முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » ஏன் இந்த நம்பிக்கை
அர்த்தமுள்ள இந்துமதம் - ஏன் இந்த நம்பிக்கை
“தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும், அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆம், பலவீனத்திலும் பயத்திலுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்றமளிக்கிறது. இந்து சமயமன்றிப் பிற சமயங்களும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் கேட்டதாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாணவியைப் பார்த்துக் கேட்கிறார்:
“கடவுள் எங்கே இருக்கிறார்?”
மாணவி சொல்லுகிறாள்:
“தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்.”
“இல்லை; அது பழங்கதை. வாழ்க்கை நன்றாக இருக்கும் போது கடவுள் இல்லை; வறுமை வரும்போது அவர் உடனே வருகிறார். வெற்றி பெற்றவனுக்குக் கடவுள் இல்லை; தோல்வியுற்றவன் நெஞ்சில் உடனே தோற்றமளிக்கிறார்” என்றார் ஆசிரியர். ஆம்; பாவம் செய்யும்போது கடவுள் இல்லை. அதற்குரிய தண்டனையை அனுபவிக்கும் போது கடவுள் இருக்கிறார். ஒலியிலே தோன்றாத கடவுள், எதிரொலியில் தோன்றுகிறார். சிலையிலே காணமுடியாத தெய்வம், சிந்தையிலே சாட்சிக்கு வருகிறது.
`கடவுள் நம்பிக்கை என்பது ஏதாவதொரு வடிவத்தில் எல்லோருக்கும் இருந்தே தீருகிறது’ என்பது இந்துக்கள் முடிவு. `உயர்ந்தனவோ தாழ்ந்தனவோ அனைத்திலுமே நான் இருக்கிறேன்’ என்றே கண்ணன் சொல்கிறான்.
அர்ஜுனனிடம் கண்ணன் சொல்கிறான்:
“அர்ஜுனா, தேவர் கூட்டங்களும், முனிவர்
களும் என் உற்பத்தியை உணரமாட்டார்கள்; ஏனென்றால், அவர்களுக்கு முற்றிலும் முதற்காரணம் நானே. ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகிற்குக் தலைவன் என்றும், என்னை அறிகிறவன் மனிதர்களுள் மயக்கமில்லாதவன். புத்தி, ஞானம், தெளிவு, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்சை, மனத்தின் நடுநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி அனைத்துமே என்னிடத்திலிருந்தே உண்டாகின்றன. வேதங்களுள் நான் சாம வேதம்; தேவர்களுள் இந்திரன்; இந்திரியங்களுள் நான் மனது; உயிர்களில் நான் உணர்வு. புரோகிதர்களுள் நான் பிரகஸ்பதி; சேனாதிபதிகளில் நானே தேவசேனாதிபதியாகிய முருகன்; நீர் நிலைகளில் நான் கடல். ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் காமதேனு; தம்பதிகள் நடுவே நான் மன்மதன்; பாம்புகளில் நான் வாசுகி. நாகங்களில் நான் அனந்தன்; மழைத் தேவதைகளில் வருணன்; அடக்கியாள்வோர்களில் நான் எமன். விலங்குகளில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன். தூய்மை தருவனவற்றுள் நான் காற்று; ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ராமன்; மீன்களிலே நானே மகர மீன்; நதிகளில் நானே கங்கை. அர்ஜுனா! சிருஷ்டிப் பொருளுக்கு முதல், இடை, கடையாகிய மூன்றும் நானே. வித்தைகளில் நானே ஆத்ம வித்தை. வாதம் செய்பவர்களிடம் நானே வாதம். பெண்மையில் நானே புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறுமை. காலங்களில் நானே வசந்தம்; மாதங்களில் நானே மார்கழி; தருக்களில் நானே தேவதாரு. வாசகர்களின் சூதாட்டம் நானே; அழகும், மனத் தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்தவர்களிடத்தில் அனைத்தும் நானே!
தண்டிப்பவர்களிடத்தில் நானே செங்கோல் ஆகிறேன்; வெற்றி வேண்டுவோரிடத்தில் நானே நீதி. ரகசியங்களில் நானே மவுனம்; ஞானிகளுடைய ஞானமும் நானே. அர்ஜுனா அனைத்துக்கும் வித்து எதுவோ அது நானே”.
- இது கண்ணனின் திருவாய் மொழி. எல்லாம் நானே என்று சொல்ல வந்த பரந்தாமன், எவை எவை உயர்ந்தவையோ, எவை எவை பிரச்சினைக்குரியவையோ, அவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த அகிலத்தில் தான் யார் என்பதை விளங்க வைக்கிறான். ஸ்தூலமாகக் காட்சி தரும் அழகிய கண்ணன் நிலை, இவை அனைத்தையுமே உள்ளடக்கியது. தெளிவு, மயக்கம் இரண்டிலுமே திரண்டு நிற்கும் அந்த இறைவனைக் கர்மத்தைவிட ஞானமே அதிகமாக அறிகிறது. கர்மத்தின் விளைவாக வரும் ஞானம், அதைவிட விரைவாகப் புரிந்து கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியும் உலகத்தைவிட கண்ணுக்குத் தெரியாத சூட்சம உலகம் பல மடங்கு பெரிதாக இருக்கிறது. அவை அனைத்தையும் இயக்கும் மூலப் பொருளை அனுபவம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறது. கடவுள் நம்பிக்கையல்ல. விஞ்ஞானிகூட விளக்கம் சொல்ல முடியாத ரகசியம் இறைவனின் சிருஷ்டியில் இருக்கிறது. உலகத்தில் இருநூறு கோடி மனிதர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இருநூறு கோடியிலும் ஒருவரே போல் காட்சியளிக்கும் இன்னொருவர் இல்லை. ஒருவருக்கொருவர் பத்துக்கு ஒன்பது ஒற்றுமை இருந்தால், ஒன்றாவது மாறுபட்டு நிற்கும். நூற்றுக்கு நூறு உடலமைப்பும், குரலமைப்பும் உள்ள இருவரை நீங்கள் காண முடியாது. இரட்டைப் பிள்ளைகளாகப் பிறப்பவரிடையே கூட ஏதாவதொரு வித்தியாசத்தைக் காணமுடியும். குணங்களிலும் ஒருவருக்கொருவர் கொஞ்சமாவது மாறுதல் இருந்தே தீரும்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நானே, நான், கடவுள், இல்லை, நம்பிக்கை, இருக்கிறார், அர்ஜுனா, இருக்கும், என்றும், கண்ணன், ஞானம், இந்த, என்பது, அந்த, இருந்தே - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்