முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » இறைவனின் நீதிமன்றங்கள்
அர்த்தமுள்ள இந்துமதம் - இறைவனின் நீதிமன்றங்கள்
மனித வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.
வானிலும், மண்ணிலும் பல்வேறு கோளங்கள் இயங்குகின்றன.
மனித உடம்பிலிருக்கும் ஆயிரக்கணக்கான நரம்புகள் போல், வாழ்க்கையில், ஆயிரக்கணக்கான சாலைகள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு போகின்றன.
குளங்களில் அலைகள் ஒன்றிலிருந்து பத்தாக, பத்திலிருந்து நூறாகக் கிளைத்துக் கொண்டே செல்கின்றன.
எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிக்கல்களையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்க ஒரு நீதிமன்றம் போதாது.
மற்ற மதங்களில் `சுப்ரீம் கோர்ட்’ மட்டுமே இருக்கிறது.
ஒரே நாயகனுடைய விசாரணைக்கு ஒரு கோடி வழக்குகளும் வைக்கப்பெறுகின்றன.
அதனால் வழக்குகள் பைசலாவதில் தாமதமாகின்றன.
வழக்கின் தரத்திற்கேற்ப பெஞ்சு கோர்ட்டுகளும், செஷன்ஸ் கோர்ட்டுகளும், உயர்நீதி மன்றங்களும், சுப்ரீம் கோர்ட்டும் அவற்றைப் பகிர்ந்து கொண்டு விசாரிப்பதை பூமியில் நாம் பார்க்கிறோம்.
இந்த அடிப்படையில் தான், இந்து மதத்தில் `இறைவனின் நீதிமன்றங்’களும் அமைந்து இருக்கின்றன.
`பெஞ்ச் கோர்ட்’ நீதிபதிகளாகச் சில தேவதைகள்.
`மொபைல் கோர்ட்’ நீதிபதிகளாகச் சில தேவதைகள்.
அப்படியே படிப்படியாக விசாரிக்கும் தெய்வங்கள்.
இவற்றில் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற அமைப்பு `சுப்ரீம் கோர்ட்’ அமைப்பாகும்.
கண்ணன், முருகன், விநாயகர் என்ற அமைப்பு உயர் நீதிமன்ற அமைப்பாகும்.
காளியம்மன், மாரியம்மன் என்ற அமைப்பு செஷன்ஸ் கோர்ட் அமைப்பாகும்.
ஊருக்கு ஊர் காணப்படும் குட்டித் தேவதைகள் அமைப்பு `மாஜிஸ்திரேட் கோர்ட்’ அமைப்பாகும்.
இறந்து போன மூதாதையர் `பெஞ்ச் கோர்ட்’ நீதிபதிகளாவர்.
குட்டிச் சாத்தான் போன்றவை, மொபைல் நீதிபதிகளாகும்.
எண்ணிப் பார்க்கும்போது, இயற்கையான ஒரு மதத்தின் நிலைக்குத் தேடிக் கொண்ட செயற்கையான கற்பனை போலத் தோன்றும்.
ஆனால், வழக்குகள் பைசலாகும் முறையை விவரிக்கும் போது இது எவ்வளவு உண்மை என்பது தெரியவரும்.
சிவனையோ, விஷ்ணுவையோ வணங்கி சீக்கிரம் தீர்ப்புப் பெற்றவர் யாருமில்லை.
ஏறவேண்டிய அளவு படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய பின்னால், காலந்தாழ்ந்து அவர்கள் தீர்ப்பு கைக்குக் கிடைக்கிறது.
கண்ணன், முருகன், விநாயகர் போன்ற உயர்மன்ற நீதிபதிகள் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களுக்குப் `புது ரூலிங்’ கொடுக்கிறார்கள்.
காலத்தால் மாறுகின்ற நியாயங்கள், இந்த ரூலிங்கின் விளைவாகத் தோன்றியவையே.
இந்தத் தொடர் கட்டுரையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுத் தீர்ப்புகளைக் காட்டுகின்றேன்.
உதாரணத்திற்கு, தலைகீழாக நடந்து எத்தனை படிக்கட்டுகள் ஏறிக் காரைக்கால் அம்மையார் `சுப்ரீம் கோர்ட்’ தீர்ப்புப் பெற்று முக்தியடைந்தார் என்பதைக் குறிப்பிடலாம்.
இதுபோன்ற பல செய்திகள்.
இந்தத் தொடர் கட்டுரையை இப்படி வரிசைப்படுத்திக் கொள்கிறேன்.
1. மொபைல் கோர்ட்
2. பெஞ்ச் கோர்ட்
3. மாஜிஸ்திரேட் கோர்ட்
4. செஷன்ஸ் கோர்ட்
5. ஹைகோர்ட்
6. சுப்ரீம் கோர்ட்
மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் பெரிய வழக்குகள் செஷன்ஸுக்கு `கமிட்’ செய்யப்படுகின்றன.
அங்கே தீர்ப்புப் கிடைத்ததும் `அப்பீல்’ செய்யும் உரிமையோடு (Right to Appeal) ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்யப்படுகின்றது.
அங்கேயும் தீர்ப்பு ஒரே மாதிரி இருந்தால், `அப்பீல்’ செய்ய அனுமதி கேட்டு, (Leave to Appeal) சுப்ரீம் கோர்ட்டிடம் அப்பீல் செய்யப்படுகின்றது.
சட்டத்திலுள்ள நடைமுறை, தர்மத்தில் எப்படி செயல்படுகின்றது?
சமயங்களில் சட்டம், தர்மத்திற்கு விரோதமாக இருக்கக்கூடும். ஆனால், தர்மம் சட்டத்திற்கு நியாயமாகவே இருக்கிறது.
கலவர வழக்கில் சில பேருக்கு இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறார் மாஜிஸ்திரேட்.
சில சமயங்களில், கொலை வழக்குக்கே இரண்டு வருடம் தண்டனைதான் கிடைக்கிறது செஷன்ஸில்.
அங்கே சந்தேகத்தின் பலன், எதிரிக்கு அளிக்கப்படுகிறது.
சட்டநீதி மன்றங்களில்தான் சந்தேகம் எழுகிறதே தவிர, தர்ம நீதி மன்றத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை.
ஆகவே, தீர்ப்பு அளந்து வழங்கப்படுகிறது.
திருட்டுக் குற்றத்திற்காகப் பல வகையான தண்டனைகளைப் பலவகையான மாஜிஸ்திரேட்டுகள் வழங்குகிறார்கள்.
அது அவர்களுடைய மனோபாவத்தையும், அன்றைக்கு அவர்கள் குடும்பத்தில் நடந்த தகராறுகளையும் குறிக்கும்.
ஆனால், தர்ம நீதி மன்றத்தில் தண்டனை, பாவத்தை விட அதிகமாக இருக்காது.
ஏராளமான நிகழ்ச்சிகள், செவி வழிச் செய்திகள், புராணங்கள், இதிகாசங்கள் இதை உறுதி செய்கின்றன.
அடுத்து, மொபைல் கோர்ட் நீதிபதிகளைச் சந்திப்போம்.
1. மொபைல் கோர்ட் நீதிபதிகள்
உலவும் ஆவிகள் பற்றி, அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே `குட்டிச் சாத்தான்’ போன்றவை.
ஆசை நிறைவேறாமல் இறந்த உயிர்களும்; தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.
ஒருசில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.
பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.
சத்திய சாயிபாபா என்பவரைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகி விடுமாம்.
திடீரென்று அவர் விபூதி கொடுப்பாராம்; வெறும் கையிலேயே விபூதி வருமாம்.
பிறரது கனவில் ஊடுருவும் சக்தி அவருக்கிருக்கிறது என்பது உண்மை.
குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.
என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.
முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார்; நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.
இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கும் கட்டத்துக்குள் ஒரு `கரண்ட்’ என்னை இழுக்கிறது; நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். `கிருஷ்ணா! கிருஷ்ணா!’ என்று நான் சப்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டு விடுகிறது.
சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.
இதே போல் பன்றிமலை சுவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.
அவரை ஒரு நாள் பார்க்கப் போனேன்.
அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.
அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகிறது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோர்ட், கோர்ட்&, அவர், நான், தீர்ப்பு, என்பது, மொபைல், சத்திய, சாயிபாபா, அமைப்பாகும், குட்டிச், அமைப்பு, செஷன்ஸ், வழக்குகள், `சுப்ரீம், என்று, கனவில், சுப்ரீம், இரண்டு, என்ற, தேவதைகள், ஆனால், தீர்ப்புப், மாஜிஸ்திரேட் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்