முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » வரும் ஏற்றுக் கொள்; தரும் பெற்றுக்கொள்!
அர்த்தமுள்ள இந்துமதம் - வரும் ஏற்றுக் கொள்; தரும் பெற்றுக்கொள்!
லௌகீக வாழ்க்கையில் நாம் தவம் செய்கிறோம் என்றும், அந்தத் தவம் எத்தகையது என்றும் விளக்கி, ஸ்ரீ ராம்சந்த்ரஜி கூறியுள்ள கருத்துக்களை நான் முன்னே விவரித்தேன்.
உலக இச்சைகளுடனேயே உடைமைகளையும் பெற்றுப் பற்றற்று வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது.
நம்முடைய சுற்றத்தாரும், நண்பர்களும், ஊழியர்களும் நமக்கு இழைக்கின்ற துயரங்களால் நமது மனம் பக்குவப்படுகிறது என்கிறார் அவர்.
அது மிகவும் உண்மை.
சிலர் நாக்கிலும் உடம்பிலும் ஊசியைக் குத்திக் கொள்கிறார்கள்.
சிலர் கூர்மையான ஆணிகளின் மீது படுத்துப் புரளுகிறார்கள். சிலர் கண்ணாடித் துண்டுகளை விழுங்கிக் காட்டுகிறார்கள்.
இந்த யோகங்கள் எல்லாம் சரீரத்தின் புறத்தோற்றம் பதப்படுத்தப்பட்டு, பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன.
கடுந் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம் செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம், உள்ளம் தவம் செய்கிறது.
ஆரம்பக் கட்டத்தில் சிறிய துன்பங்கூடப் பெரிதாகத் தெரியும்.
அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும்.
ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும்.
துன்பங்களின் மூலம் உலகத்தைக் கற்றுக் கொண்டவன் ஒரு ஞானியைவிடச் சிறந்த மேதையாகி விடுகிறான்.
ஓரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது.
தொடர்ந்து துன்பங்கள் வந்துக்கொண்டே இருந்தால், அழுவதற்கு சக்தி இல்லாமற் போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு வருகிறது.
ஒரு கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது.
அதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம்.
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!
என்றொரு பாடல்.
ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது!
கற்பனை தான்!
ஆனால், ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப் பாருங்கள்.
பசு மாடு கன்று போட்டதாம்.
அடாத மழை பெய்ததாம்.
வீடு விழுந்து விட்டதாம்.
மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம்.
வேலைக்காரன் இறந்து போனானாம்.
வயலில் ஈரம் இருக்கிறது.
விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.
வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம்.
“உன் மகள் இறந்து போனாள்” என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.
இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.
பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம்.
நில வரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.
குருக்களும் தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கட்டத்தில், மூலம், தாங்கிக், சிலர், தவம் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்