சேது - காட்சி 3 - காலை - INT./ சேது வீடு.
குளோஸ் ஷாட் - ஒரு வீட்டின் வெளிப்புறம். 'எம்.கே.பி. வாசுதேவன், எம்.ஏ.,பி.எல்., மாஜிஸ்ட்ரேட்' என்ற போர்டு மாட்டப்பட்டுள்ளது. பேனிங் டு - வீட்டின் வெளிப்புறத் தோற்றம்.
குளோஸ் ஷாட் - சமையல் கட்டில் சேதுவின் அண்ணி வேலை செய்து கொண்டிருக்கிறாள்.
குளோஸ் ஷாட் - டைனிங் டேபிளில் குழந்தை (சேதுவின் அண்ணன் மகள்) அமர்ந்திருக்கிறது.
குளோஸ் ஷாட் - குழந்தையின் எதிரில் சேதுவின் அண்ணன் (வாசுதேவன்) அமர்ந்திருக்கிறார்.
அண்ணன்: ஏய் எவ்வளவு நேரம்டி... ?
சமையல்கட்டை நோக்கி குரல் கொடுஇக்கிறார். மிட் ஷாட் - அண்ணன், குழந்தை.
அண்ணி குரல் (Overlap): வர்றேன்... வர்றேன்...
குழந்தை: அப்பா... அப்பா... சித்தப்பா இன்னும் தூங்குறான்
அண்ணன்: அவன் கிடக்குறான் சோம்பேறி. நீ சமத்துக்குட்டி.
சமையல் கட்டிலிருந்து டிபன் கொண்டு வருகிறாள் அண்ணி.
அண்ணி: விடிஞ்சதிலேர்ந்து மணிக்கணக்கா பேப்பரும் கையுமா உட்கார்ந்துக்கிட்டு ஒன்பது மணி ஆனவுடனே ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பிச்சிருங்க. நான் கிடந்து ஆலாப் பறக்க வேண்டியிருக்கு... டிபனைப் பறிமாறுகிறாள்.
அண்ணன்: துரை... இன்னும் எந்திரிக்கலையோ... ?
குளோஸ் ஷாட் - சேது மாடியிலிருந்து இறங்கி வருகிறான்.
மிட் ஷாட் -அண்ணன், அண்ணி
அண்ணி : வர்றான்... வர்றான்... ஏதாவது கேக்கணுணமன்னா அவன் சாப்பிட்டு முடிக்கட்டும் அப்புறமாக் கேளுங்க. அண்ணி உள்ளே போகிறாள்.
குளோஸ் ஷாட் - சேது வருகிறான். டைனிங் டேபிளில் உட்காருகிறான். குழந்தையை அடிப்பது போல் பாவனை செய்கிறான். குழந்தை பழிப்புக் காட்டுகிறது. அண்ணன் அவனை முறைக்கிறார்.
குளோஸ் ஷாட் - சேது டேபிளில் தாளம் போட, அவனை எரிச்சலாகப் பார்க்கிறார் அண்ணன். குளோஸ் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடுகிறான்.
சேது : ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி...
குளோஸ் ஷாட் - குழந்தை பேனிங் டு அண்ணன் சேதுவை முறைக்கிறார். குளோஸ் ஷாட் - சேது பாடுகிறான்.
என் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...
மிட் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருக்க அண்ணி டிபனுடன் வருகிறாள். குழந்தை சிரிக்க முயல, கண்களால் அதட்டுகிறாள். அண்ணன் முறைக்கிறார்.
சேது : இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி... என் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...
குளோஸ் ஷாட் - முறைப்புடன் அண்ணன்.
குளோஸ் ஷாட் - அண்ணி அவரைப் பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - அண்ணணின் முறைப்பு.
மிட் ஷாட் - அண்ணி பறிமாற, அண்ணன் சாப்பிட முயல, மறுபடி சத்தமாகப் பாடுகிறான் சேது. அண்ணன் பயந்து சாப்பாட்டை நழுவ விடுகிறார். மனைவியை முறைக்கிறார்.
சாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து... ஏய்... சாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து...
குளோஸ் ஷாட் - குழந்தை
மிட் ஷாட் - சேது பாடியபடி குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுகிறான்.
குழந்தை : ச்சீ... போ... ரெளடி...
அண்ணி : ஏய்... என்ன பேச்சு இது?
எவன்டி இதெல்லாம் உனக்கு சொல்லித் தர்றது? அண்ணி குழந்தையை அதட்டுகிறாள். அண்ணன் குறுக்கிட்டு...
அண்ணன் : குழந்தையை எதுக்கு அதட்டுறே? அவ என்ன தப்பா சொல்லிட்டா... அவன் ரெளடி இல்லையா?
மிட் ஷாட் - சேது : இப்ப என்ன ரெளடித்தனம் பண்ணிட்டோம்?
மிட் ஷாட் - அண்ணன் : ஏய், எகிர்ர வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே, அவகிட்ட வச்சுக்க. என்ற அண்ணன், மனைவியிடம்
நேத்து இவ்வளவு நடந்திருக்கே, கொஞ்சமாவது கவலை இருக்காடி இவனுக்கு... ?
குளோஸ் ஷாட் - சேது : அவன் என்ன பண்ணினான்னு உனக்குத் தெரியுமா?
மிட் ஷாட் - அண்ணன் : டேய், தோத்தவன் அப்படித்தாண்டா பண்ணுவான். நீ தான் பொறுமையாப் போகணும்.
குளோஸ் ஷாட் - சேது : அப்படியெல்லாம் உன்னை மாதிரி இருக்க என்னால முடியாது.
மிட் ஷாட் - அண்ணன் : பார்த்தியாடி...?
சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றும் முயற்சியாக டிபனைப் பரிமாறுகிறாள் அண்ணி சேதுவின் தட்டிலும் இட்லியை வைக்கிறாள்.
அண்ணி : சரி, சரி முதல்லே சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம், அவரு சொல்றதும் சரிதாண்டா... நமக்கு என் இந்த வம்பெல்லாம்? தவறி கண்ணுல கிண்ணுலே பட்டிருந்தா என்ன ஆகிறது?
குளோஸ் ஷாட் - சேது : ஏய், நீயும் அவரோட சேர்ந்துகிட்டு... எலெக்ஷன்னா அப்படித்தான் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு ஒதுங்கிப் போனா, காலேஜ்ல என் கெளரவம் என்னாகிறது?
மிட் ஷாட் - அண்ணன் : ஓ... கெளரவம்! அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே? அதை விடு, சேதுன்னு பார்த்துப் பார்த்து எவ்வளவு அழகா பேர் வச்சோம். இப்ப ஏதோ ஒண்ணு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே...
குளோஸ் ஷாட் - குழந்தை : சிய்யான்... சிய்யான்...
மிட் ஷாட் - அண்ணன் : ஆ... சிய்யான். ஏன்டா, அதைக் கேட்கும் போதே நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்கு. காலேஜ்க்கு போனமா படிச்சோம்ன்னு இல்லாமே, சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரியறாரு. கேட்டா கெளரவப் பிரச்சனையாம். இப்போ படிக்கிற மாதிரியா இருக்கான்? அவன் தாடியும் டிரெஸ்சும்...
மிட் ஷாட் - அண்ணி : அப்பப்பா... கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? முதல்ல அவன் சாப்பிட்டு முடிக்கட்டும். அப்புறம் பேசிக்கலாம்.
அண்ணி சேதுவின் அருகில் போகிறாள். இட்லியை அவன் தட்டில் வைக்கிறாள்.
அண்ணன் : இவன் கெட்டதும் இல்லாம இன்னும் மூணு பேர சேர்த்து கெடுத்துக்கிட்டு இருக்கான்.
குளோஸ் ஷாட் - சாப்பிட்டுக் கொண்டிருந்த சேது நிமிர்ந்து அண்ணியை முறைக்கிறான்.
மிட் ஷாட் - அண்ணன் : வை வை. நல்லாத் தின்னுட்டு இன்னும் நாலு பேரை அடிக்கட்டும். கழுதைப்புலி மாதிரி வளர்ந்திருக்கான்...
அண்ணி சட்னியை ஊற்ற, அண்ணன் சொல் பொறுக்காமல் சாப்பாட்டுத் தட்டை விசிறி அடித்துவிட்டு எழுந்து போகிறான் சேது.
அண்ணி : டேய்... டேய்... நில்லுடா... அவனைத் துரத்திக்கொண்டு போகிறாள் அண்ணி. குளோஸ் ஷாட் - அண்ணன்
சேதுவின் குரல்(Overlap) : போ போ... நீயும் உன் புருஷனும் எல்லாத்¨யும் கொட்டிக்கங்க...
குளோஸ் ஷாட் - குழந்தை மிரட்சியுடன் பார்க்கிறது.
மிட் ஷாட் - அண்ணி திரும்பி வந்து வாசுதேவன் அருகில் அமர்கிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - அண்ணன், குளோஸ், குழந்தை, சேதுவின், முறைக்கிறார், இன்னும், அப்புறம், சிய்யான், பாடுகிறான், வாசுதேவன், போகிறாள், குழந்தையை, டேபிளில்