பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - ஸ்ரீ பராசரர்
வசிஷ்ட மகரிஷியின் குமாரர் சக்தி மகரிஷி. சக்தி மகரிஷியின் குமாரர் பராசரர். பராசரரின் தாயார் அத்ருஷ்யந்தி. பராசரர் தம் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே, சக்தி மகரிஷி கல்மாசபாதன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டார். பராசரர் பிறந்து தம் தாயின் மடியில் இருக்கும் போது தம் தாய் அமங்கலியாக இருக்கக் கண்டு காரணத்தைக் கேட்டார். உதிரன் என்னும் அரக்கனால் உன் தந்தை இறந்தார் என அவள் கூறக் கேட்டு அரக்க இனத்தையே அழிப்பதற்காகச் சத்திரயாகம் செய்தார்.
யாகத்தின் பயனாய் அரக்கர் யாக குண்டத்தில் வந்து விழுந்து இறக்கலாயினர். பின் சிவபிரானும், புலஸ்திய, பிரம்மாவும் வந்து வேண்டிக் கொள்ள யாகத்தை நிறுத்தினார். அதனால் மகிழ்ந்த புலஸ்திய மகரிஷி பராசரருக்குப் பூர்ணஸம்ஹிதை"என்ற நூலை எழுத அருள் செய்தார்.
இவர் தன் தாயின் கர்ப்பத்திலேயே வேதங்களைச் சொன்னவர். இவரது புதல்வர்தான் வேத வியாசர். பராசரரின் மனைவியின் பெயர் சத்யவதி.
பராசரரின் மக்கள் தத்தன், அநந்தன், நந்தி, சதுமுகன், பருதிபாணி, மாலி என்னும் அறுவரும் சரவணப் பொய்கையில் முதலையுருக் கொண்டு விளையாடினர்.
இவ்விளையாட்டினால் பொய்கையில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. பொய்கையில் நீராட வந்த பராசரர் இதனைப் பொறுக்காமல் அறுவரும் தன் மக்கள் என்றும் பாராமல் சபித்தார்.
சரவணப் பொய்கையில் ஆறு திருமேனிகள் கொண்டு விளங்கினான் ஒரு திருமுருகன்.இவ் ஆறு திருமேனிகளையும் ஆர்வத்துடன் அம்பிகை கட்டியணைத்தாள். ஆறு திருமேனிகளும் ஒன்றாக இணைந்து முருகன், கந்தன் என்னும் திருநாமம் பெற்றான்.
இக்கந்தப் பெருமானுக்கு அன்னை தன் திருமுலைப் பாலை ஊட்டினாள். அந்த சிவ ஞானப்பால் சரவணப் பொய்கையிலும் பெருகியது. அதனை உண்டு மீன்களாய் இருந்த பராசரரின் குமாரர் அறுவரும் சாபவிமோசனம் பெற்றனர்.
நட்சத்திரம், திதி முதலியன அனைத்தும் குறிப்பிட்ட ஒருநாளில் நல்ல நிலையில் உச்சத்தில் இருக்கும்போது, மனைவியின் வழி ஒரு குமாரனைப் பெற்றால் அவன் உலகம் போற்றும் உத்தமன் ஆக இருப்பான் என்பதனை உணர்ந்தார்.
அத்தகைய புனிதமான நாள் வர, அந்நாளில் தம் மனைவியை அடையப் பராசரர் தவத்தில் இருந்து தம் பர்ணசாலைக்குப் புறப்பட்டார். வழியில் யமுனை நதி குறுக்கிட்டது. தாசராஜனின் வளர்ப்பு மகள் யமுனையில் படகு விட்டுக் கொண்டு இருந்தவள், படகுத்துறையில் படகுடன் இருந்தாள்.
பராசரர் படகை அக்கரைக்கு விடுமாறு கூறினார். ஸ்வாமி! படகுக்குத் தேவையான பாரம் வேண்டுமே! தாங்கள் ஒருவர்தான் இருக்கின்றீர்! இன்னும் சிலர் வந்தால் படகினை ஆற்றில் இறக்கி விடலாம் என்றாள் மச்சகந்தி.
பெண்ணே! படகினுக்குத் தேவையான பாரமாக நான் ஒருவனே இருப்பேன். படகினை நதியில் விடு என்று அவசரப்படுத்தினார் முனிவர். யாரோ ஒரு மகானுபாவர் என்று எண்ணிய மச்சகந்தி படகினை விடச் சம்மதித்தாள். படகு யமுனைக்குள் சென்றது. முனிவர் வானை ஆராய்ந்தார். நட்சத்திரம் உச்சத்தினை அடைந்தது. தாம் கணித்த நேரம் வந்து விட்டதனை உணர்ந்தார். இனி தம் ஆசிரமம் செல்லுவதற்குள் குறிப்பிட்ட காலம் கடந்து விடும் என உணர்ந்தார். மச்சகந்தியிடம் செய்தியைத் தெரிவித்து அவள் சம்மதத்துடன் அவளைப் பரிமளகந்தியாக ஆக்கி நதியின் நடுவே ஒரு த்வீபத்தை (தீவை) உண்டாக்கி அங்கே அவளிடமாக ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தை த்வீபத்தில் பிறந்ததால் துவைபாயனர் எனப்பட்டது. அக்குழந்தை தான் வேத வியாசர்.
விஷ்ணு புராணத்தை அருளினார் பராசரர். இவர் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு ஆண்டுகள் கர்ப்பவாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களையும் சரங்களையும் பராஜயம் (தோல்வி) அடையச் செய்தமையின் பராசரர் எனப்பட்டார்.மன்மதனின் பஞ்ச பாணங்களையும் பராஜயம் அடையச் செய்தமையாலும் (காமத்தை வென்றவர் என்று பொருள்) பராசரர் எனப்பட்டார்.
இவர் எழுதியது விஷ்னு புராணம். இது இவர் உலகுக்கு வகுத்துக் கொடுத்த பக்தி மார்க்கம். ஸ்ரீமத் பாகவதத்திற்கு மூலநூல் ஆகும். விஷ்னு புராணத்தில் அத்வைத வேதாந்த கருத்துகள் பின்னிப் பிணைந்து இருக்கும், இவர் கர்ம நெறிகள், வாழ்க்கை முறைகள். சமூகக் கோட்பாடுகள், தனிமனித நியாயங்கள். தர்ம சாத்திரமாக "பராசரர் ஸ்மிருதி' என்று எழுதியுள்ளார்.
பகைவர்களிடத்தும் கோபம் கொண்டு எதிரம்பு செலுத்தாமையாலும் பராசரர் எனப்பட்டார். தாயின் கர்ப்பகத்தில் இருந்து மந்திர உச்சாடனம் செய்து வயிற்றை பீறிக் கொண்டு வந்ததாலும் பராசரர் எனப்பட்டார்.
தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணு மூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சிப் பூமியில் புதைத்தார்.
வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவர முயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார்.உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.
புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவாநி கூடலில் உள்ள நதி இதுவாம்.
பராசரர் முனிவர் மகாராஸ்டிர மாநிலத்தில் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. "பன்ஹலா கோட்டை" கோலாபூர் ஜில்லாவில் உள்ளது. அந்தக் கோட்டையில் உள்ள ஒரு குகை பராசரர் வாழ்ந்த இடம் என்று மக்கள் கருதுகின்றனர். இந்தியாவின் புராணங்களால் ஒரு மிகச்சிறந்த முனிவராக போற்றப்படுபவர் பராசரர். பீஷ்மரை அம்பு படுக்கையில் பார்த்தவர்.
பராசரர் ஜோதிட சாஸ்திரத்தை உலகிற்கு அளித்தவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பராசரர் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்