முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » அறிவும் திருவும்
அர்த்தமுள்ள இந்துமதம் - அறிவும் திருவும்
இந்துக்களின் கடவுள் கொள்கை முற்றிலும் லெளகீகத்தை ஒட்டியதே.
குடும்ப வாழ்க்கையின் கூறுகளே, தெய்வ அம்சங்களாகச் சித்தரிக்கப்பட்டிருகின்றன.
சிவனுக்குப் பார்வதி என்று ஒரு மனைவி உண்டென்றும், முருகன், கணபதி ஆகிய மக்கள் உண்டென்றும், ஒரு குடும்பத்தைக் காட்டினார்கள்.
சிவனுடைய ஒவ்வொரு அவதாரத்திலும், சக்தியும் அவதாரம் செய்து, கணவன் – மனைவி ஆகிறார்கள்.
சிவன் சொக்கநாதர் ஆனால், சக்தி மீனாட்சி ஆகிறாள்.
சிவன் விசுவநாதரானால், சக்தி விசாலாட்சி ஆகிறாள்.
சிவன் ஏகாம்பரேசுவரர் ஆனால், சக்தி காமாட்சி ஆகிறாள்.
அதுபோல், பிரகதீசுவரர் – பிரகதாம்பாள்.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவசக்தியின் பெயர் மாற்றமிருக்கும்.
அது போலவே,
திருமால் கண்ணனானால், திருமகள் ருக்மணி ஆகிறாள்.
திருமால் வேங்கடத்தான் ஆனால், திருமகள் அலர்மேலு மங்கை ஆகிறாள்.
திருப்பதியில் இருந்து, ஸ்ரீரங்கமும், திருவல்லிக்கேணி, அரியக்குடி அத்தனை இடங்களிலுமுள்ள திருமால் கோயில்கள் வேறு பெயர்களைச் சுட்டுகின்றன.
சைவர்கள் சிவனையும், வைணவர்கள் திருமாலையும் தந்தையாகக் கொண்டு இயங்குகிறார்கள்.
சைவர்களுக்கு வைணவர்கள் சம்பந்திகள்.
சைவ – வைணவத் தகராறு என்பது, சம்பந்திகள் தகராறே!
திருமாலின் தங்கையைத்தான் சிவன் மணந்தார்.
அதுபோல், ஒவ்வொரு கடவுளுக்கும் பத்தினி உண்டு.
பிரும்மாவுக்கு சரஸ்வதி; இந்திரனுக்கு இந்திராணி; முருகனுக்குத் தெய்வானை-வள்ளி; கணபதி மட்டுமே பிரம்மசாரி.
இப்படி ஏன் கடவுளுக்குக் குடும்பங்களை வகுத்தார்கள்?
தெய்வமும் லெளகீகத்துக்குத் தப்பவில்லை என்பதைக் குறிக்கவே!
இந்துமதம் என்பது லெளகீகத்தையே முதற்படியாகக்
கருதுகிறது.
துறவு என்பது இரண்டாம் பட்சமே.
குடும்பங்களில் கணவன்-மனைவி தகராறு வருவது போல், சிவனுக்கும் சக்திக்கும் தகராறு வந்ததாகக் கதைகள் உண்டு.
மனிதக் குடும்பங்களில் என்னென்ன காரணங்களுக்காகத் தகராறு வருமோ, அதே காரணங்களுக்காகத்தான் கடவுள் குடும்பங்களிலும் தகராறு வந்திருக்கிறது.
இதைக் கேட்கின்ற வேறு நாட்டவர்களுக்கு வியப்பாக இருக்கும்.
எந்த மதமும் கணவன் – மனைவியாகக் கடவுளைக் கண்டதில்லை.
கணவனுக்குரிய இடம் எது? மனைவிக்குரிய இடம் எது?
இந்துமதக் கதைகள் பதில் சொல்லும்.
இந்துமதம் வெறும் சந்நியாசிகளுக்கும், வாழ்க்கையைக் கண்டு பயந்தவர்களுக்கும் மட்டும் அடைக்கலம் கொடுப்பதல்ல.
அது போலவே, மனித வாழ்க்கையின் நாகரிகம் கலைகள் அனைத்தையுமே இந்துமதம் எதிரொலிக்கிறது.
சினம்-சினத்தால் அழிவு.
பொறாமை – பொறாமையால் அழிவு.
ஆணவம் – ஆணவத்தால் அழிவு.
துரோகம் – துரோகத்தால் அழிவு.
- இவைபோல் வாழ்க்கையில் எத்தனை கோணங்கள் உண்டோ, அத்தனை கோணங்களும் இந்துமதக் கொள்கைகளில் உண்டு.
கல்வி பற்றியும், கல்லாமை பற்றியும் கதைகள் உண்டு.
கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி என்றெல்லாம் வாழ்க்கைத் தேவைக்கும் கடவுள்களை வைத்தது இந்துமதம்.
ஏன், கலைகளைக்கூட இந்துமதம் தன் வழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகராறு, இந்துமதம், சிவன், ஆகிறாள், உண்டு, அழிவு, ஒவ்வொரு, கதைகள், என்பது, கணவன், சக்தி, மனைவி, திருமால், ஆனால் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்