முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » சமதர்மம்
அர்த்தமுள்ள இந்துமதம் - சமதர்மம்
`ஏழை ஏழையாகவே இருப்பது, அவன் தலையெழுத்து’ என்று இந்து மதம் சொல்கிறதா?
ஏழை முயற்சி செய்து முன்னுக்கு வரக் கூடாதென்று இந்து மதம் தடுக்கிறதா? `பணக்காரன் தேவைக்குமேல் சொத்து வைத்திருப்பதை இந்து மதம் அனுமதிக்கிறதா?’ இல்லை!
தர்மம் சரியாக விநியோகிக்கப்படவேண்டும் என்பதே இந்து மதத்தின் சாரம்.
கடந்த நூற்றாண்டுகளில் பணக்காரர்களாக இருந்தவர்கள், தங்கள் சுயநலத்துக்காக ஏழ்மையைத் `தலைவிதி’ என்றார்கள்.
ஏழைக்கு இறைவன் கொடுத்த அளவு மற்றவர்களோடு சம அளவுதான்.
ஆனால், ஏழையின் அளவைப் பணக்காரர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.
ஏழ்மை என்பது நிரந்தரமாக இருக்குமானால், அது இறைவன் விதித்த விதியாக இருக்கலாம்.
எப்போது ஏழையும் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறதோ, அப்போது அந்த வாய்ப்புகள் தடுக்கப்பட்டவன்தான் ஏழையாக இருக்கிறான் என்று அர்த்தம்.
`பேராசைக்காரர்கள் மோட்சத்துக்குப் போவதில்லை’ என்று இந்து மதம் கூறுகிறது.
ஒருவனது அறிவை இறைவன் நிர்ணயிக்கலாம்; ஆனால் பொருளை அவன் நிர்ணயிப்பதில்லை.
`ஏழ்மை என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது அல்ல’ என்று இந்து மதம் அறுதியிட்டுக் கூறுகிறது.
அந்தக் கால உபன்யாசகர்கள் இதுபற்றி என்ன சொன்னார்களோ, எனக்குத் தெரியாது.
ஆனால், இந்தக் காலத்தில் இந்துமதத் தத்துவங்களை லௌகீக வாழ்க்கைக்கு உகந்த வகையில் விமர்சிக்கும் காஞ்சி ஆச்சார்ய சுவாமிகளே, அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
தெளிவான சமதர்மமே இந்துமதத்தின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
பொருளாதார சமதர்மத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவர்களது கருத்தை, அவர்களது வார்த்தைகளிலேயே அப்படியே தருகிறேன்.
இது யாரோ ஒரு துறவியின் பேச்சு என்று அப்போது படிக்காமல் இருந்தவர்கள், இப்போது படியுங்கள்.
அவர்கள் சொல்கிறார்கள்:
“ஸாயா தோயம் வஸநம் அஸநம்”
ஸாயா என்றால் நிழல்; தோயம் என்பது ஜலம்;
`வஸநம்’ என்பது உடுத்திக் கொள்கிற வஸ்திரம்; `அஸநம்’ என்றால் ஆகாரம்.
மனுஷர்களுடைய மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள, இந்த நான்கும் மிகவும் அவசியமானவை.
நிழல் கொடுப்பது இந்தப் பூமிதான். பூமியிலிருந்து மண், கல், சுண்ணாம்பு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு வீடு கட்டிக் கொள்கிறோம். பூமியிலிருந்து ஜலம் வருகிறது. ஆகாரம், பூமியிலிருந்துதான் கிடைக்கிறது. வஸ்திரமும் பூமியிலிருந்து வரும்படியான பருத்தியினால்தான் கிடைக்கிறது. முடிந்த முடிவில், நாம் `பூமி’யில்தான் மறைந்து போகிறோம். நமக்குத் தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது, என்றாலும், `பூமி’யில் இருந்து கிடைக்கும்படியான பொருள்களில், நமக்கு மிகவும் குறைச்சலாக எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஆடை கட்டிக்கொள்ளவேண்டும். நமக்கு ஒரு வருஷத்திற்குக் குறைந்தது எவ்வளவு ஆடை வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில்தான் நாம் கவனம் செலுத்துவதில்லை.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்து, என்று, மதம், என்பது, பூமியிலிருந்து, அவர்கள், இறைவன், ஆனால் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்