளும் சரி, இந்து சந்நியாசிகளில் ஒரு பகுதியினரும் சரி தலையை மொட்டையாக வைப்பதற்குக் காரணம் இதுதான்.
அடுத்தது, புதன் கிழமையும், சனிக்கிழமையும், மறந்து விடாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுவார்கள், முடி, சாப்பிட்டால், சனீஸ்வரன், தண்ணீர், என்று - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்