முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மங்கல வழக்குகள்
அர்த்தமுள்ள இந்துமதம் - மங்கல வழக்குகள்
சுயமரியாதை, சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம்.
கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு,
மூட நம்பிக்கை ஒழிப்பு என, அது ஆரவாரம் செய்த காலம்.
அந்த ஆரவாரத்தால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
கறுப்புச்சட்டை போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது.
அது ஒரு தத்துவமா?, அதில் பொருள் உண்டா?,
பயனுண்டா? என்று அறியமுடியாத வயது.
அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மீது எனக்குப் பிடிப்புண்டு.
சில சீர்த்திருத்தத் திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கியிருக்கிறேன்.
மற்றும் சில திருமணங்களில் நான் பேசியிருக்கிறேன்.
மேலவைத் தலைவர் திரு.சி.பி.சிற்றரசுவின் மகளுக்கு சீர்திருத்தத் திருமணம் நடந்த போது, நானும் அதில் கலந்து கொண்டேன்.
அங்கே பேசியவர்களில் பொன்னம்பலனார் என்று ஒருவரும் பேசினார்.
மணமக்களின் தலைமீது மஞ்சள் அரிசியும், புஷ்பங்களும் தூவப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார்.
“இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை பிணங்களா?” என்று அவர் பேசினார்.
எனக்கு நெஞ்சில் அடிப்பது போலிருந்தது.
`திருமண வீட்டில் அமங்கலமாய்ப் பேசுகிறாரே’ என்று நான் வருந்தினேன்.
இன்னொரு சீர்திருத்தத் திருமணம்.

“இங்கே நடப்பது சீர்த்திருத்தத் திருமணம். இரண்டே நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. ஐயர் வரவில்லை, ஓமம் வளர்க்கவில்லை, அம்மி மிதிக்கவில்லை, அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே ஐயர் வராததால் இந்தப் பெண் வாழமாட்டாளா? இவளுக்குப் பிள்ளை பிறக்காதா? ஐயர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண் விதவையாவதில்லையா? அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே! அவர் வந்து கட்டினால்தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா?”
அவர் பேசி முடிக்கவில்லை. நான் அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.
“நடப்பது திருமணம்; நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதைப்பற்றி, பேசாமல் உட்கார்” என்றேன்.
பிறகு நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.
`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.
நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது.சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.
மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.
திருமணத்தில் மாங்கல்யம் கட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்?
ஏதாவது ஒரு மூலையில், யாரோ யாரையோ, `நீ நாசமாய்ப் போக’ என்றோ, `உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக்கூடும்.
அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக் கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.
இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்க ஆரம்பித்தது.
நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.
மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.
மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, அவர், ஐயர், நான், அந்த, திருமணம், மங்கல, செய்திகள், இங்கே, வழக்குகள், பேசினார், மஞ்சள், ஒழிப்பு - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்